Showing posts with label தலித். Show all posts
Showing posts with label தலித். Show all posts

Tuesday, December 14, 2010

அருந்ததியர் வாழ்வும் இலக்கியமும்....






1.
நம்மில் பலரும் தம்மை சாதிமுறைமைக்கு எதிரானவர்களாக நம்பிக் கொள்கிறோம். கருத்தியல் ரீதியாக சாதியத்தை எதிர்க்க முன்வந்திருக்கிற நாம் நடைமுறையில்- சொந்த வாழ்க்கையில்- சாதியத்தைக் கடக்கத் துணிந்திருக்கிறோமா என்று கேள்வியெழுப்பும் நேரம் வந்துவிட்டது. சாதிக்கெதிரான போராட்டம் என்றதும் தொழிற்சங்க நடவடிக்கையைப் போல கூட்டாக சேர்ந்து ஆர்ப்பாட்டமோ உண்ணாவிரதமோ நடத்தி சாதியை ஒழித்துவிடலாம் என்று நினைப்பது அறிவுக்கொவ்வாத அணுகுமுறை. தமக்குள் இருக்கிற சாதிய சிந்தனைகள் குறித்து குற்றவுணர்ச்சி கொள்வது, அச்சிந்தனைகளிலிருந்து விடுபடுவது, சகமனிதரிடம் தீண்டாமை பாராட்டாமல் இருப்பது, எல்லா நிலைகளிலும் சாதியை மறுப்பது, சாதிய ஒடுக்குமுறைகள் நிகழ்கிறபோது தன்னொத்தவர்களோடு இணைந்து போராடுவது- என தனிப்பட்ட வாழ்வில் சாதியத்திற்கெதிரான போராட்டம் மலைப்பூட்டும் வகையில் பெரும் சவாலாக நம்முன் நிற்கிறது.
எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஒட்டடையடித்து விடலாம் என்று நினைப்பதைபோல, ஒருவார காலம் விடுப்பெடுத்துக்கொண்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சமத்துவத்திற்காகப் போராடுவதென்பது நமது இயக்கத்தின் கொள்கையாக மட்டுமில்லாமல் நமது வாழ்வியல் நெறியாக- நமக்குள்ளிருக்கும் இயல்பானதொரு உணர்வாக மாறவேண்டியுள்ளது. 
நமக்குள் நிகழ்த்திக்கொள்ள வேண்டிய இந்த உள்முகப் பயணத்திற்கு உதவும் பொருட்டே இந்த கருத்தரங்கம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சுவாரஸ்யமான சொற்பொழிவின் பெயரால் எல்லாப் பேச்சுக்களையும் ‘செவியின்பமாகவோ, செவிக்குணவாகவோ’ சுருக்கிப் புரிந்துகொள்ளும் போக்கு மிகவும் அபாயகரமானது. நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்கக்கூடியது. எனவே ஒரு தீவிரமான உரையாடலுக்கும் விவாதத்திற்குமாக நமது சந்திப்புகளை மறுகட்டமைப்பு செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.
2.
கலை இலக்கியம் என்பவை மனிதமனத்தின் வெளிப்பாடுகள். மனிதமனமோ சமூகத்தின் விளைபொருள். இந்த விளைபொருளுக்கான நிலமாகவும் விதையாகவும் உரமாகவும் சமூகச்சூழலே இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள சிலருக்குத் தயக்கம் இருக்கிறது. எதன் சாயலும் படியாத ஒரிஜனல் சரக்கு என்று தமது சிந்தனைகளையும் அதிலிருந்து பிறக்கிற படைப்புகளையும் உருவகித்து வைத்திருக்கும் ‘சுயம்புகளான’ இவர்களுக்கு, அவை சமூகத்தின் விளைபொருள் என்று ஒப்பமுடியாமல் போவது இயல்பானதுதான். ஆனால் இப்படி ஒவ்வாமை கொள்கிறவர்கள் நடைமுறையில் தங்களது மறுப்பை நிறுவ எந்தவொரு சான்றாதாரத்தையும் முன்வைக்க முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.
சமூகம் என்கிற பெரும்பரப்புக்குள் தான் யார்? அந்த பெரும்பரப்பு தனக்குள் எவ்வாறு வினையாற்றுகிறது? சகமனிதரோடு தனக்கிருக்கும் உறவு சமத்துவமானதா? மேல்கீழ் படிநிலை கொண்டதா? அசமத்துவம் நிலவுகிறதென்றால் அதற்கான அடிப்படை என்ன? அந்த அசமத்துவத்தை ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்கவும் எதிர்க்கவும் உள்ள நியாயங்கள் என்னென்ன என்று மனித மனம் ஓயாமல் தனக்குள் ஓர் உள்முகத்தேடலை நடத்திக் கொண்டேயிருக்கிறது. இந்தத் தேடல் குறித்த பதிவுகளே கலை இலக்கியப் படைப்புகளாக வெளிப்படுவதாகக் கருதுகிறேன்.
அப்படியானால் கலை இலக்கியம் குறித்த மதிப்பீடானது இந்த சமூகத்தைப் பற்றிய மதிப்பீட்டுக்கு நம்மை தவிர்க்கவியலாமல் இட்டுச்செல்கிறது. எனவே இங்கு சமூகம் என்னவாக இருக்கிறது என்பதிலிருந்தே எல்லாவற்றையும் தொடங்க வேண்டியிருக்கிறது.
இந்தியச் சமூகம் ஒன்றாக இல்லை. அது தீண்டப்படுவோர் இந்தியாவாகவும் தீண்டப்படாதோரின் இந்தியாவாகவும் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. பிரிந்திருக்கிறது என்றால் - அது வெறுமனே நிலவியல் ரீதியாக மட்டுமில்லாமல், வாழ்வின் எல்லா அம்சங்களிலும் இணக்கம் காணமுடியாதபடி பிரிந்திருக்கிறது. இந்தப் பிரிவினையை - இடைவெளியை இட்டுநிரப்ப எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளையும் உள்வாங்கிச் செரித்துவிட்டு காலத்திற்கேற்ற ரூபங்களில் மீண்டும் மீண்டும் நீடித்து நிற்பதாயிருக்கிறது இந்தப் பிரிவினை என்று அம்பேத்கருக்கும் முன்பிருந்தே சொல்லப்பட்டு வருகிறது.
தீட்டு-புனிதம், நல்லது-கெட்டது, உயர்வு-தாழ்வு என்பதற்கான விளக்கங்கள் மாறிக்கொண்டே வந்தாலும் ஒவ்வொரு காலத்திலும் ஏதோ ஒன்று புனிதமாக- நல்லதாக- உயர்வாக கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிற நிலையில் மாற்றமேதுமில்லை. எனவேதான் தீண்டாமையும் ஒடுக்குமுறையும் நீடிக்கிறது. நிலவும் இந்த உண்மைக்கு யார் அல்லது எது மூலகாரணமாய் அமைந்திருக்கக்கூடும் என்று தேடப் புகுந்தால் அது ஆதிக்க சாதியினரை குற்றம் சாட்டக்கூடும் என்ற பதற்றத்தில் இந்தியாவை ஒரே நாடாக - ஒன்றுபட்டு வாழும் ஒரு சமூகமாக முன்னிறுத்துகிற மோசடி நடந்துவருகிறது. இந்த மோசடிக்கு சற்றும் குறையாததுதான் மொழிவழி தேசியமும்.
ஆகவே இந்திய, தமிழ்ச்சமூகத்தின் மனநிலை நெடுங்காலமாகவே ஒடுக்குகிற அல்லது ஒடுங்குகிற நிலைக்குதான் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. சகமனிதனை சமமாக கருதுகிற மேன்மையான குணம் அதற்குத் தெரியாத ஒன்று. சமத்துவவுணர்வை ஒருபோதும் துய்த்திராத அந்த மனம்- அதனாலேயே சுதந்திரவுணர்வையும் துய்க்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. தத்தமது சாதியின் புனிதத்தைக் காப்பாற்றும் பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்புகளிலும் தலையாயதாய் நிறுவப்பட்டிருப்பதால் எப்போதும் ஒரு தற்காப்பு மனநிலையிலேயே வாழ வேண்டியராயிருக்கிறார். சற்று அயர்ந்தாலும் மோசம் போய்விடுவோம் என்ற பீதியில் உறைந்துகிடக்கும் ஒருவரது மனநிலை அழுத்தம் தாளாது நிலைபிறழ்ந்து தம்மைச் சுற்றி பாதுகாப்பு அரண்களை நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மாற்றாரைத் தடுக்க அமைக்கப்பட்ட இந்த தடுப்பரணுக்குள் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு தனிமனிதரும் ஒரு கைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதுதான் இன்றைய நிலை.
எனவே இந்திய- தமிழ்ச் சமூகத்தின் மனம், பாரபட்சங்களையும் புறக்கணிப்பையும் அநீதியாக பார்ப்பதற்குத் துணிவதில்லை. அம்மாதிரியான அநீதிகளை இயல்பானதாக ஏற்றுக்கொள்வதும் அதை சகமனிதர்மீது நிகழ்த்திப் பார்க்கத் துணிவதாயுமே இருக்கிறது. அசமத்துவத்தை, ஒடுக்குமுறையை இயல்பானதாக ஏற்றுக்கொள்கிற இந்த மனநிலைதான் - சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகிற- அதன் காரணமாகவே அரசியல், பொருளாதார, பண்பாட்டுத்தளங்களிலும் ஒடுக்கப்படுகிற- தலித்துகளையும்கூட, தமக்குள் உட்சாதிப் பிளவுகளை பேணுவதிலும் தம்வீட்டுப் பெண்களை ஒடுக்குவதிலும், இழிவாக- தம்மிலும் கீழானவர்களாகக் கருதுவதற்கு நெட்டித்தள்ளுகிறது.
இந்தப் பின்புலத்தோடு கலைஇலக்கியத்தை மதிப்பீடு செய்யப் புகுந்தால் அங்கும் அசமத்துவமான பிரதிநிதித்துவமும், வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஊடாடி வழிநடத்தும் சாதிய/ பால்நிலைச் சாய்மானமும் வெளிப்பட்டிருப்பதை உணரமுடியும். நிலவும் ஏற்றத்தாழ்வான நிலைகளை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொண்ட ஒரு சமூகத்தின் அங்கத்தினராய் இருக்கிற ஒருவர் தம் வாழ்வியல் அனுபவங்களிலிருந்து எதை- ஏன்- எப்படி- எதற்காக வெளிப்படுத்த முன்வருகிறார் என்ற தொடக்கப் புள்ளியிலேயே அவரது சாய்மானமும் உள்ளுறையாக இணைந்துவிடுகிறது. தன் படைப்புமனதை வெளிப்படுத்த அவர் வாய்மொழி மரபைத் தெரிவு செய்கிறாரா அல்லது எழுத்துவழியாக வெளிப்படுத்துகிறாரா என்பதிலும்கூட அவரது சாய்மானம் இணைந்தே இருக்கிறது. அதாவது இந்த நாட்டில் கல்வி கற்கும் உரிமை யாருக்கு எப்போது கிடைத்தது அல்லது கிடைக்கவில்லை என்பதோடு அது தொடர்புடையதாய் அமைகிறது.
ஆனால் இப்படி சொல்கிறபோது சிலர் ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் தவ்விக் குதிக்கிறார்கள். இலக்கியமும் கலைகளும் எல்லோருக்கும் பொதுவானது என்று கழுத்துநரம்பு புடைக்க கர்ஜிக்கிறார்கள். அப்படி இருந்தால் சரிதான் நண்பர்களே. ஆனால் இல்லை என்பதுதானே எதார்த்தம்? நிலம் நீர் காற்று ஆகாயம் பணம் காசு பண்டம் அனைத்தையும் சாதிப்பாஷாணத்தில் தோய்த்து தொங்கவிட்டிருக்கிற இந்த சமூகத்தில் இலக்கியம் மட்டும் எப்படி எல்லோருக்கும் பொதுவாய் இருக்கமுடியும் என்ற எளிய கேள்விக்கு இவர்களிடம் பதிலில்லை. இளமையில் கல் என்ற அவ்வையின் மரபும், எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்ற வள்ளுவர் மரபும் அழித்தொழிக்கப்பட்டு கற்கும் உரிமையை சில சாதிகளின் ஆண்களுக்கு மட்டுமே வார்த்துக்கொடுக்கும் நிலை உருவாகி நிலைத்து நின்றுவிட்ட இச்சமூகத்தில் கல்வியோடு மிகநேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் கலையும் இலக்கியமும் எல்லாவற்றிலிருந்தும் விலகி சுயம்புவாக எப்படி வெளிப்பட முடியும்?
மொழி எல்லோருக்கும் பொதுவென்றால் ஏன் சமஸ்கிருதம் மட்டும் தேவபாஷையாக அறிவிக்கப்பட்டது? நமஸ்காரம் என்ற சமஸ்கிருதச் சொல்லை பொற்கொல்லர்கள் உச்சரிக்கக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசிடம் மனுபோட்டு தடையுத்தரவு பெறப்பட்டது எதனால்? இழிசனர் வழக்கென்ற பதம் எதன்பொருட்டு உருவானது? இசை புனிதமென்றால் இசைக்கருவிகளும் புனிதம்தானே? எனில் ஏன் திருவையாற்றில் ‘நன்னா வாசிக்கிறவாள்’ ஒருத்தரும் பறையைத் தொடுவதில்லை? இந்தியாவின் தமிழகத்தின் செவ்வியல் மரபின் கலை வடிவங்களாக முன்னிறுத்தப்படுபவை எந்த சாதிக்குரியவை? கலாச்சாரப் பரிவர்த்தனைகளின் பெயரால் இந்தியாவிலிருந்து பிறநாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறவை இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்குரியவையா? பார்ப்பனர்களின் அனைத்தும் பார்ப்பனர்களின் கைச்சரக்குகள் அனைத்தும் தேசிய கலைவடிவங்களாக அந்தஸ்துப்படுத்தப்படுவதும், பார்ப்பனரல்லாதவர்களின் கலைவடிவங்களை ‘எதினிக்’ அல்லது‘ ‘ஃபோ(ல்)க்’ என்றோ வகைப்படுத்தப்படுவதும் தற்செயலான நிகழ்வுகளா?
இப்படி எல்லாமே சாதியாகத்தான் இருக்கிறது. இதற்குள் இருக்கிற படைப்பாளியும் சாதிவயப்பட்டவராகவே இருக்கிறார். அவர் அறிந்தவற்றை தன் படைப்பாக வெளிப்படுத்துகிறார் என்றால் அவர் அறிந்திருப்பதெல்லாம் அவரது சாதி கற்றுக் கொடுத்ததைத்தான். அவரவர் சாதி அவரவருக்கு விதித்த வரம்புகளை மீறி எழுதவும் பேசவும் ஒருவர் இயல்பாக முயற்சிப்பதில்லை. (மிகுந்த அரசியல் விருப்புறுதி கொண்ட விதிவிலக்கான சிலரை இங்கே பொருட்படுத்தி பேசவேண்டியிருந்தாலும் அவர்கள் மிகவும் சொற்பமானவர்கள் என்றே குறித்துக்கொள்ள வேண்டும்.)
தன் சாதி பிறரை என்னவாகப் பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருக்கிறதோ அந்த பொதுப்புத்தியிலிருந்து தன்னை ரத்தம் சொட்டச் சொட்ட அறுத்துக்கொண்டு வெளியேறாமல்- அப்படி அறுத்துக்கொள்ளும்போது ஏற்படும் வலியையும் வாதையையும் வாய்விட்டுக் கதறி வெளிப்படுத்தத் துணியாமல்- நிலவும் சூழலை நியாயப்படுத்துகிற ஒருவரிடமிருந்து- அவர் கொம்பாதி கொம்பு படைப்பாளியாயிருந்தாலும் அவரிடமிருந்து வெளிப்படுகிற படைப்புகளை- அவை எத்தனை உன்னதமானதென்று உலகம் கொண்டாடினாலும் - அவை காகிதத்திற்குக் கேடானது என்பதே என் கருத்து.
எனவே இதுவரையான கலைஇலக்கியப் படைப்புகளை வாசிப்புக்கு உட்படுத்துகிற ஒரு தலித் மனம் அவற்றை தன் அகநிலை சார்ந்தே அணுகுகிறது. அவற்றில் சித்தரிக்கப்பட்டுள்ள வாழ்க்கை எவருடையது? அதில் தலித்துகள் இடம் பெற்றிருக்கிறார்களா இல்லையா? இடம் பெற்றுள்ளனர் என்றால் எவ்வாறு? என்றெல்லாம் அது படைப்புகளை பரிசீலிக்கிறது. பொத்தாம்பொதுவானதென்று நீங்கள் அறிவித்துக் கொண்ட எல்லாமே போலியானவை. அவை உங்கள் சாதிப் பெருமிதங்களை- சகமனிதரை ஒடுக்குவதற்கான நியாயங்களை- ஒடுங்கிக்கிடக்க வேண்டியதன் அவசியத்தைப் போதிக்கவே கைக்கூலிச் சரக்குகளாக சந்தைக்கு வந்துள்ளன என்று கடைசியில் அறிவிக்க வேண்டியதாயிற்று. இப்படி உருவானதுதான் தலித் விமர்சன மரபு.
3.
இதுவரையான கலைஇலக்கியங்கள் மீதான விமர்சனத்தோடு தலித் மனம் நிறைவடைந்துவிடவில்லை. அது தன் சொந்த வாழ்க்கையை தன் சொந்த மொழியில் படைக்கத் தொடங்கியது. எழுத்தறியும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தாலும், வாய்மொழி மரபிலும் நிகழ்த்துக்கலைகளிலும் தமது வளமார்ந்த படைப்புமனத்தை தக்கவைத்துக் கொண்டிருந்த தலித்துகளிடமிருந்து வெளிப்பட்ட படைப்புகள் இதுவரை இந்திய சமூகத்தின் வாசகப்பரப்பு அறியாதவை. வாய்மொழி மரபும் எழுத்துமரபும் இணைந்த - கூகி வாங் தியாங்கோ சொல்கிற ‘ஓரேச்சர்’ மாதிரியான ஒரு புதுவகைமையான தலித் படைப்புகளில் புதைந்திருந்த உலகமும் அதை வெளிப்படுத்திய மொழியும் திடுமென எங்கிருந்தோ உதித்த அல்லது குதித்த மாந்திரீக வஸ்துவல்ல. ரவிதாசர், சொக்கமேளா, ஜோதிராவ் பூலே, டேனியல் என்று சாதியடுக்குமுறைக்கு எதிரான ஒரு நீண்ட பாரம்பரியத்தில் உருவாகி அது வளர்ந்திருக்கிறது.
உண்மையில் தலித்துகள் புதிதாக எதையும் படைக்கவில்லை. தங்களது வாழ்வை பாசாங்கின்றி வெளிப்படுத்துகிறார்கள், அவ்வளவுதான். தீட்டு தோஷம் என்கிற கெடுங்குணங்களால் வழிநடத்தப்படும் சாதிய மனம் தலித்துகளின் வாழ்வை அருகிருந்து நேரில் பார்க்கத் தவறிவிட்டது இத்தனைக் காலமும். இப்போது இலக்கியப் படைப்புகள் வழியே தரிசிக்கிறபோது புதியனவாக அவை தெரிவதில் வியப்பொன்றுமில்லை. இவ்வளவு காலமும் எட்டிப் பார்க்காமல் இருந்த தன் சாதியமனம் குறித்து குற்றவுணர்வு கொள்வதற்குப் பதிலாக, இலக்கியத்திற்குள் சாதியா? இலக்கியத்தில் இடஒதுக்கீடா? என்று பொருமத் தொடங்கினார்கள். மராட்டியத்தில் தொடங்கிய இந்த பொருமல் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
தலித் இலக்கியம் என்று ஒன்று இருந்தால், மற்ற ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியாக இலக்கியம் இருக்கிறதா என்று அப்போது ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மிகுந்த பொறுப்புணர்வோடு தலித் இலக்கியத்தின் முன்னோடிகள் பாகுராவ் பாகுல், அர்ஜூன் டாங்ளே போன்றவர்கள் பதிலளித்துவிட்டார்கள். தலித் இலக்கியம் என்பது என்ன, தனியாக அது உருவாக வேண்டிய அவசியம் என்ன வந்தது, தலித் இலக்கியத்தின் நோக்கம் எவையெவை என்றெல்லாம் ஒருபாடு விளக்கம் கொடுக்கப்பட்டாகிவிட்டது அப்போதே. ஆனால் நாற்பது வருடத்துக்கு முந்தைய அரதப் பழசான அந்த கேள்விகளைத் தூக்கிக்கொண்டு - அவை புத்தம்புதிதாக தம் சொந்த மூளையில் (இப்பகுதி நகைச்சுவைக்கானதல்ல) உதித்தவை என்ற பாவனையோடு இன்றும் சிலர் ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ’ என்று முதல் மரியாதை வீராசாமிபோல அலைந்தால் நாமென்ன செய்வது? ஆனாலும் இந்தக் கேள்வியை தூக்கிக்கொண்டு திரிய இமையம், சோ.தருமன் போன்று யாராவது 2008லும் இருக்கத்தான் செய்கிறார்கள். பாவம், சம்பளம் இல்லாத போர்ட்டர்கள்.
இன்னும் சா.கந்தசாமி வெளிப்படையாகவே கேட்கிறார்- தலித் இலக்கியம்னு ஒன்னு இருந்தா செட்டியார் இலக்கியம்னு, நாடார் இலக்கியம்னு, வெள்ளாளர் இலக்கியம்னு இருக்குதா? என்று. அய்யா சாதி கடந்த சமத்துவத் திலகமே, நீங்களெல்லாம் சேர்ந்து இலக்கியத்தை அந்த லட்சணத்தில்தான் சாதிவாரியாக சீரழித்து வைத்திருக்கிறீர்கள், அதை அம்பலப்படுத்தி சரிப்படுத்தத்தான் தலித் இலக்கியம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது என்று நாம் மெத்தப் பணிவோடு சொல்ல வேண்டியிருக்கிறது.
சாதியடுக்குமுறைக்கு பணிந்துபோவது, சாதியடுக்குமுறையை எதிர்த்து நிற்பது என்ற இருவகைப் பண்புகள் தலித்தகளிடம் காணப்படுகிறது. அதில் பணிந்துபோகும் குணத்தை வலியுறுத்தவே தலித்தல்லாதவர்களது படைப்பின் நோக்கமாய் இருந்துவருகிறது. ஆனால் தலித்துகளின் மீறல் குணத்தை மேலும் வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டதே அசலான தலித் படைப்புகள். உடலுழைப்பை இழிவாய் எண்ணும் ஆதிக்கசாதி மனோபாவத்தை வெளிப்படுத்துவது பிறரது படைப்புகளென்றால், உழைக்கும் மக்களாகிய தலித்துகளின் படைப்புகள் உழைப்பைக் கொண்டாடுவதாய் இருக்கும்.
4.
பொத்தாம் பொதுவான இலக்கியம் என்கிற மோசடியை அம்பலப்படுத்தி தனித்துவமான அழகியலையும் உட்பொருளையும் வடிவஒழுங்கையும் நிறுவிக் கொண்டுள்ள தலித் இலக்கியம் உள்வயமான சில கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது இந்தியாவில் இருக்கிற 1088 தலித் சாதிகளின் - அல்லது தமிழ்நாட்டிலிருக்கிற 77 சாதிகளின் குரலையும் பிரதிநிதித்துவம் செய்கிறதா? ஆம் என்றால், எவ்வாறு? இல்லையென்றால், ஏன்? இப்படிக் கேட்டதுமே, தலித் என்றால் தலித்து தான், இதில் என்ன பறையன் பள்ளன் சக்கிலி என்ற பாகுபாடு? என்று சாமார்த்தியமாக எதிர்கேள்வி வைக்கப்படுகிறது. இது சமதர்மி சா.கந்தசாமியிடம் இரவல் பெற்ற குரல்தான். (ஒருவேளை, இதைத்தான் சிலர் கூடுவிட்டு கூடுபாய்தல் என்கிறார்களோ?) அல்லது, இலக்கியத்தின் புனிதத்தைக் கெடுத்துவிடாதீர்கள் என்ற இலக்கிய உபாசகர்கள் வெற்றிலைக்காம்பை கிள்ளிக்கொண்டே வைத்த கோரிக்கையின் மறுபிரதிதான்.
இந்தியர் என்ற பேரடையாளத்தின் பலன்கள் பார்ப்பனர்களுக்கும், தமிழர் என்ற பேரடையாளம் பார்ப்பனரல்லாத உயர்சாதியினருக்கும் பயன்பட்டதைப்போல தலித் என்ற அடையாளத்தின் பலன்கள் ஒருசில தலித் சாதிகளுக்கு மட்டுமே கிடைத்துக்
கொண்டிருக்கிறதா? என்று சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் எழும் இந்தக் கேள்விக்கான பதில், தலித் இலக்கியத்திற்கும் பொருந்தும். உண்மையில் தலித் இலக்கியம் என்ற பெயரால் வெளிப்படும் வாழ்வு எவருடையது என்ற கேள்வியானது, வெளியை ஜனநாயகப்படுத்துவதை உட்கிடக்கையாகக் கொண்டது. அதாவது, அசமத்துமான சமூகச்சூழலை சமத்துவமுடையதாய் மாற்றியமைப்பதை நோக்கமாய் கொண்டுள்ள தலித் இலக்கியமும் தலித் இயக்கமும், தாமேயொரு முன்னுதாரணமாய் மாறிக் காட்ட வேண்டியுள்ளது. தலித் என்ற பொது அடையாளத்தை மெய்யாகவே தமது பொது அடையாளமாக தலித்துகள் அனைவரும் உணரும்படியாக செயல்வழியே நிறுவ வேண்டியுள்ளது. அதன்பொருட்டு அது தனக்குள்ளிருக்கும் உள்முரண்களை தீர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. (தீர்த்துக்கட்டுவதல்ல)
5.
தலித்துகளில் மிகவும் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் அருந்ததியர்களது வாழ்வுரிமையானது எல்லா முனைகளிலும் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது. கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, விவசாயப் பணிகளில் ஈடுபடுவது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல்பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம்- பம்புசெட்- பிளாஸ்டிக்- ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல்தொழிலை இழந்து மலமள்ளுகிறவர்களாகவும் துப்புரவுப் பணியாளர்களாகவும் சீரழிக்கப்பட்டுள்ளார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், தலித்துகளை ஈடேற்றியதாய் சொல்லிக் கொண்டிருக்கும் சிலர், அருந்தியர்களை மலமள்ளிகளாக மாற்றியது அந்த ஆட்சிதான் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
நவீன விஞ்ஞான தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்ட நிலையிலும் கையால் மலமள்ளும் கொடுமையிலிருந்து அருந்ததியர்களை விடுவிப்பதற்கான தொழில்நுட்பங்கள் இங்கே வர மறுக்கின்றன. 1993ம் ஆண்டிலேயே, கையால் மலமள்ளுதல் தடை செய்யப்பட்டுவிட்டாலும், இன்னும் 13 லட்சம்பேர் இத்தொழிலில் பலவந்தமாய் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அருந்ததியர்களுக்கு கல்வியளித்து ஆற்றல்படுத்தும் முயற்சி 1920களிலேயே திரு.எல்.சி.குருசாமி போன்றவர்களால் தொடங்கப்பட்டிருந்தாலும் அந்த நோக்கு எட்டப்படாததாகவே இருக்கிறது. இந்த நிலையில்தான் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வால்மீகி பஞ்சாயத் என்ற அமைப்பின் கோரிக்கையாகத் தோன்றி பின் நாடெங்கும் பரவியது இம்முழக்கம். பஞ்சாபில் 1975 ஆம் ஆண்டிலிருந்தும், தொடர்ந்து அரியானாவிலும், 01.04.2000 முதல் ஆந்திரத்திலும் இந்த உள் ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆதிக்கசாதிகள் என்னென்ன வாதங்களை முன்வைப்பார்களோ அதே வாதங்களை இரவல் வாங்கி ஆந்திரத்து மாலாக்கள் வழக்காடினர். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஆந்திரத்தில் மட்டுமல்லாது அதற்கும் முன்பாகவே அமலில் இருந்த பஞ்சாப், அரியானாவையும் பாதித்தது. இப்படியாக 5.11.2004 உடன் உள்ஒதுக்கீடு கோரிக்கை முடிவுக்கு வந்துவிட்டது போலத் தோன்றுகிறது.
ஆனால் உள்ஒதுக்கீடு என்பது அருந்ததியர்களின் மிக அடிப்படையான கோரிக்கை. அதை நீதிமன்ற அல்லது சட்டவிளக்கங்கள் வழியாக புரிந்துகொள்ள முடியாது. சமூகநீதி, பாரபட்சமான நியாயம் என்ற அரசியல் நிலைபாட்டிலிருந்தே விளங்கிக் கொள்ள முடியும். தவிரவும் இது சாத்தியம் தான் என்பதற்கு குஜ்ஜார் மக்களின் போராட்டமும் இப்போது அவர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதும் சமீபத்திய உதாரணங்கள். தமிழகத்தில் ஓபிசி இடஒதுக்கீட்டில் எம்பிசி என்று புதிதாக வகைப்படுத்தி 20 சதவீதம் உள் ஒதுக்கீடு பெற்ற முன்னுதாரணம் இருக்கிறது.
ஓபிசிக்குள் சாத்தியம் என்றால் தலித்துகளுக்குள்ளும் சாத்தியம்தான் என்ற புரிதலில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது தேர்தல் அறிக்கையொன்றில் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆதரித்திருந்தது. ஆனாலும் அது தன் நிலைபாட்டில் உறுதியாயில்லை. புதிய தமிழகம் போலவே விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் உள் ஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. சமூக வளங்களை தலித்துகளுடன் பகிர்ந்துகொள்ள மறுக்கிற ஆதிக்கசாதி மனோபாவத்தை இந்த அமைப்புகள் கைவிட வேண்டும் எனபது என் விருப்பம்.
6.
மனித மாண்புகளுடன் வாழ்வதில் பேரார்வம் கொண்டிருக்கிற அருந்ததிய மக்களை தமிழிலக்கியம் பெரிதாக கவனப்படுத்திவிடவில்லை. ஒருசில படைப்புகளிலும் அவர்கள் இழிவாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ‘ஒரு மனிதன் தன் வயிற்றைச் சுத்தம் செய்ய மலம் கழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் மலத்தை சுத்தப்படுத்தி வயிற்றை நிரப்பவேண்டிய கொடுமை அருந்ததியர்களுக்கு நேர்ந்திருக்கிறது’ என்ற தோழர்.ஜக்கையனின் துயரம் பொங்கும் வார்த்தைகளை உள்வாங்காத இந்த சமூகத்தின் மீது பீயைத்தான் கரைத்து ஊற்ற வேண்டியிருக்கிறது.
- ஆதவன் தீட்சண்யா
(2008 ஜூலை 27 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட மாநாட்டையொட்டி நடைபெற்ற ‘அருந்ததியர் வாழ்வும் இலக்கியமும்’ என்ற கருத்தரங்கின் தலைமையுரை) 

