Saturday, October 16, 2010

இவர்கள் பகுத்தறிவுவாதிகள் இல்லையா?


-அருணன்
ராஜராஜன் பற்றி நானும், அயோத்தி தீர்ப்பு சம்பந்தமாக கலைஞர் விடுத்த அறிக் கைகள் பற்றி தோழர் டி.கே.ரங்கராஜனும் தீக் கதிரில் எழுதியிருந்தோம். இவற்றுக்கு பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு ‘எதி ரொலி’ ஏட்டில் திமுகவின் வெளியீட்டுச் செயலாளர் அள்ளித்தெளித்த கோலமாக எழு திய கட்டுரை ஒன்று வெளிவந்திருக்கிறது. இதை முரசொலி ஏடு எடுத்து வெளியிட் டுள்ளது.

வருணாசிரமத்தை வளர்த்தவனே ராஜராஜன் என்று நாம் சொன்னால், இல்லை இல்லை அதை எதிர்த்தவன் அவன் என்று அதில் எழுதியிருக்கிறார். அதற்கு கொடுக்கப் பட்டிருக்கிற ஆதாரமோ சுவையானது. தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தது மூன்று பிராமணர்கள் என்பதைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு தண்டனை தந்தான் ராஜராஜன் என்கிறார். என்ன தண் டனை தெரியுமா? “தண்டனை கடுமை யானது அல்ல. சிரைச்சேதமல்ல. சிகைச் சேதம் செய்து அவர்களுக்கு கொடுக்கப்பட்டி ருந்த இலவச நிலங்களைப் பறித்துக் கொண்டு இராஜராஜன் நாடு கடத்தினான்” என்கிறார்!

உண்மை என்னவென்றால், கொலை யைச் செய்தவர்கள் மூன்று பேர் அல்ல, நான்கு பேர்கள். அவர்களும் சாதாரண பிராம ணக் குடிமக்கள் அல்ல. அரசு நிர்வாகத்தில் உயர்மட்டத்தில் இருந்தவர்கள். பிரபல வரலாற்றாளர் கே.கே.பிள்ளை, அந்த உடை யார்குடிக் கல்வெட்டு பற்றி இப்படிக் கூறு கிறார்- “இக்கொலைக்குக் காரணமானவர் பின்வரும் நால்வர் ஆவர் - சோமன், ரவி தாசனான பஞ்சவன் பிரமாதிராசன், பரமேசு வரனான இருமுடிச் சோழ பிரமாதி ராசன், மலையனூரானான தேவதாசக் கிரமவித்தன். இந்நால்வருள் இருவர் பஞ்சவன் பிரமாதி ராசன், இருமுடிச்சோழ பிரமாதிராசன் என் னும் சிறந்த அரசியல் பட்டம் பெற்றோர் ஆவர். ஆதலின் அவர்கள் அரசாங்க உத்தியோகத் தில் உயர்நிலையில் இருந்தவர் என்பதில் ஐய மில்லை”. ஆக, ஓர் அரண்மனைச் சதியின் காரணமாகப் பட்டத்து இளவரசன் படு கொலை செய்யப்பட்டான்.

இவர்களுக்கு ராஜராஜன் தண்டனை கொடுத்தான் என்பது உண்மையே. ஆனால் கட்டுரையாளரே கூறுவது போல கடுமை யான தண்டனை அல்ல. பட்டத்து இளவர சனைக் கொன்றவர்களுக்கு மரண தண்ட னை அல்லவா கொடுத்திருக்க வேண்டும்? ஏன் கொடுக்கவில்லை? அதற்குள் போக வில்லை கட்டுரையாளர். போனால் தனது வாதமே அடிபட்டுப் போகும் என்பது அவ ருக்குத் தெரியும்.

ஏன் மரணதண்டனை கொடுக்கவில் லை என்றால், அது சாஸ்திர விரோதம். அன் றைய தர்ம சாஸ்திரங்களின்படி கொலையே செய்திருந்தாலும் பிராமணர்களுக்கு மரண தண்டனை தரக்கூடாது. தந்தால் அந்த அர சனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துவிடும். இப்படிப் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். மாமன்னன் ராஜராஜனும் அந்த வருணாசிரம சாஸ்திரங்களின்படியே “நீதி” வழங்கினான்! அதாவது, அவனது நீதி வருணத்துக்கொரு நீதியே! ஆக, பதில் தருகிறோம் எனப் புறப் பட்டு நமது வாதங்களுக்கு மேலும் வலு சேர்த் திருக்கிறார் கட்டுரையாளர். நன்றி! மிக்க நன்றி!