Saturday, December 11, 2010

தோளோடுதோள் நிற்கவேண்டியவர்கள் வாள் எடுத்து வீசலாமா?

வெ.சுந்தரம்
 
அம்பேத்கர் படிப்பு வட்டம், மதுரை மற்றும் ஏப்ரல் 14 வ.புதுப்பட்டி இணைந்து வெளியிட்டிருக்கும் நூல் “போராளி எனும் அதிகாரம்”( உத்தப்புரம் குறித்த தலித் தரப்பு பதிவுகளும் விவாதங்களும்).


உத்தப்புரம் குறித்தது என்பதால் ஆர்வத்தோடு நூலை வாங்கிப் படித்தபோது மிகவும் வருத்தமும் ஏமாற்றமும் அடைய நேரிட்டது. மார்க்சிஸ்ட் கட்சியுடன் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உத்தப்புரம் பிரச்சனையில் ஒன்றுபட்டு நிற்க வேண்டியவர்கள் ஏன் இந்த அளவு கட்சி மீதும், தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்தி யுள்ளனர் என்று வியப்பு ஏற்பட்டது.

உத்தப்புரம் சுவர் இடிப்பு நிகழ்ந்தது 6 மே 2008. அதையொட்டி ஜூலை 2008 வரை எழுதப்பட்ட தலித் முரசு தலையங்கம், தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளி வந்த சு.ரவிக்குமார், சுகிர்த ராணி, அழகிய பெரியவன் ஆகியோரின் கட்டுரைகள், காலச்சுவடில் வெளிவந்த தி.ஸ்டாலின் கட்டுரை முதலில் இடம் பெற்றுள்ளன. 66 பக்கங்கள் கொண்ட நூலில் கடைசி 3 பக்கங்கள் சிபிஎம் கம்பம் கிளைச்செயலாளர் கடிதம் பின் இணைப்பாக உள்ளது. மேலே குறிப்பிட்ட கட்டுரைகள் 19 பக்கங்கள் மட்டுமே. மீதமுள்ள 33 பக்கங்கள் நூலுக்காக யாழன் ஆதி, அ.ஜெகநாதன், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளன. 2008 மே மாதம் நிகழ்ந்த நிகழ்வு பற்றி உடன்வினையாற்றி எழுதப்பட்ட கட்டுரைகளோடு இந்த மூவரும் தற்போது எழுதிய கட்டுரைகளை இணைத்து 2010ல் வெளியிட்டிருப்பது ஏன்? நூலைப் படித்தபோது இவர்களின் நோக்கம் தெளிவாகிவிட்டது.
சமீப காலமாக மார்க்சிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தீண்டாமைக்கு எதிராகப் போராடி வருவதை அங்கீகரிக்க இவர்களுக்கு மனமில்லை. இணைந்து நின்று போராட விருப்பமில்லை. போகட்டும். அவதூறு பொழிய வேண்டுமா?

எழுப்பப்பட்ட கேள்விகள், கருத்துக்கள், தாக்குதல்கள், அவதூறுகள் ஒரு நீண்ட பட்டியல். அவற்றில் சில-
“உத்தப்புரம் சுவர் பிரச்சனையில் தலையிட்டதன் மூலம் சாதி ஒழிப்பில் எவரையும் விட தாம் முன்னுக்கு வந்து விட்டதாக மார்க்சிஸ்ட்டுகள் தீர்மானித்து விட்டனர்”. இதுதான் நூலின் துவக்க வரிகள்.

“கண்ணுக்குப் புலப்படுகிற சாதிய வடிவத் தினை மட்டும் தாக்குதல் தொடுப்பது பிரபலத்தை தேடும் யுக்தியாகும்.” (பக்கம் 5)
“தலித்துகளின் அரசியல் எழுச்சி தங்களிடம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை வெளிப்படை யாக ஏற்கும் மனநிலையோ, கடந்தகாலப் போதா மைகளை ஒத்துக் கொள்ளும் நேர்மையோ அவர் களிடம் இல்லாமல் போய்விட்டது” (பக்கம் 6)
“சாதி ஒழிப்பு என்ற சொல்லாடலைக்கூட பயன்படுத்த முடியவில்லையே? தீண்டாமை ஒழிப்பு என்றுதான் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்” (பக்கம் 30)
“சாதியின் எந்தக் கல்லையும் அகற்றாமல் சுவரின் 16 உடை கற்களை அகற்றியது போதும் என்பது தீர்ப்பாக இருக்குமானால் அது எந்த வகையிலும் போராட்டமாகக் கருத முடியாது.” (பக்கம் 32)
“தலித் இயக்கங்களைத் தீப்பொறி ஆறு முகம் பாணியில் சாடவும் செய்கின்றனர்.” (பக்கம் 48)
“உத்தப்புரத்திற்காக மார்க்சிஸ்ட்டுகளின் பங்கை நாம் ஏற்பது - அரசியல் சார்ந்த அவர்கள் நடத்தும் நாடகத்திற்கு நாம் பணிந்து விட்டதாக பொருளாகாது.” (பக்கம் 54)
இவை சில உதாரணங்கள் மட்டுமே .
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் விடுதலை போராட்ட காலத்திலேயே பூரண சுதந்திரம் வேண்டும். விடுதலை பெற்ற இந்தியாவில் நிலப் பிரபுத்துவம், சாதிய ஒடுக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற நிலை எடுத்தது (திட்டம் பாரா 1.3)

விடுதலைக்குப்பின் நிலத்திற்கான போராட் டத்தில் முன்னணியில் நின்றவர்கள் கம்யூனிஸ்டு கள். தஞ்சை மண்ணில் நடந்த வீரம் செறிந்த போராட்டங்களுக்குத் தலைமையேற்றதும் கம்யூ னிஸ்டுகளே. அதன் மூலம் பயன்பெற்றவர்கள் நிலமற்ற ஏழை, தலித் விவசாயக் கூலிகளே. தற் போது இடது முன்னணி அரசுகள் மேற்கு வங்கம், கேரளா, திரிபுராவில் நிலச்சீர்த்திருத்தம் செய்து நிலம் வழங்கியிருப்பதும் நிலமற்ற ஏழை தலித் விவசாய கூலிகளுக்கே. முதன் முதலாக கிராமப் பஞ்சாயத்து தலைவர் முதல் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், மேயர் உள்ளிட்ட பதவிகளில் தலித் மற்றும் மலைவாழ் மக்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு அதிகாரம் வழங்கியிருப்பதும் கம்யூனிஸ்டுகளே!
 இருந்தாலும் இந்திய சமூகத்தில் புரை யோடிப் போயிருக்கும் சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை போன்ற சமூக பிரச்சனைகளை எடுத்து போராடுவதில் பலவீனம் இருந்தது. அது களையப் பட்டு தற்போது வீச்சாக இந்த இயக்கங்கள் நடை பெற்று வருகின்றன. அதன் ஒரு வெளிப்பாடுதான் தீண்டாமை ஒழிப்பு முன்னணி. அதன் ஒரு செயல்பாடுதான் உத்தப்புரம். இதை தலித் அமைப்புகள், போராளிகள் வரவேற்க வேண்டாமா?
இதற்கு முன்னால் ஏன் செய்யவில்லை என்று கேட்பதும் போதாமைப் பற்றி பொழுதெல்லாம் பேசுவதும் என்ன பயன் அளிக்கும்.

மாவட்டங்களில் ஆய்வு நடத்தி பல்வேறு தீண்டாமை வடிவங்களை கண்டறிந்து தொடர்ந்து உறுதியுடன் பல கட்ட இயக்கங்களை நடத்துவது பிரபலம் தேடும் யுக்தியா?
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் உடனடி நோக்கம் தீண்டாமையை ஒழிப்பது. சாதி ஒழிப்பு, தொலை நோக்கு இலட்சியம் . 2000 ஆண்டுகளாக மிகத் திறம்பட சாதியம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வர்ணாசிரமத்தை மையமாகக் கொண்டு பிரமிடு வடிவ கட்டமைப்புள்ளது. தனக்கு மேல் எந்த சாதி யும் இருக்கக் கூடாது. ஆனால் தனக்கு கீழ் குறைந்த பட்சம் ஒரு சாதியாவது இருக்க வேண்டும் என மனநிலை உருவாக்கப்பட்டுள்ளது. அகமண முறை, தொழில்வாரி சாதி அமைப்பு என கெட்டிப் பட்டு நிற்கிறது. நிலத்தோடும், பொருளாதாரத் தோடும் பின்னப்பட்டுள்ளது. இதை உடைத் தெறிய ஒன்றுபட வேண்டியவர்கள் செயல்படுபவர்களை அவதூறு செய்வது சாதியை ஒழிக்க எந்த விதத்தில் உதவும்? செயல்பாட்டுக்கு வராமல் கட்டுரைகள் எழுதுவது எதற்குப் பயன்படும்? குற்றம் கண்டுபிடித்தே சாதியை ஒழிக்கும் ரசவாதம் ஏதும் வைத்திருக்கிறீர்களா?

மார்க்சிஸ்ட் கட்சி யைப் பொறுத்தவரை தீண்டாமைப் பிரச்சனைகளில் தலையீடு செய்வதும், வர்க்க ஒற்றுமையைக் கட்டி சமூக மாற்றத்தை உருவாக்குவதும், நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து சாதியை முற்றிலும் வேரறுப்பதும் தனது லட்சியமாகக் கொண்டுள்ளது. இதற்கு மாற்றாக உங்களுடைய நீளமான கட்டுரைகளில் ஏதும் முன் வைக்கவில்லையே? உங்களுடைய கட்டுரைகளில் தீண்டாமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசு களை விமர்சிப்பதைவிட, சாதி ஆதிக்க சக்திகளைத் தாக்குதல் செய்வதைவிட மார்க்சிஸ்ட் கட்சியையும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சம்பத் மற்றும் எழுத்தாளர்கள் சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா ஆகியோர் மீதான தாக்குதல் தான் நிறைந்து கிடக்கிறது.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை சமத்துவப் போராளி என்று குறிப்பிட்ட போஸ்டரை பார்த்ததும் ஆதவன் தீட்சண்யா சிரிப்பு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னணி என்ன? புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உத்தப்புரம் பற்றி என்ன கூறினார்? மார்க்சிஸ்ட் கட்சி தேவையில்லாமல் வன்முறையைத் தூண்டுகிறது. நான் பிள்ளைமார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிப்பேன். அவர்கள் நல்லவர்கள் என்று குறிப் பிட்டார்.

பேரையூருக்கு அம்பேத்கர் பிறந்த தினவிழா பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த திருமாவளவன் உத்தப்புரம் பற்றி விரிவாகப் பேசுவார். ஆதரவு தெரிவிப்பார், நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்த்த உத்தப்புரம் இளைஞர்களுக்கு அவரது பேச்சு ஏமாற்றம் அளித்தது. எனவே அவர்கள் கடும் சொற்களை பயன்படுத்தி திட்டினார்கள் என குறிப்பிட்டுள்ளார். சு.வெங்கடேசன் இந்த நூலில் பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் சாதாரண தொண்டன் சிவப்புத் துண்டு அணிந்து சாதி ஆதிக்க சக்திகளை எதிர்த்து சுத்துப்பட்டு கிராமங்களில் எதிர் நீச்சல் போட்டு அம்பேத்கர் பிறந்த தின பேனர் இல்லாமலே தீண்டாமைக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை அவர் பாணியில் குறிப்பிட்டுள்ளார். அம்பேத்கரை எந்த வகையிலும், அவதூறு செய்வது நோக்கமல்ல. இதனால் வெங்கடேசனும், மார்க்சிஸ்ட் கட்சியும் அம்பேத்கரை மதிக்க வில்லையெனக் குறிப்பிட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி அம்பேத்கரைப் பெரிதும் மதிக்கிறது. அவருடைய பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது. ஆண்டு தோறும் அவரது நினைவு நாளில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து கவுரம் செய்கிறார்கள். இவை யெல்லாம் கட்டுரையாளர்களுக்குத் தெரியாது போலும்.

தோழர் சம்பத்தின் செம்மலர் ஜூலை 2008 பேட்டியை கொச்சைப்படுத்தியுள்ளனர். இடது சாரிகள், தலித் அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளதை ஏற்காமல் “அய்க்கியத்தை விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டுத் தங்கள் வேலைகளைப் பார்க்க போவது ஒருவகை தந்திரம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இதய சுத்தியோடு ஒற்றுமைக்கான அறைகூவலைகூட திரித்துக் கூறுவது சரிதானா?

சமீபத்திய சம்பவங்களைகூடத் திரித்துக் கூறியுள்ளனர். மாவட்டங்களுக்கும் பேருந்து கழகங் களுக்கும் தலைவர்களின் பெயர்கள் சூட்டப் பட்டது. ஆனால் வீரன் சுந்தரலிங்கம் பெயர் சூட்டப்பட்டபோது மட்டும் சாதி ஆதிக்க சக்திகள் அதனை ஏற்கவில்லை. கலவரம் செய்தனர். பஸ்சில் ஏற மறுத்தனர். அப்போது வீரன் சுந்தரலிங்கம் பெயரை வைக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தது மார்க்சிஸ்ட் கட்சி. ஆனால், தமிழக அரசு சமரசம் செய்து அனைத்து பெயர்களையும் நீக்கியது. சாதிய சக்திகளின் நிர்பந்தத்திற்கு அரசு அடிபணிந்தது. இதைத் திரித்துக் கூறி மார்க்சிஸ்ட் கட்சி பெயர் வைப்பதை எதிர்த்தாக எழுதியுள்ளனர்.

தோழர் பிருந்தாகாரத்தின் குங்குமப் பொட்டைக்கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. சுர்ஜித் ஏன் தாடி வைத்தார்?. நம்பூதிரி பாட் என்ற சாதிப் பெயர் எதற்கு? என சிறுபிள்ளைத்தனமாகப் பலரும் கேட்டு பதில் சொன்ன விசயத்தை புதிய வடிவில் இவர்களும் கேட்டுள்ளனர். கட்சிக்கு வருவதற்கு முன்பாகவே பிருந்தா காரத் வங்காளப் பெண் என்ற முறையில் குங்குமப் பொட்டு வைத்திருக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அது நீடிக்கிறது. அவ்வளவுதான். காவல்துறையின் அடக்குமுறையை மீறி போராடி உத்தப்புரம் சென்று அந்த மக்களுடன் மகிழ்ச்சியுடன் உணவு அருந்தினார். சாதிப்பிரச்சனைகளில் உ றுதியான நிலை எடுத்து தீண்டாமைக்கு எதிராகப் போராடி வருகிறார். அதெல்லாம் இவர்கள் கண்ணுக்குப் புலப்படவில்லை. குங்குமப்பொட்டு மட்டும்தான் தெரிகிறது.

 உத்தப்புரத்தில் பிள்ளைமார் என்பதால் அவர்கள் சிறுபான்மை சாதி என்பதால் பிரச்சனையில் மார்க்சிஸ்ட்டுகள் தலையிட்டுள்ளனர். முக்குலத்தோர் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களில் என்ன செய்தார்கள் எனக் கேட்டுள் ளனர். மேலவளவு, கவணம்பட்டி, பாப்பாபட்டி, கீரிப்பட்டி, வடிவேல்கரை, மேல உரப்பனூர், கைலம்பட்டி இவை எந்த வகையைச் சேர்ந்தவை?

திருமாவளவனும், தலித் தலைவர்களும் எடுத்த நடவடிக்கைகளை மறைத்துவிட்டு மாவட்ட ஆட்சியரின் துணையோடு தேர்தலை நடத்திவிட்டு, பாப்பாபட்டி, கீரிப்பட்டி விசயத்தில் முழுமையாக மார்க்சிஸ்ட் கட்சிதான் என பிரச்சாரம் செய்வதாக குறிப்பிட்டுள்ளனர். திருமாவளவனின் பணியை கட்சி குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இறுதிக் கட்டத்தில் வெற்றிக்கான சில படிகளை உருவாக்கி யது யார்? பத்தாண்டு காலம் தலித் தலைவர் பதவி யில் இல்லாவிட்டால் சுழற்சி முறை இல்லை யென அறிவிக்க வற்புறுத்தி போராடியது மார்க்சிஸ்ட்டுகள். தேர்தலை தடைசெய்ய வேண்டும் என சாதி ஆதிக்க சக்திகள் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தபோது கட்சியின் சார்பில் இந்தக் கட்டுரையாளர் தன்னையும் ஒரு தரப்பாக இணைத்து அந்த வழக்கை நடத்தி வெற்றி கொள்ள முடிந்தது. அரசின் பிரதிநிதி என்ற முறையில் மாவட்ட ஆட்சித் தலைவரும் இதில் தலையிட்டு தேர்தலை நடத்த உதவி செய்தார். ஊராட்சித்தலைவர் பதவிக்கு மட்டும் போட்டி யிடாமல் அனைத்து வார்டுகளுக்கும் வேட்பாளர் களை நிறுத்தி வெற்றிகரமாகத் தேர்தலை நடத்தி பஞ்சாயத்து நிர்வாகத்தை அமைப்பதில் மார்க்சிஸ்ட் தோழர்கள் முன் நின்றனர். வெற்றி பெற்ற தலித் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு சென்னையில் வரவேற்பும், பாராட்டும் தமிழக அரசு நடத்தியபோது திருமாவளவனும், அதில் பங்கேற்றார். விடுதலை சிறுத்தைகளின் பணி அங்கீகரித்துப் பாராட்டப்பட்டது.

இடதுசாரி கட்சிகளுக்குள்ளும் வேறு பாட்டை உண்டாக்க இந்த நூலில் முயற்சி செய்யப்பட்டுள்ளது. பாப்பாபட்டி, கீரீப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் ஆகிய ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டுமென சிபிஐ தலைவர் து.ராஜா அவர்கள் இந்து பத்திரிகையில் கட்டுரை எழுதியதையும் மாநில அளவில் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தபோது து.ராஜா துவக்கி வைத்ததையும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அந்த உண்ணா விரதத்தில் சிபிஐ தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன், சி.மகேந்திரன் போன்றவர்கள் கலந்து கொண்டதைக்கூட குறிப்பிடவில்லை. இந்த உண்ணாவிரதத்தை சிபிஎம் கண்டு கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், இந்தக் கட்டுரையாளர் மற்றும் மதுரை மாவட்ட சிபிஎம் தலைவர்கள் சென்று ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதத்தில் வாழ்த்துரை வழங்கியதை இப்படியா மறைப் பது?
சில தனிப்பட்ட சம்பவங்களையும் இவர் கள் விட்டு வைக்கவில்லை. மேலவளவு பிரச்சனை யில் மச்சக்காளை கட்சிக்கு எதிரான நிலை எடுத்த தையும், உத்தப்புரம் பிரச்சனையில் கம்பம் கிளைச் செயலாளர் லட்சுமணன் கடிதம் எழுதியதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். குடியாத்தம் பொதுத் தொகுதியில் தலித் சமூகத்தை சேர்ந்த லதாவை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற்றதை குறிப்பிடும் போதுகூட அதை அங்குள்ள செஞ்சட்டை வீரர்கள் சிலர் எதிர்த்தது ஏன் என வினா தொடுத்துள்ளனர். கட்சியின் நிலைபாட்டுக்கு மாறாக நிலையெடுத்த இவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். அதுதான் மார்க்சிஸ்ட் கட்சி. லட்சத்திற்கும் மேற் பட்ட கட்சி உறுப்பினர்கள் கட்சியின் நிலையில் நின்று உறுதியுடன் போராடுவது இவர்கள் கண் ணுக்கு தெரியவில்லை. விதிவிலக்காக அங் கொன்றும், இங்கொன்றுமாக கட்சி நிலை பாட்டை மீறும் தனிநபர்கள் மட்டும் தெரிகிறது.

கொடியங்குளத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி என்ன செய்தது என்று கேட்டுள்ளனர். காவல்துறை தலித் மக்களை தாக்கியபோது அங்கு அடக்குமுறைகளை மீறிச் சென்றவர் தோழர் சம்பத். அதே மாவட்டத்தில் நாலுமூலைக்கிணறு கிராமத்தில் தலித் மக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்திய போது அதில் தலையிட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று ரூ. 23 லட்சம் நஷ்டஈடு பெற்றுக் கொடுத்ததும், மாவட்டக் காவல்துறை கண்காணிப் பாளர் உட்பட 88 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வைத்ததும் மார்க்சிஸ்ட் கட்சிதான் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.

இந்த நூலில் சுகிர்தராணி ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். “அந்தந்த உட்சாதிகளுக்காக அந்தந்த இயக்கங்கள் மட்டும் போராட வேண்டும் என நினைத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருக்கும் தலித் என்ற பொதுச் சொல் எதற்கு?” மேலவளவிற்கு வருபவர்கள் உத்தப்புரத்திற்கு வருவதில்லை. உத்தப்புரத்திற்கு வருபவர்கள் மேலவளவிற்கு வருவதில்லை. இருவரும் அருந்ததியர் பிரச்சனைக்கு வருவதில்லை. சுகிர்தராணி சொல்வதையாவது பரிசீலிப்பீர்களா?

அருந்ததியர்கள் மீது மார்க்சிஸ்ட்டுகளுக்கு ஏன் திடீர் பாசம்?. உள் ஒதுக்கீடு எதற்காக? பிற்பட்ட வகுப்பில் உள்ள சாதியினருக்கு உள் ஒதுக்கீடு உள்ளதா? என்றொல்லம் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதுவரை கிடைத்துள்ள இட ஒதுக்கீட்டுப் பலன் உரிய விகிதத்தில் அருந்ததியர் களுக்குக் கிடைக்கவில்லை. எனவே தான் உள் ஒதுக்கீடு கோரிக்கையை தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன் வைத்தது, பெற்றது. பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் அதிக எண்ணிக்கையில் சாதிகள் இருப்பதால் உள் ஒதுக்கீடு நடைமுறை சாத்தியமில்லை. பிற்படுத்தப்பட்டவர்களில் மிகவும் பிற்படுத்தபட்டவர்கள் என்ற ஒரு பகுதி உருவாக்கப்பட்டு தனியாக இடஒதுக்கீடு அளிக்கப் பட்டுள்ளது. அதிலும் உரியவர்களுக்கு பலன் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக வருமான வரம்பு வேண்டும் என்று சொன்னது மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான்.
சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் இந்துத்துவாவை, மனுவேதத்தை எதிர்க்க வேண்டாமா? கேள்வி மிக மிகச் சரியானது. ஆனால், இன்றுவரை இந்துத்துவாவையும் மனுவின் வர்ணாசிரமத்தையும் உறுதியுடன் எதிர்ப்பது மார்க்சிஸ்ட் கட்சி அல்லவா?
மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தி தலித் சிறுகதைகள் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. இதுகூட இவர்களை உறுத்துகிறது. தமுஎகசவிற்கு தலித் இலக்கியம் பற்றி கொள்கை இல்லையென கூறியுள்ளனர். 1996-ல் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற இந்த எழுத்தாளர் சங்க மாநாட்டில் தலித் இலக்கியம் பற்றி விவாதித்து கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. தலித் அல்லாதவர்களும் தலித் இலக்கியம் படைக்கலாம். ஆனால் தலித் எழுத்தாளர்கள் படைக்கும்பொழுது அது இன்னும் உணர்வுப்பூர்வமாகவும், சிறப்பாகவும் அமையும் என்பதையும் அந்த மாநாடு இறுதிப்படுத்தியுள்ளது.

இன்னொரு கொடுமையான கேள்வி: “தஞ்சையில், நாகையில் பள்ளன் கட்சி, பறையன் கட்சி எனக் கூறிக் கொள்ளும் மார்க்சிஸ்ட்டுகள் மதுரைப் பகுதியில் யாருடைய கட்சி? அதிமுக வுக்கு அடுத்தப்படியாக அது அறிவிக்கப்படாத முக்குலத்தோர் கட்சி.”

மார்க்சிஸ்ட் கட்சியில் யாரையும் சாதிச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு சேர்ப்பதில்லை. போராட்டக் களத்தில் முன்னுக்கு வரும் தோழர் கள் கட்சியில் இணைகிறார்கள். உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூர் வட்டங்களில் அதிக எண்ணிக்கையில் முக்குலத்தோர் இருப்ப தால் கட்சியிலும் அவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கலாம். மதுரை மாவட்ட கட்சியில் மாவட்டத்தில் வாழும் மக்களை சேர்க்காமல் சந்திர மண்டலத்தில் இருந்தா ஆட்களைக் கொண்டுவந்து சேர்க்க முடியும்? ஒன்றை மட்டும் பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம். தீண்டாமைப் பிரச்சனைகளில் தலையீடு செய்யும் பொழுது எங்களது தோழர்களை, பெண்களை நீ யாருக்கு பிறந்தாய் என்பது தொடங்கி எழுத முடியாத பல அர்ச்சனைகளை சாதி ஆதிக்க சக்திகள் செய்த போதும், உறுதியுடன் போராடியவர்கள் அவர்கள் தான். அவர்களுக்குச் சாதி இல்லை. அவர்கள் மார்க்சிஸ்ட்டுகள்.

உத்தப்புரம் பிரச்சனையை முழுவதும் உள் வாங்கிக் கொண்டு கட்டுரைகள் எழுதப்பட்டதா என்பது சந்தேகமாக உள்ளது. கட்டப் பஞ்சாயத்து ஒப்பந்தம் உருவான நாள் 23.6.89. இதனடிப் படையில் எழுப்பப்பட்டதுதான் முத்தலாம்மன் கோவில் சுற்றுச்சுவர். கலவரம் நடந்த நாள் 2.8.89. இதன் பிறகுதான் இந்தச் சூழ்நிலையை பயன் படுத்தி சாதி ஆதிக்க சக்திகள் தலித்துக்களை தங்கள் பகுதிக்கு வரவிடாமல் தடுக்க உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை எழுப்பினார்கள். இந்தச் சம்பவங்கள் தேதிகள் மாற்றி பதிவு செய்யப் பட்டுள்ளன. (பக்கம் 17)

பிரபலத்தைத் தேடும் யுக்தி அல்ல. தலையீடு செய்துவிட்டு வேறு பிரச்சனைகளுக்கு மார்க் சிஸ்ட்டுகள் செல்லவில்லை. மே 2008 முதல் இன்று வரை எத்தனை காவல்துறை தடியடிகள் அராஜ கங்கள், கைதுகள் இவை அனைத்திலும் மார்க் சிஸ்ட் தோழர்களும், பெண்களும் அந்த மக்க ளோடு வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம். காவல் துறை தாக்குதல் நடத்தியபோது கட்சி சார்பில் நிவாரணம் 2 லட்சம் வழங்கப்பட்டது. மாநில பெண்கள் ஆணையத்திற்கு புகார் செய்யப்பட்டது. மாதர் சங்கம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து இடைக்கால நிவாரணம் 10 லட்சம் தலித் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் உச்ச கட்டமாக கடந்த ஜூலை 12 அன்று டி.கே.ரங்கராஜன் எம்.பி, சம்பத் உள்ளிட்ட தலைவர்கள் மீது தடியடி நடத்தப் பட்டது. இவையெல்லாம் வெறும் பிரபலத்திற் காகவா? தீண்டாமையை எதிர்த்த போராட்டம் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதி. இதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கொள்கை. எனவே இது கொள்கைப் போராட்டம்.