அப்புறம், “சோசலிச சொர்க்கங்களாகிய சோவியத் ரஷ்யாவும் - சீனாவும் தங்களு டைய வரலாற்று காலச் சின்னங்களை இன்னமும் பாதுகாக்கவில்லையா?” என்று கேட்டிருக்கிறார் கட்டுரையாளர். எனது கட்டுரையின் முதல் பகுதியை அவர் படித் தாரா இல்லையா என்று தெரியவில்லை. தஞ் சைக் கோயிலை ஆயிரமாண்டு அதிசயம் என்று நாம் வியந்து ரசிக்கிறோம். அந்தக் காலத்துத் தமிழர்களின் கட்டடக்கலைத் திற மையை, அதற்கான தொழில்நுட்ப ஆற்றலை, மனித உழைப்பை, இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்த ராஜராஜனை பாராட்டியிருக் கிறோம். இந்தக் கலை உன்னதத்தின் ஆயி ரமாண்டு விழாவைக் கொண்டாடுவதில் நமக்கு ஆட்சேபணை இல்லை என்கிறோம்.

ஆனால், இதையும் தாண்டி ராஜராஜனின் முழு ஆட்சி முறையையே - அந்த நிலப்பிர புத்துவ, வருணாசிரம வல்லாண்மை ஆட்சி யையே- மத்திய-மாநில அமைச்சர்கள் பாராட்டியதைத்தான் நம்மால் ஏற்கமுடிய வில்லை என்றோம். அதிலும் தற்போதைய மத்திய - மாநில ஆட்சிகள் ராஜராஜன் ஆட்சி போல நடக்கின்றன எனக் குதூகலித்தது உண்மையில் பெருமைக்குரியதுதானா என யோசிக்கும்படி கூறினோம்.

இல்லை, அதேபாணி நிலப்பிரபுத்துவ ஆட்சிதான் இப்போதும் நடக்கிறது. அப்போது எப்படி தந்தைக்குப் பின்பு தனயர்கள் வந் தார்களோ அப்படித்தான் இப்போதும் தயார்ப் படுத்துகிறோம். ஆகவே ராஜராஜன் - ராஜேந் திரன் காலம் மீண்டும் வந்துவிட்டது, காங்கிர சிலும் அப்படித்தான், திமுகவிலும் அப்படித் தான்! - இப்படிக் கூறுவார்களேயானால் அது அவர்கள் பாடு. மக்கள் விஷயத்தைப் புரிந்து கொள்வார்கள்.

இதிலே திமுகவின் வெளியீட்டுச் செய லாளருக்கு பெரிதும் கோபம் வந்த காரணம், அவரது கட்சி பாஜகவோடு கூட்டுச் சேர்ந்த விஷயத்தைத் தோழர் டி.கே.ரங்கராஜன் நினைவுபடுத்தியது. அது உண்மைதானே? அதை எப்படி மறக்க முடியும்? திமுகவின் தனித்தன்மையாக இருந்த ஒரு விஷயம் அது, மதவெறியையும் வருணாசிரமத்தையும் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ள பாஜகவை எதிர்த்து வந்தது என்பது. அதை யும் கலைஞர் கைவிட்டார். சிறிதும் கூச்ச மின்றி பாஜக கூட்டணிக்குப் போனார். வேறு பல பிராந்தியக் கட்சிகளைப் போல திமுகவும் இப்படிப் போகும் என்பதைக் காட்டினார். மசூதி இடிப்புக் கட்சித் தலைவர் வாஜ்பாயை “ஜென்டில்மேன்” என்று நா நடுங்காமல் பாராட்டினார். அவர் மீதும், அவரது கட்சி மீதும் முற்போக்காளர்களுக்கு இருந்த மரியா தைக்கு பெரும்பங்கம் ஏற்பட்டது.

பெரியார் - அண்ணாவின் இந்துத்துவா எதிர்ப்புக் கோட்பாட்டிற்குச் செய்யப்பட்ட இந்தத் துரோகத்தின் தொடர்ச்சியோ என எண்ணும் வகையில்தான் அயோத்தி தீர்ப்பு பற்றிய கலைஞரின் அறிக்கைகள் இருந்தன. அந்தத் தீர்ப்பு சட்டத்தின்படியானதாக இல்லை, வெறும் நம்பிக்கையின்பாற்பட்ட தாக உள்ளது, இது நியாயமே அல்ல என்று பல வரலாற்றாளர்கள் கருத்து தெரிவித்திருந் தார்கள். இது ஒரு வகைக் கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு என்று வருணித்திருந்தார்கள் சில வழக்கறிஞர்கள். ராமர்சிலை ஒரு நாள் நள்ளிரவில் ரகசியமாக மசூதிக்குள் வைக்கப் பட்டது பற்றியோ, அந்த மசூதி பின்னர் அத் வானி தலைமையில் சங்பரிவாரத்தால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது பற்றியோ அந்தத் தீர்ப்பு கண்டுகொள்ளவேயில்லை. தீர்ப்பு தந்த நீதிபதிகளில் ஒருவர் தீவிர அனுமன் பக்தர் என்று பின்னர் செய்தி வருகிறது!