தலித் எழுச்சியைக் கட்சி வரவேற்கிறது. இதர சாதி அமைப்புகளை, சாதிக்கட்சிகளைப் பார்ப்பதுபோல் தலித் அமைப்புகளை, தலித் கட்சிகளைப் பார்க்கக் கூடாது. இது அடக்கு முறைக்கு எதிரான எழுச்சி. இந்த எழுச்சியில் ஜனநாயக உள்ளடக்கம் உள்ளது எனச் சரியாகவே மார்க்சிஸ்ட் கட்சி மதிப்பீடு செய்துள்ளது. (திட்டம் பாரா 5.10)

வட மாநிலங்களில் ஏற்பட்ட தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் எழுச்சியை கட்சி வரவேற்று வர்க்க ஒற்றுமையைக் கட்டவேண்டும் என விரும்புகிறது. அனைத்து சாதிய ஒடுக்குமுறை களையும் எதிர்த்துப் போராட வேண்டுமென விரும்புகிறது.

வண்ணக்கதிர் 18.5.2008ல் சு.ரவிக்குமார் எம்எல்ஏ எழுதிய கட்டுரை இவ்வாறு முடிகிறது: “அத்தகைய போராட்டங்களை தலித்துகள் மட்டுமே, இடதுசாரிகள் மட்டுமே தனித்து நடத்த இயலாது. அதற்கு ஒரு பரந்த ஜனநாயகக் கூட்டு உருவாக்குவது அவசியம். அதை இடதுசாரிகள் தான் உருவாக்க முடியும்”. இதை மேற்கோள் காட்டியதற்காக சம்பத்தைக் கேலி செய்து எழுதியுள்ளனர்.

நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை வேறுபடுத்திப் பாருங்கள். தீண்டாமையை உறுதி யாக எதிர்க்கும் சக்திகள் அனைவருடனும் இணைந்து நின்று போராட வாருங்கள். இல்லா விட்டால் வரலாற்றில் உங்களுக்கு இடமில்லாமல் போய்விடும்.

வெ.சுந்தரம் - மாநிலக்குழு உறுப்பினர் மார்க்சிஸ்ட் கட்சி.

Tuesday, November 2, 2010

வெண்மணி முதல் கயர்லாஞ்சி வரை: தலித்துகளுக்கு எதிரான வன்முறையின் வரலாறு

 

மகாராஷ்டிரா மாநிலம், பண்டாரா மாவட்டம், மொஹாடி தாலுகாவிலுள்ள குக்கிராமம் கயர்லாஞ்சி.  பையாலால் போட்மாங்கே என்ற தலித் குடும்பத்தினர் மீது அக்கிராமமே வன்மம் கொண்டு பலி தீர்த்த வரலாற்றுப் போக்குகளையும், சமூகப்படிநிலைகளின் வன்மங்களை யும், முக்கிய அரசியல் கட்சிகள் மட்டுமல் லாமல், அரசு (காவல்துறை), சட்டம் (நீதி மன்றம்),  ஊடகம் ஆகிய அரசமைப்புக ளும் அதற்கு எவ்வாறு துணை போயின, இதுகுறித்த தகவல்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் இருட்டடிப்பு செய்தன, நீதியைத் தாமதப்படுத்தி வருகின்றன என்பதையும் இப்புத்தகம் புள்ளிவிவரப் படுத்துகிறது. கயர்லாஞ்சி வன்கொடுமை மீது தலித் அமைப்புகள் தொடுத்த எதிர்வினைகள், தாக்குதல்கள் மூலம் அரசு எந்திரம் அதை எதிர்கொண்ட விதம் குறித்தும், தலித் மீதான வன்முறைகள் குறித்த செய்திகளை வெகுமக்கள் ஊடகங்கள் ஏன் பாகுபாட்டுடன் அணுகுகின்றன என்பதையும் ஆய்வு செய்கிறார்.

தலித்துகளின் துயரங்களைக் குறைப்பது தொடர்பான அரசமைப்புச் சட்ட நிவாரணங்கள் எவ்வாறு போதுமானவையாக இல்லை; சமூகப் பாகுபாடுகளில் இருந்து அம்மக்களைப் பாதுகாக்க ஏன் இயலவில்லை ஆகியவற்றுடன் கயர்லாஞ்சி படுகொலைகளின் அரசியல் பொருளாதாரப் பின்னணியையும் ஆராய்கிறார். முக்கியமாக விடு தலைக்குப் பிந்தைய இந்தியாவில் தலித்துகள்மீதான வன்கொடுமை களில் புதிய பரிமாணமாக உருவாகியுள்ள அபாயக்கூறுகள், சாதியப் படிநிலைகளில் தலித்துகளுக்கு எதிராக வளர்ந்துள்ள புதிய ஆதிக்க சக்திகள் குறித்தும் டெல்டும்டே புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறார்.

முன்னர் குறிப்பிட்ட நாளில் கயர்லாஞ்சி கிராமத்தில் பையாலால் போட்மாங்கே குடும்பத்தைச் சேர்ந்த அவரது மனைவி சுரேகா(40), அவர்களது மகன்கள் ரோஷன்(21), சுதிர் (19) மற்றும் மகள் பிரியங்கா (17) ஆகியோர் சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகள் பொதுவெளியில் அறியப்பட ஒரு மாதமாகியது. இப்படுகொலைகளில் ஈடுபட்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினரும்  காவல்துறை அதிகாரி களும், அரசு வழக்கறிஞரும் முழுமூச்சுடன் இந்த இருட்டடிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவை வெறும்(!) படுகொலைகள் மட்டு மல்ல.  ஒரு ஒட்டுமொத்த கிராமமே பல காலமாக வன்மத்தால் பகை வளர்த்துத் தீர்த்துக்கொண்ட பலி.

குடும்பத்தின் மூத்த உறுப்பினரான பையா லால் போட்மாங்கே இல்லாத நேரத்தில் பெண்கள் உட்பட கிராமத்தினர் திரண்டு ஊரின் ஒதுக்குப்புறமான போட்மாங்கே வீட்டைச் சுற்றி வளைத்துத் தாக்கியுள்ள னர். அவரது மனைவி, மகள் ஆகியோரை வெளியே இழுத்து வந்து நிர்வாணப் படுத்தி, மகன்கள், சகோதரர்கள் எதிரே கும்பல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ள னர்.17வயதுச் சிறுமி பிரியங்கா சித்ரவதை தாங்காமல் உயிரிழந்த பின்னரும் சடலத்தைக்கூட விட்டுவைக்காமல் வன் புணர்ச்சியில் ஈடுபட்டனர். வீட்டுக்கு தீ வைத்து நிர்மூலமாக்கினர். அவர்களை கிராமத்தின் களத்துமேடு போன்ற இடத் துக்கு இழுத்து வந்து அடித்து சித்ரவதை செய்து கொன்றுள்ளனர். பின்னர், சடலங் களை ஒரு டிராக்டரில் போட்டு, வெற்றி ஊர் வலம் நடத்தி ஊருக்குச் சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆற்றங்கரையில் வீசி விட்டு நிம்மதியாக வீடு திரும்பியுள்ளனர். இவ்வளவு கொடுமைகளையும் பையா லால் போட்மாங்கே புதர்மறைவில் பதுங்கி, கையறுநிலையில் மௌன சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

ஒட்டுமொத்தக் கிராமமும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்கு எதிராக இத்தகைய கொடூர பகைவெறி கொண்டது எதனால்? அவர்களின் ஆதிக்கசாதி அகங்காரத்துக்கு எதிராக போட் மாங்கே குடும்பம் நடத்திய தொடர்போராட்டம்தான். குறிப்பாக,  போட் மாங்கேயின் மனைவி சுரேகா நடத்திய போராட்டங்கள் ஆதிக்க சாதி யின் ஆண் மமதையை நிர்மூலமாக்கியுள்ளது. இதற்காக அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் 'ஒழுக்க நீதி'. போட்மாங்கே நடத்திய போராட்டங்களில் தார்மிக ஆதரவாக இருந்துவந்த பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சித்தார்த்த காஜ்பியேவுக்கும் சுரேகாவுக்கும் கள்ளக்காதல் இருப்பதாக நீண்டகாலமாகவே ஒரு கதையை இட்டுக்கட்டி வந்துள்ளனர். இதற்காக அந்தத் தாய் மட்டுமல்லாமல் அவளது மகன்களும், மகளும் உயிரிழக்கவேண்டியிருந்தது.

ஒழுக்கக்கேட்டுக்கு எதிராக சமூகமே தன்னெழுச்சியாக வெகுண்டெ ழுந்ததால் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நடந்த எழுச்சியாக புனிதப் படுத்தும் வாதம் மூலம் நீதியைத் தாங்களே கையிலெடுத்துக் கொள் வது நியாயப்படுத்தப்படுகிறது. நீண்டகாலப் பகையைப்  பலி தீர்க்க இதுபோன்ற ஒழுக்க நியதிகளை இட்டுக்கட்டும் போக்கு புராணங்கள் புனையப்பட்டதில் இருந்தே தொடர்கிறது. இதற்கு உச்சாடனமாக, மநு முன்னிறுத்திய நான்கு வர்ணம் எனும் இந்து அறம் முன்னிற்கிறது. இந்த அறத்தைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், கொண்டு செலுத்த வும் கீழ்சாதியினருக்கு என்னவிதமான தண்டனை அளிக்கவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே மநு வழி வகுத்துத் தந்துள்ளார். ஆனால், சில தலித் செயல் பாட்டாளர்களின் முன் முயற்சிகள் இல்லையென் றால் அங்கு நடந்த இக்கொடுஞ் செயல்கள் அனைத்தும் இத்தகைய 'புதிய' மநுவாதிகளால் எவ்வாறு மூடிமறைக்கப்பட்டிருக்கும் என்பதை யும், இதில் பெரு ஊடகங்களின் வெட்கக்கேடான செயல்களையும் டெல்டும்டே அம்பலப்படுத்துகிறார். ஒரு பொதுப்பிரச்சனை குறித்து சிந்திக்கவும், தீர்வுகூறவும் கீழ்சாதி யினருக்கு அருகதையில்லை என்னும் மநுநீதி காலம்காலமாக நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. மீறுபவர்களுக்கு என்னவிதமான தண்டனை அளிக்கவும் ஆதிக்க சக்திகளுக்கு மநு உரிமை அளித் துள்ளார். இதுவே சமூக ஒழுங்காகவும் அறமாகவும் பயிற்றுவிக்கப் பட்டு வந்துள்ளது. அனைவருக்கும் சமத் துவ உரிமை, சுதந்தரம், நீதியுடன் கூடிய இறையாண்மை கொண்ட, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக இந்தியா திகழும் என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதங்கள் அமலாக்கப்பட்டு வரும் காலத்திலும் மநுகால அறம் தொடர்வதும், அதை நிலைநிறுத்தவும், தண்டனை அளிக்கவுமான அதிகாரங் களை ஆதிக்கசக்திகள் கையில் எடுத்துக் கொள்வதும் எவ்வாறு என்ற கேள்வியை டெல்டும்டே எழுப்புகிறார்.

குறிப்பாக  சில சூத்திரர்கள் தாமும் பார்ப் பனியத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் என் பதை மறந்து புதிய ஆதிக்க சக்திகளாக வும், அதிகார மையங்களாகவும் உருக் கொண்டுள்ளனர். விடுதலை இந்தியா வில் அவர்களே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடு பட்டு வருகின்றனர் என்பதை பட்டியலிடுகிறார். கீழ்வெண்மணி (தமிழ் நாடு) முதல் பெல்ச்சி(பீகார்), கரம்சேடு (ஆந்திரா),  மேலவளவு (தமிழ் நாடு), ஜஜ்ஜார் (ஹரியானா) வரை கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளைப் பட்டியலிட்டு, இவற்றில் ஈடுபட்டவர்கள் பார்ப்பனரல்லாத சாதி இந்துகள், குறிப்பாக சூத்திரர்  என்று ஒதுக்கப்பட்டுள்ள பிரிவினர் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். (இதில் கீழ்வெண்மணியில் நிகழ்ந்த தாக்குதல் என்பது சாதிய ஒடுக்கு முறை மட்டுமல்ல. கீழ்தஞ்சை மாவட்டத்தில் நூற்றாண்டுகளாக நீடித்துவந்த நிலப்பிரபுத்துவ கொடுமைகளுக்கு எதிராக வர்க்கரீதி யாக அணிதிரண்ட விவசாயத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங் களுக்கு எதிரான தாக்குதல்களின் உச்சக்கட்டமே  என்ற  இன்னொரு பரிமாணம் இருப்பதை  டெல்டும்டே கவனிக்கத் தவறியுள்ளார்.) சகிப்புத்தன்மை, அகிம்சை, சமாதான விரும்பிகளாக இந்திய மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர் என்ற கருத்து நிலவுகிறது.  இக்கருத்து, கிராமங்களில் மநு கூறும் சமூக ஒழுங்கு, காலம் காலமாக கட்டிக்காக்கப்படுவதை நிரூபணமாக்குவதாக விளங்குகிறது. இந்தச் சமூக ஒழுங்கு குலையும்போது, அங்கு சமூக ஒழுங்குகளையும், அமைதியையும் நிலைநாட்ட கயர்லாஞ்சி வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. எனவே, இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் எப்போது வேண்டுமானாலும் கயர்லாஞ்சியாகும் வாய்ப்புள்ளது என்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் எந்தளவுக்குச் சமரசம் செய்து கொள்கிறார் களோ அந்த அளவுக்கே அமைதியாக வாழமுடியும்; நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைகளில் மட்டுமல்லாது, முதலாளித்துவ உற்பத்திநிலை களிலும், தற்போதைய உலகமயமாக்கல் நிலைகளிலும்கூட இச் சமூகப்படிநிலை தொடர்கிறது; நிலப்பிரபுத்துவத்துடன் முதலாளிய சக்திகள் செய்துகொண்ட சமரசத்தால்தான் 60 ஆண்டுகால விடு தலை வரலாற்றிலும்கூட சாதியப்படிநிலைகளை நீக்கமுடியவில்லை. சிறுநகரங்கள், பெருநகரங்களிலும் அண்மைக்காலமாக தொடரும் சாதீய (தலித்துகள் மீதான) வன்முறைகளை இதற்கு நிரூபணமாகச் சுட்டிக்காட்டுகி றார்.
கிராமங்களில் மட்டுமல்லாது, இச்சாதியசக்திகள் நகர்ப்புறங்களிலும் இதே சமூக அமைதியை விரும்புகின்றன, அது குலைக்கப்படும் போது அங்கும் வன்மம் உருவாகிறது. இது சித்ரவதைகளாக, படுகொலைகளாக, வன்புணர்ச்சிகளாக, கயர்லாஞ்சிகளாக வெடிக்காமல் இருக் கலாம். ஆனால் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் தலித்துகளுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும்போது  மவுன ஒதுக்கல் மூலம் தலித்துகளின் ஆசா பாசங்கள் நசுக்கப்படுகின்றன. தனியார் குழும நிறுவனங்கள் தலித்துகளை அனுமதிப்பதே இல்லை. அவர்கள் பாரம்பரியமாகவே தகுதிக் குறைவான வர்கள் என்று கூறி தனியார் நிறுவனங் கள் ஒதுக்கி வருகின்றன. இது, கயர் லாஞ்சிகளில் நடப்பதைவிட மோசமான அநீதி என்று சுட்டுகிறார் டெல்டும்டே. மேலும், கயர்லாஞ்சியில் நிகழ்ந்த வற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் சாதியப்படிநிலைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானித்து, சாதியப்படிநிலைகள் அதன் கட்டமைப்பு மற்றும் பருண்மை நிலைகளில் மாற்றமின்றி தொடர்ந்தாலும், அதன் உள்ளமைப்பு மற்றும் குணங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கவனப்படுத்துகிறார்.

ஏழாம் நூற்றாண்டிலிருந்து நிகழ்ந்து வந்த ஊடுருவல்கள், 11ஆம் நூற்றாண்டிலிருந்து செல்வாக்கு செலுத்திய ஆளும்வர்க்கக் கொள்கைகளால் ஏற்பட்ட மாற்றங்களைவிட, பிரிட்டிஷ் காலனியாக் கத்தின் போது ஏற்பட்ட மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை என்கிறார். காலனியாக்கத்தின் தொடக்கத்தில் தொடங்கிய மாற்றங்கள் கடந்த நூற்றாண்டுவரை நீடித்தன. புனிதமாகக் கருதப்பட்ட நால்வருண முறை முழுமையாக இல்லாவிட்டாலும், குறிப்பிடத் தக்க அளவுக்குப் பலவீனமடைந்தது. சாதிகளின் சடங்கு அடிப்படைகள் ஒரு விதிவிலக் காகவே எதிர்கொள்ளப்பட்டன.

ஆனால், இன்றைய சாதி முறைகளை மதம் அல்லது மரபு ஆகிய வற்றின் அடிப்படையில் மட்டுமே புரிந்துகொள்ள முடியாது. நம் காலத்தின் குணங்களைத் தீர்மானிக்கும் சக்தியாகிய அரசியல் பொருளாதாரத்தின் செல்வாக்கால் தற்கால சாதிமுறைகள் மேலும் குழப்பங்களுக்கு ஆட்பட்டுள்ளன. கடந்த 60 ஆண்டுகால 'மதச்சார் பற்ற ஜனநாயக' அரசியல், 'சோசலிச' பொருளாதாரக் கொள்கை களால் சாதிய அமைப்புமுறை புதிய வாழ்க்கையைப் பெற்றுள்ளது. கடந்தகாலத்தின் சமூக- பண்பாட்டு - உளவியல் மிச்சசொச்சங் களுக்கு இடையேயான உள்ளீடுகளின் இடைக்கால வெளிப்பாடாக வும், சில குறிப்பிட்ட வகுப்புகளுக்கு சலுகைகள் அளிக்கும் வகையில் அரசு பின்பற்றிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளாலும் ஏற்பட்ட வெளிப்பாடாகவும் தற்காலச் சாதிஅமைப்புகள் பிரதிபலிக்கப் படுகின்றன என்று விளக்கமளிக்கிறார் டெல்டும்டே. "பாரம்பரியமாக உரிமை பெற்ற சாதிகள்தாம் (பார்ப்பனர் மற்றும் இரு பிறப்பாளர்) சாதியப்படிநிலைகளுக்குப் பொறுப்பாவார்கள் என்று இன்றும் அறிவிஜீவிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். (நீதிமன்றம், நாடாளுமன்ற- சட்டமன்றப் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் என) அரசு மற்றும் குடிமைச் சமுதாயங்களில் அவர்களின் மேலாதிக்கம் இன்றும் நீடிக்கிறது என்றபோதிலும், கிராம சமூகப் படிநிலைகளில் அவர்களின் பிடிமானம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

உண்மையில், தங்கள் பங்கை அதிகரிப்பதில் இதர சமூகக் குழுக்கள் முன்னேறியே வருகின்றன. மேலாக, தமது  தொடக்ககாலப் பண்பாட்டு மேலாண்மையுடன்,  பொருளாதாரத்தின் புதிய கூறுகளான முதலாளித்துவம் மற்றும் உலக மயமாக்கல் ஆகிய வளர்ச்சிகளின் பலன்களையும் அனுபவிக்கும் வகையில் அப்பிரிவுகளுடன் இந்தப் பாரம்பரிய மேல்சாதிகள் (பார்ப்பனியர் மற்றும் இருபிறப்பினர்) தம்மைத் தகவமைத்துக் கொண்டனர். இதனால், முன்னர் சாதியப் பாகுபாடு மற்றும் உயர் சாதித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்டவர்களும், இதர பிறபடுத்தப்பட்டவர்களும் இப்போது முன்னேறி வருகிறார்கள். கயர்லாஞ்சி போன்ற தாக்குதல்களில் இரு பிறப்பாளர் போன்ற உயர் சாதியினர் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. கடந்த 40 ஆண்டுகளில் கீழ்வெண்மணி முதல் கயர்லாஞ்சி வரை நடந்த தாக்குதல்களிலும் பார்ப்பனர்கள் நேரிடையாக ஈடுபட்டதாகத் தெரியவில்லை. 1960 களுக்குப் பின்னர் நிகழ்ந்துள்ள இத்தாக்குதல்களில் சமூகத்தில் உயர் நிலை பெற்ற பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர்களே ஈடுபட்டுள்ளனர்' என்று அம்பலப்படுத்துகிறார் டெல்டும்டே. இந்தியாவை இங்கிலாந்து தனது நேரடியான காலனியாக்கத்தின் கீழ் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ராணுவ பலத்தாலும், தந்திரங்களாலும் தனது ஆதிக்கத்தின் கீழ் நாட்டைக் கொண்டுவந்தபின் நிர்வாகத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஜமீன்தாரி முறை, ராயத்வாரி முறை போன்றவை அவை. இத்தகைய ஜமீந்தாரர்களாகவும், மிராசுகளாகவும் இருபிறப்பாளர் அல்லாத சூத்திர சாதியினரை நியமித்தது. அதேநேரத்தில் உயர் நிர்வாக மட்டத்தில் பார்ப்பனர்களையும், இரு பிறப்பாளர்களையும் நியமித்தது. இதனால் பார்ப்பனர் காலனியாக்கத்தின் நேரடியான பலன்களை உடனுக்குடன் அனுபவித்து வந்தனர். என்னதான் பண்ணைகளாக இருந்தாலும் பார்ப்பனர்களின் அந்தஸ்தை புதிய ஜமீந்தார்களால் அடையமுடியவில்லை. எனேவே அதிகாரத்தில் பங்கு கோரும் கோரிக்கைகள் எழுந்தன.

இதற்கிடையே மராட்டியம் போன்ற பகுதிகளில் தலித் விழிப்புணர்வு ஏற்பட்டது. ஜோதிராவ் புலேவைத் தொடர்ந்து தலித் கண்ணோட்டம் நாடு முழுவதும் உருவானது. தொடர்ந்து 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்,  20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மராட்டியம், தமிழகம் போன்ற பகுதிகளில் பிராமணல்லாதோர் இயக்கம் உருவா னது. இதன்மூலம் காலனிவாதிகளிடம் பெரும்சலுகைகளைப் பெற முடிந்தது. புதிய பதவிகள் பெற்றதுடன் புதிய தொழில்துறைகளிலும் ஈடுபட்டனர். இந்திய தொழில்மயமாக்கத்தில் இவர்கள் பங்கு உறுதிப் படுத்தப்பட்டது. அத்துடன் தொடர்ந்த சீர்திருத்த இயக்கங்கள் மூலம் பெற்ற செல்வாக்கைக் கொண்டு அவர்கள் விடுதலை இந்தியாவிலும் அரசியல் பொருளாதாரச் செல்வாக்கு பெற்ற புதிய சக்திகளாக உயர்ந்தனர் என்கிறார். அதேசமயம், ஏற்கனவே கொழுத்த நிலை யில் இருந்த நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொள்வதையே இந்திய முதலாளித்துவம் விரும்பியதையும், நவீனமயமாக்கலால் தங்களுக்கும் மேலும் லாபம்தான் என்பதால் நிலப்பிரபுத்துவ பிற் போக்காளர்கள் அந்த சமரசத்தை (இன்றுவரை) ஏற்றுக் கொண்டுள் ளதையும் அவர் சரியாகச்  சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலை பெற்ற இந்தியாவில் நவீனப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. நெசவு, தோல், கயிறு, கள் இறக்குதல் போன்ற பாரம்பரியத் தொழில்கள் நசிவடைந்தன. ஒதுக்கப்பட்ட பல சாதிகளைச் சார்ந்த கோடிக்கணக்கானோர்  இதனால் நலிவடைந்தனர். அதேநேரத்தில் பசுமைப்புரட்சி போன்ற திட்டங்கள் நிலவுடமைச் சாதிகளின் அதிகாரத்தை உயர்த்துவதில் முடிவடைந்தது. இதனால் ஏராளமானவர்கள் நிலமிழந்தவர்களாக வும், பாரம்பரிய வாழ்வுரிமைகளை இழந்தவர்களாகவும் ஆயினர். அதேநேரத்தில் நிலவுடமையாளர்களிடம் உபரி குவிந்ததுடன், பாரம்பரிய கிராமத் தன்னிறைவுப் பொருளாதாரத் தன்மைகளை அழித்து, கிராமப் பொருளாதாரத்தை வணிகக் கலாச்சாரமாக்கியது.

இக்காலகட்டத்திற்குள் பார்ப்பனர்களும், இரு பிறப்பினரும் நகரங் களுக்குக் குடிபெயர்ந்தனர். கிராமங்கள் முற்றிலும்  புதிய ஆதிக்க சாதிகளின் (பிற்படுத்தப்பட்டவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள்) கீழ் வந்தன. அரசின் வளர்ச்சித் திட்டங்களில் எந்தவிதமான (சமூகப்) பாதுகாப்புக்கூறுகளும் பின்பற்றப்படாததால் அவற்றால் தலித்தல் லாத சாதிகள் மட்டுமே பாரம்பரிய தன்னிறைவுக் கிராம முறைகளின் அனைத்துப் பலன்களையும் அடைந்து வளர்ந்தன என்கிறார். பொருளாதார பலம் பெற்ற நிலஉடமைச் சூத்திரசாதிகள் அரசியல் ரீதி யாகவும் தம் சாதி மக்களை அணிதிரட்டும் வல்லமை பெற்றன. சிறிய சாதிகள்கூட தமது விகிதாச்சாரத்துக்கு அதிகமான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறும் நிலை உருவாகியதையும் சுட்டிக்காட்டுகிறார். பலநிலைகளில் அவர்கள் தலித்துகளின் பொரு ளாதார நிலையுடன் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் உள்ள னர்.எனினும் அவர்கள் நில உடமைச் சாதிகளுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளதால், அவர்களை சமூகரீதியாக நலிவடைந்த தலித் மக்களின் பொருளாதார நிலைக்குள் இணைக்க முடியாது என்கிறார். தலித்துகள், பிற்பட்ட, இதர பிற்பட்ட மக்கள்திரள் ஒன்றிணைய வேண் டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அது சாதி அடிப்படையில் இல்லாமல் வர்க்க அடிப்படையில் அமைய வேண்டும் என்கிறார். (இதற்கு உதாரணமாக தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் வர்க்கரீதியாக அணி திரண்டதைச் சுட்டிக் காட்டமுடியும். ஆனால், அவர் அவ்வாறு சுட்டிக்காட்டவில்லை.)  சமூகங்கள் சாதியுணர்வுடன் நீடிக்கும்வரை இதுபோன்ற இணைப்புப் போராட்டங்களால் சமூக சமத்துவம் ஏற்பட வாய்ப்பில்லை.

தலித் அல்லாத, பார்ப்பனரல்லாத சாதிகளுக்குள் சாதிக் கலப்புத் திருமணங்கள் இக்காலத்தில் பரவலாகக் காணப்பட்ட போதும், இன்னமும் தலித் சமூகங்கள், தலித்தல்லாத, பார்ப்பனரல்லாத சாதிகள் இடையேயான திருமணங்கள் அரிதாக இருக்கிறது. அவர்கள் இன்னமும் சமூகரீதியாக விலக்கப்பட்டுள்ளனர். நிலப்பிரபுத்துவ பிற்போக்காளர்களுடன் இந்திய அரசு செய்து கொண்ட சமரசத்தின் விளைவாகவே இச்சமூகப்படிநிலை நீக்கப்படவில்லை. இதனால் புதிய பொருளாதார வலிமையும், அரசியல் செல்வாக்கும் பெற்று வளர்ந்து வரும் தலித்தல்லாத, பார்ப்பனரல்லாத நில உடமைச் சாதி கள் சமூக ஒதுக்கலைத் தொடர எந்த எல்லைகளையும் மீறத் தயாரா கும் துணிச்சலோடு உள்ளனர். இதுவே கீழ்வெண்மணி முதல் கயர் லாஞ்சி வரை தலித் படுகொலைகள் தொடரத் தைரியமளித்துள்ளது. இருந்தபோதிலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் எப்படி காட்டுமிராண்டிகளாக நடந்துகொள்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. கயர்லாஞ்சி படுகொலையில் ஈடுபட்ட ஆதிக்கசாதிகள் பெரிய அளவிலான மிராசுதார்கள் கூட இல்லை. சிறிய அளவிலான விவசாயிகள் தாம். அதுவும் இந்த பண்டாரா மாவட்டம் விவசாயிகள் தற்கொலைக்குப் புகழ்பெற்ற விதர்பா பகுதியில் உள்ளது. கடன்சுமை தாளாது தற்கொலை செய்தோரில் அனைத்து சாதிகளும் உள்ளனர். ஆனால், போட்மாங்கேயின் 17 வயது மகள் பிரியங்காவின் பெண்குறியில் வண்டியில் மாட்டைப் பூட்டப் பயன்படுத் தும் கம்பினை நுழைத்து சித்ரவதை செய்ததாக உண்மை அறியும்குழு கூறியுள்ளது. உள்ளூர் பாரதிய சனதா கட்சித் தலைவர் ஒருவர் பிரியங்கா உயிரிழந்த பின்னரும் பொதுமக்கள் முன்னிலையில் வன்புணர்ச்சியில் ஈடு பட்டுள்ளார். இதேபோன்று தமிழ்நாட் டில் திண்ணியம் கிராமத்தில் தலித்துகள் வாயில் மலம் திணிக்கப்பட்டது.

இக்கொடுமைகளைச் செய்யும் துணிச் சல் ஆதிக்க சக்திகளுக்கு எவ்வாறு ஏற் பட்டது என்ற கேள்வியை எழுப்பும் டெல்டும்டே, தான் செய்வது அனைத் தும் சரி என்ற எண்ணமும், அதற்குப் பக்கபலமாக மதரீதியாகவும் (மநுவின் வர்ணாசிரம தர்மம்), பண்பாடு, மரபுரீதியாகவும் தாம் மேலானவர்கள் என்ற மமதையும் இவர்களிடம் உள்ளது. அத்துடன் தற்கால அரசியல் மேலாதிக்கம் ஆகியவையும் இவற்றுக்கு ஊற்றுக்கண்ணாகக் உள்ளன என்கிறார். தலித்துகள் கீழானவர்கள், அவர்களுக்கு என்ன தண்டனையும் கொடுக்க தமக்கு உரிமை உள்ளது. தாம் தண்டிக்கா விட்டால் அவர்கள் தம்மைத் தண்டித்துவிடுவர் என்ற கண்ணோட் டத்தை இவர்கள் வெகுஇயல்பாகவே கொண்டுள்ளனர் என்கிறார். இதனை தலித்துகளும் தம்மை அறியாமல் ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். இதனாலேயே தம் மீது திணிக்கப்படும் வன்முறைகள் குறித்து புகார் அளிக்க தலித் மக்கள் அஞ்சுகின்றனர் என்கிறார். இவை அனைத்தையும்விட நீதி அளிக்கும் முறை தலித்துகளுக்கு எதிராகவே செயல்படுவதையும் தெளிவுபடுத்துகிறார். தலித்துகள் தம் மீதான தாக்குதல்கள் குறித்து காவல்நிலையங்களில் புகார் அளிக் கும் நிலைமைகூட சுதந்திரமாக்கப்படவில்லை. புகார் ஏற்கப்பட்டாலும் அதன் பிந்தைய விசாரணைகள் தலித்துகளை மிரட்டுவதாக உள்ளது. வழக்குகளில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்கள்கூட தலித் மக்கள் ஆதரவாளராகவோ, தலித் கண்ணோட்டம் கொண்டவரா கவோ இருப்பதில்லை. இறுதியாக வழக்கு  இழுத்தடிக்கப்பட்டு நீதி தாமதமாக்கப்படுகிறது. இது ஆதிக்க சக்திகளுக்கு சாதகமாகவே முடிகிறது என்று கூறும் டெல்டும்டே தேசிய குற்றப்புள்ளிவிவரங்க ளில் இருந்து ஏராளமான தகவல்களை வழங்குகிறார். எனவே இந்திய சமூகம் முழுவதும் புரையோடியுள்ள சமூகப் படிநிலை ஆதிக்க மனோபாவம் அகலாமல் இது அகலாது. ஏனெனில், இதை எதிர்த்து பலாத்காரரீதியில் போராடும் வலிமை தலித்துகளிடம் இல்லை.

சமூக, பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் எண்ணிக்கை அளவிலும் குறைவானவர்களாக உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். நிலத்தினைத் தேசியமயமாக்குவதில் இப்பிரச்சனைக்குத் தீர்வு இணைந்துள்ளது. அதை உணர்ந்ததால்தான் ஒப்புக்கு நிலச்சீர்திருத் தம் என்பதைவிட, நில தேசியமயமாக்கம் மிக முக்கியத்துவம் வாய்ந் தது என அம்பேத்கர் வலியுறுத்தினார். இதனை மேற்கொள்ள ஆட்சியில் நிபந்தனையற்ற புரட்சி  ஏற்படவேண்டும். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமைகள் சென்றுசேர வேண்டு மானால், உண்மையான ஜனநாயக நிறுவனங்கள் அமைத்து  அவற்றை ஆளும் வர்க்கம் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் இப்படியான நிலை உருவாகியிருக்காது. ஆனால், உண்மையில் எந்தவிதமான நிர்வாகப் புரட்சியையும் மேற்கொள்ளும் நிலையில் அரசு இல்லை. இந்திய அரசு நிர்வாகிகள் அதாவது மத்திய தர வர்க்க அதிகாரிகள் முதலாளித்துவ அமைப்பைவிட பிற்போக்கு விசுவாசிகளாக உள்ளனர். இன்று  தலித் உரிமைகளைப் பாதுகாக்கப் பல சட்டங்களும், அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ள போதும் அவர்கள் அதைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதில்லை. விடுதலையால் தலித்துகள் எதையும் அடையவில்லை என்றும் சொல்ல முடியாது. வழங்கப்பட்ட பாதுகாப்பு ஒருசில தலித்துகளுக்கு சென்றுசேர்ந்துள்ளது. ஆனால், சாதியப் படிநிலை மாறவில்லை. மாறாக சாதிகள் பெருகிவருகின்றன.

விடுதலை இந்தியாவின் தொடக்க ஆண்டுகள் சாதிய சமத்துவத்தில் குறிப்பிட்ட முன்னேற்றம் அடைந்தபோதும், குறிப்பிட்ட தனிநபர்கள் மட்டுமே வளர்ச்சியின் பலன்களை அனுபவிக்கும் நிலைமைகள் மேலும், மேலும் உருவா னதைத் தொடர்ந்து அதில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலைமை கள் பழையபடி உள்சாதிகளை உருவாக்குவதிலும், உள் சாதிப் புனிதங்களிலும் சிக்கத் தொடங்கியுள்ளது. ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களுக்குள்ளேயே உள்சாதி பெருமை பேசும் அவல நிலைக்கு சமூகம் தாழ்ந்துள்ளது. புதிய சமுதாய நிலைகளில் பார்ப்பனியத்துக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் என்ற அம்பேத் கரிய கண்ணோட்டம் அகன்ற நிலையில், முக்கியமான மகர் சாதியில் கூட உள்சாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு தங்களுக்குள் உயர்வு- தாழ்வு பார்க்கும் நிலை தோன்றியுள்ளது. இச்சூழ்நிலையில் கயர்லாஞ்சிகள் முக்கியத்துவம் வாய்ந்த அபாய எச்சரிக்கைகள் என்று டெல்டும்டே வருத்தத்துடன் முன்னறிவித்திருக்கிறார்.

- அப்பணசாமி

Tuesday, October 26, 2010

இடிக்கப்பட்டது சுவர் மட்டுமா...


ஆதவன் தீட்சண்யா


1.

சர்ச்சைக்குரிய சுவர் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருசாரார், தங்கள் குடும்ப அட்டைகளை அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைத்தனர்..... , சர்ச்சைக்குரிய சுவற்றை இடித்து தங்கள் சமூகத்தை அரசு அவமதித்துவிட்டதைக் கண்டித்து ஒருசாரார் ஊரைவிட்டு வெளியேறி மலையடிவாரத்தில் வெட்டவெளியில் குடியேறினர்... ஊரைக் காலி செய்து மலையடிவாரத்தில் தங்கியிருந்தவர்கள் கொட்டும் மழையிலும் வெட்டவெளியிலேயே இருந்ததால் இன்னின்னாருக்கு சளி, இருமல். இத்தனைபேருக்கு காய்ச்சல்.... அரசாங்கம் தருவதற்கு முன்வந்த மருத்துவ சிகிச்சைகளை ஏற்க மறுப்பு... - இப்படியாக உத்தப்புரம் சுவர் இடிப்பை எதிர்ப்பவர்கள் மீது அனுதாபம் சுரக்குமளவுக்கு பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பதற்றத்தோடு வெளியாகும் செய்திகளின் பின்னுள்ள உண்மைதான் என்ன? அந்த சுவர் யாரால் எதற்காக எப்போது ஏன் கட்டப்பட்டது, இப்போது ஏன் எதற்காக யாரால் இடிக்கப்பட்டது? சர்ச்சை என்ற வார்த்தை இங்கே எதைக் குறிக்கிறது என்பவற்றைப் பற்றிய முழுமையான தகவல்களை இந்த ஊடகங்கள் மக்களுக்குத் தெரிவிக்கின்றனவா?

Uthapuram மேற்கு மகாராஷ்ட்ராவில் கொய்னா அணைக்கட்டின் காரணமாக இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட தலித்துகளும் மராத்தாக்களும் வேறொரு இடத்தில் குடியமர்த்தப்பட்டனர். தலித்துகள் வாழும் பகுதி பீம் நகர். மராத்தாக்கள் வாழும் பகுதி டேர். இரு சமூகத்தவருக்கும் பொதுவான சமுதாயக்கூடத்தை தலித்துகள் பயன்படுத்த முடியாத வண்ணம் மராத்தாக்கள் மதில்சுவர் எழுப்பி தடுத்துவிட்டனர். சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி நீதிமன்றம் மூலமாக சுவற்றுக்கு ஒரு சட்டப்பூர்வ ஒப்புதலையும் பெற்றுவிட்டார்கள். சுவற்றை இடிக்காவிட்டால் 14.04.2008 அம்பேத்கர் பிறந்த நாளன்று தாங்கள் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தலித்துகள் அறிவிக்க வேண்டியிருந்தது. (பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு விசயத்தில் கண்மூடித்தனமான உயர்சாதி மனேபாவத்தோடு செயல்பட்டாலும்) மிகவும் உள்ளொடுங்கிய கிராமமொன்றில் நடந்த அந்த தீண்டாமைக் கொடுமையை வெளிப்படுத்தி தலித்துகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் சுவற்றை இடிக்க வைத்ததில் ஆங்கில ஊடகங்களின் பங்கு பாராட்டுதலுக்குரியது. வலுவான மக்கள் இயக்கங்கள் இல்லாத இடங்களில் ஊடகங்கள் மக்களின் கண்ணிய வாழ்வுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் ஊடகங்களும் துணைநிற்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்று.