இப்படியொரு தீர்ப்பை இரு தரப்பாருக்கும் திருப்தியளிக்கக்கூடியது என்று முதலில் அறிக்கை விட்டார் கலைஞர். இப்படிச் சொல்ல எப்படித்தான் மனம் வந்ததோ? அதைப் படித்த நியாய மனம் படைத்தோர் எல்லாம் திடுக்கிட்டுப் போனார்கள். என்ன இது? இவரது அறிக்கை பாஜக அறிக்கை போலவே இருக்கிறதே என்று வேதனைப் பட்டார்கள்.

பிறகு இன்னொரு அறிக்கை விட்டார். அதிலும் இந்தத் தீர்ப்பு வெறும் நம்பிக்கை அடிப்படையிலானதாக இருக்கிறது, ஆகவே உச்சநீதிமன்றத் தீர்ப்பையே எதிர்நோக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக, ராமர் பிறந்த இடம் தெரிந்துவிட்டது என்கிறார்கள், ராஜராஜன் மாண்ட இடம் தெரியவில்லையே என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் கூறியி ருந்தார். பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கிற்கு விலை கூறிய கதை யாக இருந்தது. இதெல்லாம் பாஜக மீது கொண்ட பழைய பாசத்தின் தொடர்ச்சியா என்று கேட்டால் அது எப்படித் தவறாகும்?

யோசித்துப் பாருங்கள். அயோத்தி தீர்ப்பு வந்த உடனேயும் சரி, அதற்குப் பிறகும் சரி, அது பற்றி மிகச் சரியான நிலைபாட்டை எடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அதனுடைய அரசியல் தலைமைக்குழுவின் அறிக்கைகள் நியாயத்தின் உன்னத சாட் சியங்கள், நெறி பிறழாத கோட்பாட்டின் பிரகட னங்கள், மதச்சார்பின்மை எனும் மாண்பை உயர்த்திப் பிடித்த பாட்டாளி வர்க்கத்தின் உருக்குக் கரங்கள். அந்த அறிக்கைகளோடு கலைஞரின் அறிக்கைகளை ஒப்பிட்டுப் பாருங்கள், அவரின் தடுமாற்றம் புரிபடும்.

அயோத்தி தீர்ப்பு விவகாரத்தில் இப்படித் தள்ளாடிவிட்டு, அதைச் சுட்டிக்காட்டினால் மட்டும் கோபம் பொத்துக் கொண்டு வருவதில் அர்த்தமே இல்லை. வாதங்களுக்குச் சரியான பதில் வாதங்களை வைக்க வக்கில்லாமல் போகும் போதெல்லாம் எதிராளி பிறந்த சாதியைச் சொல்லித் திட்டுவது முரசொலி கட்டுரையாளர்களின் வழக்கம். இப்போதும் அதையே செய்திருக்கிறார் திமுகவின் வெளியீட்டுச் செயலாளர். அவரது நாகரீக ‘வெளியீடு’ இவ்வளவுதான்!

வரலாற்று விஷயங்களிலும் சரி, நடப்பு விவகாரங்களிலும் சரி, திமுக வருணாசிரம எதிர்ப்பிலும், மதவெறி எதிர்ப்பிலும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது விருப்பம், விழைவு. பெரியார் - அண்ணா கொள்கை வழிதான் நடக்கிறோம் என்று கலைஞர் அடிக்கடிச் சொல்லிக் கொள்வதா லும் இதை அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. எனவே ஆத்திரம் கொள்ளா மல் நிதானமாகச் சற்றே யோசித்துப் பார்க் கட்டும்.

அப்படியெல்லாம் யோசிப்பார்களா என்பது சந்தேகம்தான். திருச்சி செல்வேந் திரனின் இந்த பதில் கட்டுரையே இப்படித் தான் ஆரம்பமாகிறது - “மாமன்னன் இராஜ ராஜனைப் பார்ப்பனர்களும், பகுத்தறிவுவாதி களும் ஓரணியாய் நின்று தாக்குகிறார்கள்”. அப்படியென்றால் திமுக தலைவர்கள் யார்? இவர்கள் பகுத்தறிவுவாதிகள் இல்லையா? இல்லையென்றால் மெய்யான வரலாறு பற்றி யெல்லாம் இவர்களோடு வாதாடி என்ன பயன்?

No comments:

Post a Comment