உத்தப்புரம் விசயத்தில் ஊடகங்கள் அப்படி ஒருபால் கோடாமையோடு நடுநிலையாக- அதாவது நியாயத்தின் பக்கம் நிற்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. செய்திகளின் நம்பகத்தன்மை, ஊடகத்துறையில் சாதி வகிக்கும் பாத்திரத்தை முன்வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் உத்தப்புரம் பிரச்னை அணுகப்படுகிறது.. சுவர் எழுப்பப்பட்டதன் பின்னணியில் உள்ள சாதிப் பாகுபாட்டையோ, அதனால் தலித்துகள் அடைந்துள்ள அவமானவுணர்வையோ, அது இடிக்கப்படுவதில் உள்ள நியாயத்தையோ மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு பதிலாக சுவர் விரும்பிகளின் செய்திகளுக்கே கூடுதல் அழுத்தம் கொடுக்கின்றனர். வட்டார நிருபர்கள் தங்களது சாதிச் சாய்மானத்தை - தலித் எதிர்ப்பு நிலையை கைவிட்டுவிட்டு பிரச்னையை அணுக முன்வருவார்களேயானால் உத்தப்புரம் சுவரைப் போன்ற நூற்றுக்கணக்கான தீண்டாமைக் கொடுமைகளை வெளிக் கொணர முடியும்.

2.

பெரும்பாலான கிராமங்களில் ஊர்க்கூட்டம் என்ற பெயரால் நடத்தப்படும் கட்டப்பஞ்சாயத்துகள் ஆதிக்கசாதியினரின் தேவைகளை நிறைவேற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. சுயேச்சையான அரசியல் பொருளாதார பலமற்று தமது வாழ்வாதாரங்களுக்கு ஆதிக்கசாதியினரை அண்டி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தலித்துகள் ஊர்க்கூட்டத்தின் பெயரால் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கீழ்ப்படிந்தேயாக வேண்டிய நிலையுள்ளது. எனவே, மதுரை மாவட்டம் பேரையூர் ஒன்றியத்திலுள்ள உத்தப்புரம் கிராமத்தில் 1990ல் தலித்துகளும் தலித்தல்லாதவர்களும் கூடிப் பேசி ஒருமனதாக எழுப்பிக் கொண்டதே அச்சுவர் என்று புதிதாக கிளப்பிவிடப்பட்டுள்ள தலபுராணமானது அப்பட்டமான பொய். தலித்தல்லாதவர்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்துகொண்டு நெருக்குகிறபோது அதற்கு உடன்படுவதைத் தவிர தலித்துகளுக்கு வேறு வழியிருந்திருக்கவில்லை என்பதே உண்மை.

ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியானதைப் போல அந்த சுவர் 600 மீட்டர் நீளமுள்ளது அல்ல என்றும் வெறும் 149 மீட்டர் நீளமேயுடையதென்றும் அதன் நீள அகலங்களின் துல்லியம் குறித்த சர்ச்சையும் கிளப்பிவிடப்பட்டுள்ளது. ஊரின் எந்த மூலையிலும் தலித்துகள் நுழைந்துவிடாதவாறு வளைத்து வளைத்து சுவர் கட்டப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வியை திசைதிருப்பவே இந்த நீள அகல ஆராய்ச்சி பயன்படுத்தப்படுகிறது. ஒரு வாதத்திற்காக 149 மீட்டர் மட்டுமே சுவர் கட்டப்பட்டிருப்பதாக வைத்துக் கொண்டாலும், தலித்துகளை ஊருக்குள் நுழைய விடாமல் தடுப்பது குற்றம்தானே? இதுபற்றி எந்த நடுநிலை நாளேடும் வாய் திறக்காதது என்?

இரவுநேரங்களில் மின்சாரம் பாய்ச்சப்படுவதாக சொல்லப்படுவதும் பொய்தான் என்கின்றனர் சுவர் விரும்பிகள். அப்படியானால் 17.04.08 அன்று ‘தி இந்து’ நாளிதழில் வெளியான புகைப்படம் எதை உணர்த்துகிறது? அன்றைய தினமே சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் தோழர் நன்மாறன் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசியபோது குறுக்கிட்ட மின்துறை அமைச்சர், மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் மின் கம்பிகளை அகற்றிவிட்டதாகவும் தெரிவித்தது பொய்யா?

தனிப்பட்டவர்கள் தமது சொந்த பட்டா நிலத்தில் தத்தமது பாதுகாப்புக்காக வீட்டின் பின்புறம் கட்டிக்கொண்ட மதிற்சுவர்களின் இணைப்புதானேயன்றி அது திட்டமிட்டு கட்டப்பட்டதல்ல என்றும் வாதிடப்படுகிறது. அவரவர் தம் விருப்பத்திற்கு வீட்டுக்குப் பின்னால் கட்டிக் கொண்டார்களென்றால், ஊர்க்கூட்டம் போடப்பட்டதும் சுவர் கட்டுவது குறித்து முடிவெடுத்ததும் அதில் தலித்துகளை மிரட்டி கையொப்பம் பெறப்பட்டதும் எதற்காக? அவரவர் நிலத்தில் கட்டிக்கொள்ளப்பட்டது என்றால் ஊர் புறம்போக்கில் பொதுப்பயன்பாட்டிற்கென அமைந்திருந்த பாதையை மறித்துக் கட்டியது யார்? அரசாங்க நிலத்தை ஆக்ரமித்து சட்டவிரோதமாய் சுவரெழுப்பிய அந்த குற்றவாளி தனிநபரா அல்லது உத்தப்புரம் பிள்ளைமார் அனைவருமா?

தவிரவும் இங்கு ‘பாதுகாப்புக்காக’ என்ற வார்த்தைப் பயன்பாட்டை கவனிக்க வேண்டியுள்ளது. நாடு முழுவதும் ஆதிக்கசாதியினரால் தலித்துகள் நாளும் நொடியும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், உத்தப்புரத்தில் மட்டும் விதிவிலக்காக தலித்துகளால் ஆதிக்கசாதியினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அளந்துவிடும் கதைகளை யார்தான் நம்புவது? திருடுவது, பெண்களிடம் வம்பாடுவது போன்ற குற்றங்களைச் செய்கிற சிலர் பிள்ளைமார் உட்பட எல்லாச் சாதியிலும் இருக்கிறார்கள். அப்படியிருக்க, உத்தப்புரம் தலித்துகள் அனைவரையும் திருடர்களாகவும் பெண்களை சீண்டுகிறவர்களாகவும் குற்றம் சாட்டி அவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவே சுவர் கட்டினோம் எனக் கூறுவதை ஏற்க முடியாது. ஒட்டுமொத்தமாக ஒரு சாதியையே குற்றவாளிகளாக சிறுமைப்படுத்தி குணச்சிதைவைப் பூசுவதும் தீண்டாமை வன்கொடுமையின் இன்னொரு வடிவமேயாகும்.

- இப்படி சுவர் கட்டிய குற்றத்தை மறைக்க அடுத்தடுத்து பல பொய்களை சுவர் விரும்பிகள் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்க, இவ்விசயத்தில் பல கட்சிகள் பெரிய பெரிய பிளாஸ்திரிகளை ஒட்டிக்கொண்டு வாய் திறக்காமல் கிடந்தன. இதில் ஆளுங்கட்சி - ஆளாத கட்சி, தலித் கட்சி - தலித்தல்லாதவர் கட்சி என்று எந்த பேதமும் இல்லை. உத்தப்புரத்தின் பிள்ளைமார் சாதிக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்குமான தனிப்பட்ட பிரச்னையாக இதை மாற்றிவிடப் பார்த்தன. அதேநேரத்தில், ஆதிக்கசாதியினரின் குற்றங்களை கண்டிக்கும் திராணியற்ற தமது அரசியல் கோழைத்தனத்தை மறைக்க, அரசியல் ஆதாயத்துக்காக தலித்துகளை தூண்டிவிடுவதாக மார்க்சிஸ்ட் கட்சி மீது புகார் கூறவும் அவை தயங்கவில்லை.. சுவற்றை இடிக்கச் சொல்வது அரசியல் ஆதாயத்துக்காக என்றால் அதுபற்றி கருத்து தெரிவிக்காமல் இருப்பதும் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் என்ற குறைந்தபட்ச தர்க்கத்தைக் கூடவா மக்களால் புரிந்து கொள்ளமுடியாது?

சுவற்றை இடி அல்லது இடிப்போம் என்ற முழக்கத்தோடு மார்க்சிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் 2008 ஏப் 29 அன்று இரண்டாயிரம் பேருடன் ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும்கூட கட்சிகளிடம் எந்த அசைவும் இல்லை. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பகுதியாக கலந்துகொண்ட உத்தப்புரம் தலித்துகளின் உணர்வுகளை, அவர்களின் ஏகோபித்த தலைவராய் அன்றுவரை இருந்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமியால்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. உத்தப்புரம் கிராமத்தோடு தனக்கு கடந்த பத்தாண்டுகளாக தொடர்பிருப்பதாகவும், ஆறேழுதடவை அங்கு போய் வந்திருப்பதாகவும், தன்னிடம் இந்த சுவர் பற்றி யாருமே புகார் சொல்லவில்லை என்றும் கூறியதோடு, சுவற்றைக் கட்டியுள்ள பிள்ளைமார் சாதியினர் ஆதிக்கசாதியினரிலேயே மிகவும் மிதமானவர்கள் என்றும் நற்சான்று வழங்கினார் கிருஷ்ணசாமி.

அத்தோடு அவர் நிற்கவில்லை. தன்பாட்டுக்கு நின்று கிடக்கும் சுவரை இடிப்போம் தகர்ப்போம் என்று அரசியல் ஆதாயத்துக்காக சில கட்சிகள் தலித்துகளை தூண்டிவிடுகின்றன. அவர்கள் பின்னால் சென்றுவிடாதீர்கள் என்று தலித்துகளை எச்சரிக்கவும் செய்தார் கிருஷ்ணசாமி. சாதிய மோதல்கள் முடிவுக்கு வந்து இணங்கி வாழும் இந்த நேரத்தில் சுவர் பிரச்னையை எழுப்பினால் பிற சாதியினர் ஒன்று சேர்ந்துகொண்டு தலித்துகளை தனிமைப்படுத்திவிடுவார்கள் என்பதே அவர் தினத்தந்தியிலும் டெக்கான் கிரானிக்களிலும் கொடுத்த பேட்டியின் சாரம்.

கிருஷ்ணசாமியின் இந்த எச்சரிக்கை நமக்கொன்றும் புதிதல்ல. ஒடுக்குமுறையை ஒடுக்குமுறை என்று உணர்ந்து எதிர்க்காதவரை, இணங்கி வாழ்வதாக தோற்றம் காட்டுவதில் சிக்கலொன்றும் இல்லைதானே? சாதியொடுக்குமுறை இருப்பதாக கேள்வியெழுப்பும் போதெல்லாம் ‘எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை, தாயாப்புள்ளையா கூடிக்குலாவி வாழ்கிறோம்’ என்பதான வசனங்களை எவ்வளவு காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்?

Prakash Karat in Uthapuram எதிர்த்தால் தலித்துகளை தனிமைப்படுத்திவிடுவார்கள் என்ற கிருஷ்ணசாமியின் அச்சம் நியாயமானதுதான். ஆனால் பயந்தே கிடந்தால் எப்போதுதான் எதிர்ப்பது? எதிர்த்துப் பேச அஞ்சியிருந்தால் இமானுவல் சேகரன் என்ற தியாகி கிடைத்திருப்பாரா? தலித்துகளின் பெருமைக்குரிய முன்னோர்களில் ஒருவரான வீரன் சுந்தரலிங்கம் கையில் பளபளக்கும் வாளை வெறும் அட்டைக் கத்தியாக குறுக்கும் அதிகாரம் தனக்கில்லை என்பதை கிருஷ்ணசாமி உணர வேண்டும். அடித்தால் திருப்பி அடி என்ற ஆவேச முழக்கமெல்லாம் சுவற்றில் எழுதப்படும் வெற்று வாசகங்களாக தேய்ந்துபோனால் தலித்துகள் எப்போதுதான் சுயமரியாதையோடு வாழத் தொடங்குவது என்பது பற்றி, மீசையை முறுக்கி போஸ் கொடுப்பதிலேயே பொழுதைக் கழிக்கும் பிற தலித் தலைவர்களும் சற்றே யோசிக்க வேண்டியுள்ளது.

கட்சிகள் தான் இப்படியென்றால் வாழும் சமத்துவப் பெரியாரின் ஆட்சி சுவர் பிரச்னையை எவ்வாறு அணுகியது என்று பார்ப்போம். தமிழக மக்களின் பிரச்னை என்றால் பிரதமருக்கு ஆறஅமர கடிதம் எழுதுவதும், தமது குடும்ப விசயமென்றால் பதறியடித்து ஃபேக்ஸ் அனுப்பிவிட்டு நேரடியாய் ஆளம்புகளையும் ஏவிவிடுகிற ராஜதந்திரியை முதல்வராகப் பெற்றிருக்கிற இம்மாநில அரசாங்கத்தின் நடவடிக்கை சுவர் பிரச்னையை மேலும் மேலும் சிக்கலாக்கியது. களஆய்வில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் 2008 பிப்ரவரி 22 அன்றே இப்பிரச்னையை மார்க்சிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டன. அரசின் தரப்பில் அசைவில்லை.

மார்ச் 25 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு தரப்பட்டது. நடவடிக்கை இல்லை. ஏப்ரல் 17ம் தேதி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டது. மின் இணைப்புதான் துண்டிக்கப்பட்டதேயன்றி சுவர் விசயத்தில் நடவடிக்கை இல்லை. சுவரை இடிக்குமாறு சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தும், மாநிலக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியும் கூட பலனில்லை. ஏப்ரல் 29ம் தேதி ஆர்ப்பாட்டத்துக்கும் அசரவில்லை. ஆறப்போட்டு ஊறப்போட்டு, ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்று இழுத்தடிப்பின் மூலம் தீவிரத்தை நீர்த்துப்போக வைக்கமுடியுமா என்ற ரீதியிலேயே பிரச்னை அணுகப்பட்டது. கோடநாடு எஸ்டேட் விசயத்தில் காட்டுகிற வேகத்திலும் விவேகத்திலும் இத்துனூண்டு காட்டியிருந்தால்கூட ஒரு தீர்வை எட்டியிருக்க முடியும்.

தீண்டாமையைக் குற்றமாக அறிவிக்கும் சட்டம் அமலில் உள்ள இந்த நாட்டில் இவ்வளவு வெளிப்படையாக தீண்டாமையை அறிவிக்கும் வகையில் சுவரெழுப்பிய பிள்ளைமார்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்திருக்க வேண்டும், சுவற்றையும் இடித்துத் தள்ளியிருக்க வேண்டும். சாதிகளைக் கடந்து ஒரு சமூகமாக இணங்கி வாழ்வதை உத்திரவாதப்படுத்தியிருக்க வேண்டும். அதுவும் முடியாதபோது இந்த நாட்டின் அரசியல் சட்டம் முன்மொழிகிற சமத்துவத்தை மதிக்காத குற்றத்திற்காக அவர்களது குடியுரிமையை ரத்து செய்து அவர்களிடமிருந்து குடும்ப அட்டைகளை அரசாங்கம் பறிமுதல் செய்திருக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டிருக்க வேண்டும். நாட்டின் இயற்கை மற்றும் பொதுவளங்களையும் நிதியாதாரங்களையும் பயன்படுத்துவதிலிருந்து அவர்கள் முற்றாக விலக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டும். மொத்தத்தில் தீண்டாமையை கடைபிடிக்கிற அவர்கள் இச்சமூகத்தின் எல்லா முனைகளிலும் தளங்களிலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது சாதிவெறி என்னும் மரபுரீதியான மனநோயால் பீடிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் மனநல மருத்துவமனையிலாவது சிகிச்சைக்கு சேர்த்திருக்க வேண்டும். ஆனால் இதில் எதுவொன்றையும் செய்கிற சொரணையும் அரசியல் உறுதிப்பாடும் ஆட்சியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இல்லாது போய்விட்டது.

சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பெயரால் தங்களை தாஜா செய்யவே நிர்வாகம் முயற்சிக்கிறது என்பதை புரிந்துகொண்ட பிள்ளைமார்கள் மிகுந்த இளக்காரத்தோடும் செருக்கோடும்தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருக்கிறார்கள். தீண்டாமையை கடைபிடிப்பதை தங்களது பிறவி உரிமைகளில் ஒன்றாகக் கோருகிற அவர்களுக்கெதிராக கடுமை காட்டாததன் விளைவு, சுவர் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் தமது குடும்ப அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் துணிவைக் கொடுத்துள்ளது.

நாட்டின் அவமானச் சின்னங்களில் ஒன்றாக இருக்கும் அந்த தீண்டாமைச் சுவரை பார்வையிட்டு காறியுமிழ மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் 07.05.2008 அன்று உத்தப்புரத்திற்கு வருவதாய் அறிவிக்கப்பட்ட நிலையில், அதுவரை மந்தகதியில் இருந்த நிர்வாகம் சற்றே பதற்றமடைந்து களமிறங்கியது. 05.05.08 அன்றிரவு பெரும் எண்ணிக்கையிலான போலிசாரை கிராமத்திற்குள் இறக்கி 06.05.08 காலையில் இருபதடி சுவற்றை இடித்து பொதுப்பயன்பாட்டுக்கான ஒரு பாதையை நிறுவியுள்ளது.

3.

‘இடிக்கப்பட்டது உத்தப்புரம் சுவர். தலித்துகள் புழங்குவதற்கான பொதுப்பாதை நிறுவப்பட்டுவிட்டது...’ என்ற செய்தியைக் கேட்டதும் புதுதில்லியிலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் எல்லோருக்கும் இனிப்பு வழங்கப்பட்டதாய் கேள்விப்பட்டேன். ஊர் முழுவதையும் வளைத்து வளைத்து எழுப்பியுள்ள சுவற்றில் வெறும் இருபது அடியை இடித்ததற்கா இவ்வளவு கொண்டாட்டம் என்று தோன்றியது. ஆனால் சுவற்றைக் கட்டிவைத்திருந்த சாதிவெறியர்கள் இந்த இருபதடி இடிப்புக்குக் காட்டிய எதிர்வினையைக் கண்ட பிறகுதான், அந்த சுவற்றிலிருந்து ஒரேயொரு ஒற்றைச் செங்கல்லை உருவியிருந்தாலும்கூட அது கொண்டாடப்பட வேண்டிய வெற்றியே என்பது உறைத்தது.

Uthapuram Dalits ஏற்கனவே அறிவித்திருந்தபடி தோழர் பிரகாஷ் காரத் 07.05.08 காலை உத்தப்புரம் வந்து சுவர் இடிக்கப்பட்ட பகுதியில் பொதுப்பயன்பாட்டுக்காக போடப்பட்டிருந்த புதிய பாதையையும் இன்னும் எஞ்சியிருக்கிற சுவற்றையும் பார்வையிட்ட பிறகு ஊர் மந்தையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தலித்துகளிடையே உரை நிகழ்த்தினார். தங்களுக்கென்று அமைக்கப்பட்டிருந்த புதியபாதையில் நடப்பதில் ஏற்படும் சுதந்திரவுணர்ச்சியை அனுபவிக்கும் பேரார்வம் கண்ணில் பொங்க காத்திருந்த அந்த உத்தப்புரம் தலித்துகளோடு சேர்ந்திருந்த அந்தப் பொழுதை வாழ்வின் உணர்ச்சிமயமானதொரு திருப்பமாகவே உணர்கிறேன்.

இந்த பூமியில் ஒவ்வொரு அடியை எடுத்து வைப்பதற்கும் ஒரு தலித் போராட வேண்டியிருக்கிறது என்ற உண்மையை உணர்த்துகிறவர்களாக அவர்கள் வெயிலிலே தகதகத்துக் கொண்டிருந்தார்கள். (கூட்டத்திடலுக்கு அருகேயிருந்த ஒரு சுவற்றில் ‘சமத்துவப்போராளி’ என்ற பட்டத்துடன் மருத்துவர் கிருஷ்ணசாமியின் படம் போட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டதைக் கண்டதும் எனக்கு தாளமுடியாத சிரிப்பு. அன்று காலையில் மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய சரத்குமாரைப் பார்த்து அவரது தொண்டர்கள் ‘சமத்துவ நாயகன்’ என்று கோஷம் எழுப்பியபோதும் எனக்கு இதேமாதிரியான சிரிப்பு வந்து தொலைத்தது).

இதுவரை பபுள்கம் மென்றுகொண்டிருந்த அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் சுவர் இடிப்புக்குப் பிறகு வாய் திறந்தன. அரசியல் ஆதாயத்திற்காக மார்க்சிஸ்ட்டுகள் சுவர் பிரச்னையை எடுத்திருப்பதாகப் பொருமினார்கள். அடப்பாவமே, கட்சி என்பது அரசியல் ஆதாயத்திற்காகத்தான் இயங்குகிறது என்ற புரிதலில்லாமல் இருக்கிறார்களே... ஒருவேளை பொருளாதார ஆதாயத்திற்கென்று இருப்பதுதான் கட்சி என்று இவர்கள் தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ?

கம்யூனிஸ்ட்கள் தலித்துகள் பிரச்னையை முன்வைத்துப் போராடுவதில்லை என்று குற்றம் சாட்டுவதும், தலித்துகள் பிரச்னையை முன்வைத்து கம்யூனிஸ்ட்டுகள் போராடும்போது மிகுந்த மனத் தொந்தரவுக்குள்ளாகி, தமக்குப் பாத்தியப்பட்ட ராஜ்ஜியத்துக்குள் அந்நியர் நுழைந்துவிட்டதைப் போன்ற அசூயை உணர்வுக்கும் அச்சவுணர்வுக்கும் ஆட்பட்டு குதர்க்கமான சந்தேகங்களை எழுப்புவதுமாகிய பலவீனத்திலிருந்து தலித் முரசு போன்ற பத்திரிகைகளும் விடுபட வேண்டியிருக்கிறது. இம்மாத தலையங்கத்தில், சுவர் பிரச்னையை மார்க்சிஸ்ட் கட்சிதான் கையிலெடுத்துப் போராடுகிறது என்று சொல்வதற்குக்கூட அதற்கு மனம் வரவில்லை. சிலர் என்றே குறிப்பிடுகிறது. எல்லாவற்றுக்கும் மதமாற்றமே தீர்வு என அது இந்த தலையங்கத்திலும் குறிப்பிடுகிறது.

தலித்துகள் எந்த மதத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டாலும் அவர்களை தலித்துகளாகவே பிறர் பார்க்கின்றனர் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள அது தயாராயில்லை. சரி, தலித்துகள் பௌத்தத்தை தழுவிவிட்டதாகவே வைத்துக்கொள்வோம். அப்போது சுவற்றைக் கட்டியவர்களே அதை இடித்துவிடுவார்களா? கிருஷ்ணசாமிக்கு ஆரோக்கியமான மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. உத்தப்புரம் சுவர் போன்ற பல தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தலித் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை இடதுசாரிகள் ஆதரிக்க வேண்டும் என்று பரந்த ஒற்றுமைக்கு அறைகூவல் கொடுத்திருக்கிறார். அந்த சுவற்றை இடிக்க இடதுசாரிகள் நடத்தியப் போராட்டத்தை தான் ஏன் ஆதரிக்கவில்லை என்பது பற்றி அவர் எப்போதாவது சொல்வார் என்று நம்புவோமாக. சுவர் பற்றிய எல்லா உண்மைகளும் வெளியாகிவிட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போதுதான் ‘உண்மையறியும்’ குழுவை நியமித்திருக்கிறது. இனிமேல் அது கண்டறியப் போகும் புதிய உண்மைகளை வரவேற்க நேரமிருப்பவர்கள் காத்திருக்கவும்.

சுவர் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலித்தல்லாதவர்கள் ஊரை காலிசெய்துவிட்டு மலையடிவாரத்திற்கு சென்று காற்றிலும் மழையிலும் வெயிலிலும் குளிரிலும் வெட்டவெளியிலேயே குழந்தைக் குட்டிகளோடு தங்கியிருப்பதாக ஊடகங்கள் புலம்பத் தொடங்கின.

1989 சாதிக் கலவரங்களையொட்டி தலைமறைவாகி திருப்பூருக்கு ஓடிப்போய் கொஞ்சம் பசையுள்ளவர்களாக வளர்ந்திருக்கும் உத்தப்புரம் பிள்ளைமார் திருப்பூரிலிருந்து திரட்டிக்கொண்டு வந்திருக்கும் ஆட்களின் துணையோடு தலித்துகளின் தோப்புகளை ஆக்கிரமித்து அங்குதான் பிள்ளைமார் அனைவரும் தங்கியிருக்கிறார்கள் என்ற உண்மையைச் சொல்ல எந்த ஊடகமும் தயாரில்லை.

தாக்குதலுக்கான முன்தயாரிப்போடு கத்தி கபடா அருவாக்கம்பு போன்ற ஆயுதங்களை திரட்டிக் கொண்டு வந்துள்ள அவர்களைத் தடுத்தால் பிரச்னை வேறுவகையாக திசைதிரும்பிவிடும் என்ற நன்னோக்கில் தலித்துகள் அமைதி காத்து வருகின்றனர் என்பதையும், தங்களது தோப்புகளை மீட்டுத் தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்திருக்கிறார்கள் என்பதையும்கூட தெரிவிக்க ஊடகங்கள் முன்வரவில்லை. தலித்துகளின் மூச்சுக்காற்று பட்டால்கூட தீட்டு பாய்ந்துவிடும் என்று அலட்டிக்கொள்கிறவர்களுக்கு, தலித்துகளின் தோப்புகள் இப்போது புனிதச்சோலையாய் தெரிகிறது போலும்.

07.05.08 நாங்கள் சென்றிருந்தபோது உத்தப்புரத்தில் தலித்தல்லாதவர்கள் வீடு அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. தன் பிதிரும் பிள்ளைகளும் வனவாசம் போயிருக்கிற விசயம் தெரியாமல் ஒரேயொரு மூதாட்டி மட்டும் எல்லோரும் தன்னை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டார்களென புலம்பிக் கொண்டிருந்ததது. ஊரை விட்டுப் போனாலும் போவோமே தவிர தீண்டாமையைக் கைவிட முடியாது என்கிற சாதியாணவத்தில் திளைத்திருக்கிற பிள்ளைமார்கள், கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து தங்களைக் காப்பாற்ற ‘மகாத்மாவே எழுந்து வாரீர்’ என்று சுவரொட்டி வெளியிட்டிருந்த கேவலத்தையும் கண்டோம். காந்தி இருந்திருந்தால் இவர்கள் மீது காறித் துப்பியிருப்பார்.

வனவாசத்தில் இருக்கும் அவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்க 09.05.2008 அன்றுதான் பாரதீய ஜனதா கட்சியினர் நுழைந்துள்ளனர். இன்னும் சில தினங்களுக்குப் பின், இந்த சுவர் யாராலும் கட்டப்பட்டதல்ல, அது 5 லட்சத்து 13 ஆயிரத்து 743 வருடங்களுக்கு முன்பு தனக்குத்தானே சுயம்புவாக உருவானது என்ற புதிய கதை ஒன்று கிளம்புவதற்கான வாய்ப்புமுள்ளது. ஏனென்றால் நாட்டில் எந்த கட்டுமானம் எப்படி உருவானது, அதை இடிக்கலாமா கூடாதா என்பதற்கான நாள் தேதி நட்சத்திரம் பற்றிய சகல தஸ்தாவேஜூகளும் தங்களிடம் இருப்பதாக கப்சா விடுவதில் அவர்களுக்கு இணையாக இங்கு யார் இருக்கிறார்கள்?

உத்தப்புரம் சுவர் பிரச்னையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாதிருக்கும் முக்குலத்தோரை எப்படியாவது இழுத்துவிட்டு தலித்துகளையும் முக்குலத்தோரையும் மோதவிட வேண்டும் என்று ஒரு கோஷ்டி களமிறங்கியுள்ளது. உத்தப்புரம் அருகேயுள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியிலுள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அவமரியாதை செய்து பழியை தலித்துகள் மீது சுமத்திவிட்டால் அவர்கள் எதிர்பார்க்கிற மோதல்கள் தொடங்கிவிடும் என்று காய் நகர்த்துகிறார்கள். சிலைகளை முன்வைத்து மனிதர்களை பலிகேட்கும் சாதிவெறியை கட்டுக்குள் நிறுத்த, சிலையை அவமதித்த உண்மையான குற்றவாளிகளை கைதுசெய்ய தமிழக அரசு முனைப்புடன் இயங்க வேண்டும்.

உத்தப்புரத்தில் அடைந்திருக்கும் விடுதலையுணர்ச்சி ஒவ்வொரு கிராமத்துக்கும் பரவுமானால், ஒடுக்குமுறை சாதியாதிக்கத்தை தலித்துகள் தகர்த்துவிடுவார்கள் என்ற அச்சத்தை முன்வைத்து இடைநிலைச்சாதிகளை தலித்துகளுக்கு எதிராக அணிதிரட்டும் வேலையும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தோப்புக்குள் தங்கியிருப்பவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க மூவேந்தர் முன்னேற்றக் கழக பொறுப்பாளிகள் வந்து போயிருக்கின்றனர். தோப்புக்குள்ளிருப்பவர்களை சமாதானப்படுத்தி ஊருக்குள் அழைத்துவரும் முயற்சியில் ஆளுங்கட்சியினரும் ஈடுபட்டிருக்கிறது. தோப்புக்கு உணவுப் பொருட்களை அனுப்பி பிள்ளைமார்களின் சாதிவெறியுடன் ஒருமைப்பாடு தெரிவிப்பதில் அக்கம்பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த சில இடைநிலைச் சாதிகளும் ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.

தலித்துகளின் தன்மான உணர்வையும் கல்வி பொருளாதார பண்பாட்டு வளர்ச்சியையும் காணச் சகியாத பல்வேறு குமைச்சல்களையும் பொருமல்களையும் உத்தப்புரத்தை மையமாக வைத்து ஒருங்கிணைக்கவும் தலித்துகளை தனிமைப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளிலிருந்தும் தம்மைப் பாதுகாக்கும் நிலைக்கு தலித்துகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இருபதடி சுவற்றை இடித்ததற்கே இவர்களுக்கு இவ்வளவு கோபம் வருமென்றால், சிறைக்குள் அடைக்கப்பட்டதுபோல திரும்பிய பக்கமெல்லாம் தென்படும் மதில்சுவற்றுக்குள் பதினெட்டு ஆண்டு காலமாக முடக்கப்பட்டிருந்த தலித்துகள் மனதில் எவ்வளவு கொந்தளிப்பு இருக்கும் என்ற நியாயத்தைப் பேச இன்று மார்க்சிஸ்ட்டுகளைத் தவிர வேறு யார்தான் இருக்கிறார்கள் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். நீங்களும்.....


Wednesday, October 20, 2010

தமிழன் என்று சொல்வது வெட்டிப் பெருமை.....

 ஆதவன் தீட்சண்யா
நேர்காணல்: மினர்வா & நந்தன்


Aadhavan Dheetchanya தன்னுடைய எழுத்து, இயக்கம் எல்லாம் மக்களுக்காகவே’ என்று இயங்கும் தமிழ் படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் ஆதவன் தீட்சண்யா. புறத்திருந்து, பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம், தந்துகி எனும் மூன்று கவிதை நூல்களையும், எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசி பக்கங்கள் எனும் சிறுகதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். கட்டுரையாக எழுத வேண்டிய ஒரு செய்தியை சிறுகதையாக எழுதுவதும், ஒரு நாவலுக்கான கருப்பொருளை ஒரு கவிதையில் பொருத்திச் செல்வதும், எழுத்தில் புதுப்புது வடிவங்களை பழகுவதும் ஆதவனுக்குக் கைவந்த கலை. ‘புதுவிசை’ இதழின் ஆசிரியராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும் செயல்படுகிறார்.

ஒடுக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் அதை உக்கிரமான மொழியில் எதிர்கொள்ளும் ஆதவன், எழுதுவதோடு தன்னுடைய வேலை முடிந்தது என்றில்லாமல், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் என மாநிலம் முழுவதும் பிரயாணம் செய்தபடி இருக்கிறார். ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்தவரை, BEFI அலுவலகத்தில் சந்தித்து உரையாடினோம்
ஒரு படைப்பாளி தனது படைப்பில் என்ன சொல்கிறாரோ, அதற்கு நேர்மையாக வாழ முடிகிறதா? அதற்கான சூழல் இங்கு இருக்கிறதா?

எதை எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்தது அது. ஒருவரது மனக்கிளர்ச்சிகள், அனுபவங்கள் தான் எழுத்தாகிறது. இந்த அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையாக கிடைப்பதற்கு காரணமாக இந்தியச் சமூகத்தில் சாதியும் பாலினமுமே இருக்கிறது. எனவே எழுதும்போது அவர் தனக்கான அடையாளங்களை நிராகரித்துவிட்டு எழுதுகிறாரா அல்லது புது அடையாளங்களை உருவாக்கிக் கொண்டு எழுதுகிறாரா, பிறப்பின் அடிப்படையில் தன்மீது சுமத்தப்பட்டிருக்கிற அடையாளங்கள் பற்றி அவருக்கு என்ன மதிப்பீடு இருக்கிறது என்பதெல்லாம் படைப்புக்குள் வந்துவிடுகிறது. அதை அவரால் மறைக்க முடியாது. அதனால் ‘தான்’ என்று எழுதும்போது, அவர் தன்னை மட்டும் குறிப்பிடுகிறாரா, அல்லது தான் சார்ந்த சமூகப் பிரிவையும் குறிக்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சமூகப்பிரிவை முன்னிறுத்தி ‘தான்’ என்று எழுதுகிற எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். சாகும்வரை தனிநபராகிய தன்னை மட்டுமே முன்னிறுத்தி எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள். சொந்த அடையாளங்களைக் கொண்டாடுவது அல்லது மறைப்பது/துறப்பது என்ற எதிரெதிர் நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாழ்வதற்கு விதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் கலை இலக்கியவாதி மட்டும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.

இரண்டு விஷயங்களை இந்த இடத்தில் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். சமீபத்திய தீராநதி இதழில் நாகார்ஜூனனின் நேர்காணல் வெளியாகியிருந்தது. அதில் அவர் ‘என் அம்மா ஜெயகாந்தன் எழுத்தை விரும்பி படிப்பவர், என் தாத்தா வள்ளலாரை கரைத்துக் குடித்தவர், என் மாமா இன்னின்னாரோடு தொடர்புடையவர்’ என்பதாகவெல்லாம் குறிப்பிட்டிருந்தார். அவரது வாசிப்பு, சிந்தனை, எழுத்து முயற்சிகளுக்கு ஒரு பாரம்பரிய வேர் இருப்பதை நிறுவியிருந்தார். ஒருவகையில் கருவிலே திருவுடையோனாக காட்டிக்கொள்ளும் முயற்சியும் இயல்பாக வந்துவிடுகிறது. அதாவது நாகார்ஜூனன் தன் அம்மா, தாத்தா, மாமாவின் தோள் மீது ஏறி நின்று பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் இப்பேர்ப்பட்ட பரம்பரையாக்கும் என்கிற கித்தாப்பு அவரையறியாமலே வெளிப்படுகிறது.

அதே இதழில், ஜீவசுந்தரி எழுதி பரிசல் வெளியீடாக வந்திருக்கும் மூவலூர் ராமாமிர்தத்தின் வாழ்க்கை வரலாறு நூலுக்கான விமர்சனமும் வெளியாகியிருக்கிறது. தன் காலத்தின் கலகக்காரராக வாழ்ந்த அவரது வாழ்க்கை இன்றைக்கும் பெரும் படிப்பினைகளைத் தரும் விதத்தில் ஜீவசுந்தரி எழுதியிருக்கிறார். ஆனால், ‘தமது முன்னோர்கள் தேவதாசிகளாக இருந்தனர், தங்களது குலப்பெருமை கொண்டாடத்தக்கதாக இல்லை’ என்பதால், வெளியான புத்தகப்பிரதிகள் மொத்தத்தையும் ராமாமிர்தம் அம்மையாரின் தற்போதைய வம்சாவளியினர் வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இப்போ விற்பனைக்கு கிடைப்பது அவர்களால் திருத்தித் தரப்பட்ட பதிப்புதான். அவலமான தங்களது முன்னோரின் வாழ்க்கை இந்த சமூகத்தோடு பகிர்ந்து கொள்ளத்தக்கதல்ல என்கிற ஒரு அவமானவுணர்வு அவர்களை இந்த முடிவுக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

இதில் அவர்களின் தனிப்பட்ட அவமானம் எதுவுமில்லை. இந்த சமூகம் அவமானப்பட வேண்டிய விஷயம் அது. புத்தகத்தை மொத்தமாக விலைகொடுத்து வாங்கியதன் மூலம் இந்தத் தலைமுறை தன்னுடைய வேர்களை மறைத்துக் கொள்ள விரும்புகிறது. அதேசமயம் நாகார்ஜுனன் தன்னுடைய வேர்களின் பிரபல்யத்தை குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். அதை அகங்காரமாக அல்ல, வெகு இயல்பாக சொல்கிறார். அவர் பேசுவதிலிருந்து நாங்கள் கல்வி கற்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார். அவர் சொல்லாமல் விட்ட விஷயம், என் அம்மாவும், தாத்தாவும் கல்வி கற்ற அதேநேரத்தில் யாரெல்லாம் கல்வி கற்கவில்லை என்பதைத் தான். இவர்களுக்கு கல்வி கிடைக்கக் காரணமாயிருந்த அதே சாதிதான் மற்றவர்களுக்கு கல்வி கிடைக்காமல் போவதற்கும் காரணமாய் இருந்திருக்கிறது. மூவலூர் ராமாமிருதத்தின் வாழ்க்கை உள்ளது உள்ளபடியே புத்தகமாக வெளிவருவதை அவரது இன்றைய தலைமுறை அவமானமாக கருதுவதற்கும், அவர்களுடைய முன்னோர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் சாதிதான் காரணமாக இருந்திருக்கிறது.

நாகார்ஜுனன் உலக அரசியல் விஷயங்கள் குறித்துப் பேசினாலும் அவர் சாதியின் தோள்மீது நின்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் ‘தான்’ என்றும், தன் அனுபவம் என்றும் பேசியது தன்னுடைய சாதி கொடுத்த அறிவைத்தான். நாகார்ஜூனன் தான் எழுதியதற்கு நேர்மையாக இருக்கிறார் என்றால் இந்த இடத்தில் எது நேர்மை என்ற கேள்வி வருகிறது. அதேபோல் ராமாமிருதம் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு வெளிவருவதைக் கூட மறைக்க விரும்புவதால் அவரது சந்ததியினரின் செயல் நேர்மையற்றதாகி விடாது.

பொதுவாகவே தலித் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் வலியும் வேதனையும் கழிவிரக்கமுமே நிரம்பியிருப்பதாக சொல்லப்படுவதுண்டு. இதிலிருந்து மாறுபட்டு மிகுந்த கோபத்தோடு தனித்து ஒலிக்கிற குரல் உங்களுடையது. மற்றவர்கள் வலியை மட்டுமே கூறும்போது, வலிப்பதற்கான காரணத்தைக் கூறுவது உங்களது எழுத்து. பிற தலித் எழுத்தாளர்களில் இருந்து நீங்கள் வேறுபட ஆரம்பித்தது எப்போது?

தலித் இலக்கியம் என்று ஒன்று தனியாக தோன்றுவதற்குக் காரணமே, ‘இதுவரை நீ எழுதிய எந்த இலக்கியத்திலும் என்னைப் பற்றி எதுவும் எழுதவில்லை’ என்பதுதானே. இதில் அனைவருமே கோபத்தோடு தான் எதிர்ப்புக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். ‘என்னுடைய சேரிக்கு நீ வந்தது கிடையாது, உன் தெருவுக்குள் என்னை நுழையவிட்டதில்லை. நான் உன் தொழுவத்தில், உன் பண்ணையில் வேலை செய்த நேரம் போக என்னுடைய வாழ்க்கை என்ன, என்னுடைய கஷ்டங்கள் என்ன, என்னுடைய கொண்டாட்டங்கள், நம்பிக்கைகள் என்னென்ன என்று எதுவும் உனக்குத் தெரியாது. அப்படியிருக்கும்போது என்னைப் பற்றி நீ எழுதுவதாகச் சொல்வது வெறும் பம்மாத்து. அதில் எந்த நேர்மையும் கிடையாது. உனக்குத் தெரிந்ததை நீ எழுதிக்கொள். என் வாழ்க்கையை நான் எழுதிக் கொள்கிறேன்’ என்ற மீறலில் தான் தலித் இலக்கியமே வருகிறது.

தலித் எழுத்துக்கள் எல்லாமே இப்படியிப்படித்தான் இருக்கும் என்று பொத்தாம்பொதுவாக வகைப்படுத்திவிட முடியாது. நிலவும் சமூக அமைப்பு எல்லா மட்டத்திலும் ஏற்றத்தாழ்வை கடைபிடிக்கிறது. சகமனிதனை ஒருபோதும் சமமாய் பார்க்க அனுமதிக்காத அதன் அடிப்படை சாதியத்திற்குள் புதைந்து கிடக்கிறது. சமத்துவமின்மையை நியாயப்படுத்துவதாக சாதியடுக்கு அமைந்திருக்கிறது. இதை அம்பேத்கர் பன்மப் படிநிலை அடுக்கு என்கிறார்.

இந்த அடுக்கு குலையாமல் நீடிக்க ஒடுக்குமுறை கையாளப்படுகிறது. ஒரு தளத்திலோ ஒரு முனையிலோ இல்லாமல் ஒடுக்குமுறைங்கறது அரசியல், பண்பாடு, பொருளாதாரம், கலை, இலக்கியம்னு வாழ்க்கையோட எல்லா மட்டத்திலும் நிலவுது. நுட்பமாகவும் வெளிப்படையாகவும் பல்வேறு வடிவங்களில் நிலவுகிற சாதியடுக்குமுறையைப் புரிந்துகொள்வது, அதிலிருந்து விடுபடுறதுக்கு எத்தனிப்பது, அதை கலைஇலக்கியப் படைப்பாக மாற்றி சமூகத்தின் மனசாட்சியோடு உரையாட வைப்பது- இதுதான் இப்ப தலித் படைப்பாளிகளோட முன்னுரிமைக் களம். இதுபற்றி ஒருவருக்கு என்ன புரிதல் இருக்கிறதோ அதைப் பொறுத்து அவரோட படைப்புகள் வரும். அதுவுமில்லாம, ஒருத்தர் என்னவாக இருக்கிறாரோ அதுவாகத்தானே வெளிப்பட முடியும்?

போன தலைமுறைவரைக்கும் இந்த வாழ்க்கையை சகித்துக் கொண்டுதானே வாழ்ந்தது? தங்களைத் துன்புறுத்தவும் அவமதிக்கவும் அவனுக்கு சலுகை இருக்கிறது என்றுதானே நினைத்திருந்தது? ஆனால் எல்லாக் கொடுமைகளையும் ஏத்துக்கிட்டதா அதுக்கு அர்த்தமில்ல. தனக்கு வலிப்பதை வெளியே சொல்வதற்கே இன்னொருத்தர்கிட்ட அனுமதி வாங்க வேண்டியிருந்த ஒரு சூழ்நிலையில் தன்னோட வலியை வெளியே சொல்வதே ஒரு மீறல்தானே? என்னை யார் அடித்தது, அதற்கு யார் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது, என்னை அடித்தால் நானும் திருப்பி அடிப்பேன் என்பதெல்லாம் அதற்கு அடுத்த குரல்தான்.

‘யார் என் முகத்தின் மீது சிறுநீர் கழித்தது, யார் நான் வாழ்வதற்கான நிலத்தைப் பறித்தது, யார் நான் இறந்த பின்னரும் என் சுடுகாட்டை மறித்தது, யார் என் வீட்டுப் பெண்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியது’ என எல்லாமே தெரிந்திருக்கும் தான். ஆனால் அதை எழுதுவதற்கு அக எழுச்சி மட்டும் போதாது, புறச்சூழ்நிலையும் சாதகமாக இருக்க வேண்டும். அதற்கு என் அகச்சூழலை புறச்சூழலோடு பொருத்திக் கொள்ள வேண்டும் அல்லது என் புறச்சூழலை அக எழுச்சியோடு இணைத்துக் கொள்ள வேண்டும். இடையறாத ஒரு processல் தான் இது நடைபெறும்.

உதாரணத்துக்கு திண்ணியம் கொடுமை. ‘எப்பேர்ப்பட்ட மாண்பும் நாகரீகமும் நிறைந்த சமூகமாயிருக்கிறது இது’ங்கிறதை வெட்டவெளிச்சமாய் அம்பலப்படுத்திய கொடுமை அது. இப்படிப்பட்ட கொடுமைகளை நிகழ்த்துறது மூலமா தன்னோட கீழ்மைகளை இந்த சமூகம் வெளிப்படுத்திக்கிட்டே இருக்கு. எனவே ‘எனக்கு இந்தக் கொடுமைகள் நடைபெறுகிறது’ என்பதை வெளியே சொல்வதும் புலம்புவதும் எனக்கு அவமானம் கிடையாது. அது இந்த சமூகத்திற்கான அவமானம்.

‘மலத்தைத் தின்கிற நாயும் பன்றியும்கூட ஒருநாளும் தன்னோட மலத்தைத் தின்னாது. ஆனால் திண்ணியத்தில் ஒரு தலித் வாயில் மலத்தை திணிச்சிட்டீங்களே’ என்று புலம்பி ஒருத்தர் கதையோ கவிதையோ எழுதினால் அது வெறும் புலம்பல் அல்ல. இந்த சமூகத்தின் மீது வாசிக்கப்படும் குற்றப்பத்திரிகை. இதனால் இந்த வகைமை எழுத்துக்களும் தேவைதான்.

அதேநேரத்தில் இப்ப திண்ணியம் வழக்கில் தீர்ப்பு வந்திருக்கு. ஆயிரத்தெட்டு வியாக்கியானங்கள் சொல்லப்பட்டாலும் தீர்ப்போட சாரம் சாதிவெறியர்களுக்கு சாதகமானதுதான். அப்ப, இனிமேல் யார் வேண்டுமானாலும் எவன் வாயிலும் எதை வேண்டுமானாலும் திணிக்கலாமா? அப்போதும் கோர்ட் இதேமாதிரி தீர்ப்பு வழங்குமா? ஒருத்தன் வாயில மலத்தைத் திணிச்சதை உங்களால சகஜமா எடுத்துக்க முடியும்னா, ஊறுகாய் மாதிரி கொஞ்சூண்டு மலத்தையும் உங்க சாப்பாட்டுத் தட்டுல வச்சிக்குவீங்களா? என்று கேட்கிற எழுத்தும் தேவை.

அப்படி எழுதுவதற்கு உங்களுக்கு இந்த சமூகத்தின்மீது எந்த பிரமைகளும் இருக்கக்கூடாது. ‘நான் தலைமுறை தலைமுறையாக அடிவாங்கிக் கொண்டிருக்கிறேன். இதற்கு பார்ப்பனீய ஆதிக்கமும், சாதீய அடுக்குமுறையும் தான் காரணம்’ என்பது போன்ற வரலாற்று, அரசியல் காரணங்களைப் பயிலும்போது பிரமைகளை உதிர்த்துவிட்டு வாழ்வின் மூர்க்கத்தை எதிர்கொள்கிற - அதை அப்படியே எழுத்தில் முன்வைக்கிற ஒருவராக எவரொருவரும் வெளிப்படக்கூடும்.

இடதுசாரி இயக்கத்தோடு எனக்குக் கிடைத்த தொடர்புகள், போராட்ட அனுபவம் ஆகியவற்றிலிருந்து உருவான விமர்சனப்பார்வையும் புரிதலும் எனது எழுத்துக்களை வேறொரு வகைமையாக மாற்றியிருக்கலாம். எப்படியாயினும் எனக்கு முன்பு சாதியடுக்குமுறைக்கு எதிராக இயங்கிய - எழுதிய எல்லோரது தோள்மீதும் ஏறி நிற்பதால். நான் ஒருவேளை உங்களுக்கு உயரமாகத் தெரியலாம்.

பார்ப்பன எதிர்ப்பை உங்கள் படைப்புகளில் உக்கிரமாக வெளிப்படுத்தி வருகிறீர்கள். நீங்கள் சார்ந்துள்ள இயக்கங்களில், சக எழுத்தாளர்கள் வட்டாரத்தில் நீங்கள் எப்படி பார்க்கப்படுகிறீர்கள்?

இங்கு உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் எல்லோருமே பார்ப்பனரல்லாதார்தான். (அதையும் வடிகட்டிப் பார்த்தால் தலித்கள்தான்.) தலைமுறை தலைமுறையாக இயற்கையோடு இயைந்தும் மல்லுக்கட்டியும் பெற்ற பாரம்பர்ய அறிவைக் கொண்டு நிகழ்த்தப்படுகிற அவர்களது உழைப்பினாலேதான் சமூகத்தின் தேவைகள் முழுவதும் நிறைவேற்றப்படுகிறது. உடலுக்கு வெளியே மூளையை வைத்தால் எவ்வளவு விகாரமா இருக்குமோ அந்தளவுக்கு விகாரமானதுதான் உடலுழைப்பையும் மூளையுழைப்பையும் பிரிக்கிறதும்கூட. பார்ப்பனர்கள் மொத்த சமூகத்தையும் இப்படி விகாரப்படுத்திவிட்டார்கள்.

உடலுழைப்பை அறிவிலிருந்து பிரித்ததோடு உடலுழைப்பு அனைத்தையும் தீட்டுக்குரியதாகவும் அறிவித்தார்கள். விவசாயம் செய்த பார்ப்பன அண்ணன் தம்பி இருவரும் கொடுத்த காணிக்கையை- சாஸ்திரவிரோதமாய் சம்பாதித்தப் பணம் என்று கூறி கும்பகோணம் சங்கர மடத்துக்காரர் (சிருங்கேரி மடத்தோட கிளை. கும்கோணத்தைத் தவிர அதற்கு தமிழ்நாட்டில் வேறெங்கும் கிளைகள் கிடையாது. காஞ்சி மடம் லிஸ்டிலியே கிடையாது) ஏற்க மறுத்த விவகாரத்தை காந்தியே அம்பலப்படுத்தி கண்டித்தது உங்களுக்குத் தெரியும்.

விளைகிற தானியம் தவசமெல்லாம் புனிதம், அதை விளைவிக்கிற விவசாயமும் விவசாயியும் தீட்டுன்னா அதை எப்படி ஏத்துக்க முடியும்? அப்பதான், புனிதம்னு நீ கொண்டாடுகிற உன் அறிவும் உன் தொழிலும் உன் வயிற்றை மட்டுமே வளர்க்கிறதுக்கு உதவுற குப்பை... எங்ககிட்ட இருக்கிற அறிவுதான் இந்த உலகத்தையே வாழவைக்கிறதுன்னு பிரகடனம் செய்ய வேண்டியிருக்கு. அவங்களோட மந்திரத்துல மாங்காய்கூட வராதுங்கிறது எல்லாருக்கும் தெரிந்த உண்மை.

பார்ப்பனர்களோட பிழைப்புக்கூடமாய் இருக்கிற கோயிலைக் கட்டினதும், அதுக்குள் இருக்கிற சாமி சிலைகளை செதுக்கினதும், பூசைக்கான தேங்காய் பழங்களை விளைவிக்கிறதும், அவர்கள் கையிலே பிடித்தாட்டுகிற மணியை செய்வதும்கூட பார்ப்பரல்லாதார்தான். இந்த சமூகத்தோட அடிப்படைச் செயல்பாடாய் இருக்கிற உழவும் தொழிலும் இவர்களால்தான் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. கரத்தாலும் கருத்தாலும் உழைப்பவர்கள் இவர்கள்தான். எனவே உழைக்கும் மக்களோட இயக்கம்கிறது இவங்களுக்கானது தான்.

நான் கல்வி கற்க ஆசைப்படும்போது, ‘நீ படிக்கப் போய்விட்டால் எனக்கு அடிமை வேலை செய்வது யார், என் பிணத்தை யார் தூக்குவது, என் துணியை யார் துவைப்பது, என் கழிவறையை யார் சுத்தம் செய்வது’ என்று அவர்கள் கேட்கிறார்கள். இதையெல்லாம் நான் ஏன் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்டால் அவர்கள் சாதி என்கிற விஷயத்தை தான் மறுபடியும் பேசுகிறார்கள். இந்தக் கேள்வியின் ஆதாரமூலமாக பார்ப்பனர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களை எதிர்த்துப் பேச வேண்டிய சூழலையும் அவர்கள் தான் உருவாக்குகிறார்கள்.

என்னைப் பார்த்து ஒருவன் உனக்கு அறிவில்லை என்று சொன்னால் அதற்கு உடனடியாக நான் பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நான் யோசித்துக்கொண்டிருக்க முடியாது. நான் ஒடுக்கப்படுகிறேன் என்று கருதும்போது என்னை ஒடுக்குபவனைப் பார்த்து நான் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது. அந்தக் கேள்வி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிரான கேள்வியாக இருப்பதற்கு நான் எந்தவிதத்திலும் பொறுப்பாளியல்ல. நான் கேள்வி எழுப்புவதை சகித்துக்கொள்ள முடியாமலும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாததாலும் என்மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது என்ற வகையில் இடதுசாரி இயக்கம் என் பாடுகளுக்கு செவிமடுக்கும், எனக்காகப் போராடும், போராட வேண்டும் என்று கருதுகிறேன்.

தமிழ்நாட்டில், இந்தியாவில் இடதுசாரி இயக்கங்கள்தான் ஒடுக்கப்பட்டவர்களைப் பார்த்து நீங்கள் ஒடுக்கப்படுகிறீர்கள் என்று முதலில் புரியவைத்தன. தலித் அமைப்புகள் என்று தனியாக உருவாவதற்கு முன்பிருந்தே இடதுசாரி இயக்கங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றி வருகின்றன. அடிப்படை பாட்டாளி வர்க்கமாக இருக்கிற தலித்துகளுக்காக போராடுவதைத் தவிர அவற்றுக்கு வேறு வழியுமில்லை.

நிலவும் அசமத்துவமான சமூக அமைப்பை மாற்றியமைக்கப் போராடுவதுதான் இடதுசாரி மனோபாவம் என்றால் மற்றெவரைக் காட்டிலும் இந்த சமூகத்தை உடனடியாய் மாற்றியமைக்க வேண்டிய தேவை தலித்துகளுக்குத்தான் இருக்கிறது. அதனால்தான் அம்பேத்கரை இந்தியாவின் மிகச்சிறந்த இடதுசாரித் தலைவராக நான் கருதுகிறேன். அவர் உருவாக்கித் தந்திருக்கும் சாதி ஒழிப்பிற்கான பாதையில் இடதுசாரி இயக்கங்கள் மட்டுமே மக்களைத் திரட்ட முடியும் என்று நம்புகிறேன்.

இப்படி இருக்கும்போது பார்ப்பனர்களுக்கு எதிராக நான் எழுதுவதை இயக்கம் எப்படி தவறாக எடுத்துக்கொள்ளும்? இதைத்தான் எழுத வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் யாரும் என்னிடம் கூறுவது கிடையாது. படைப்பு என்பது தனிநபர் செயல்பாடு. இடதுசாரித் தோழர் ஒருவர் ஓட்டல் வைத்திருந்தால், அவர் தினமும் ‘சாம்பார் நல்லா இருக்குதா’ என்று கட்சி அலுவலகத்தில் போய்க் கேட்டுவிட்டு தொழில் நடத்துவதில்லை. அதேபோல் நானும் என்னுடைய கவிதையை யாரிடமும் கொண்டு போய் கருத்துக் கேட்டுவிட்டு வெளியிடுவதில்லை.

இயக்கத்தைப் பற்றி தெரியாதவர்களும் அதற்குள்ளிருந்து இயங்காதவர்களும் அவர்களாகவே அனுமானத்தில் எதையாவது சொல்வது இங்கொன்றும் புதுசல்ல. கட்சி அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு எழுத்தாளனையும் ஒரு கமிஸார் கண்காணித்துக் கொண்டிருப்பதாய் குற்றம்சாட்டுவதெல்லாம் ரசமான கற்பனைதான். எழுத்து என்பது தனியொருவனின் அனுபவம், அவன் மீதான வன்முறைகள், அவனுக்குக் கிடைக்கிற சுதந்திரம் சார்ந்த விஷயம். இதில் எந்த இயக்கமும் தலையிடுவதில்லை. இந்த சுதந்திரமும், இயக்கம் மானசீகமாய்த் தருகிற தைரியமும்தான் என் எழுத்தின் காத்திரத்திற்குக் காரணமாக இருக்கிறது.

ஆரியத்துக்கு மாற்றாக திராவிட இயக்கங்கள் தமிழக வரலாற்றை உயர்வாக முன்வைக்கின்றன. ஆனால் தமிழ் மன்னர்களின் வாழ்க்கையை, தமிழ் வரலாற்றை உங்களது படைப்புகள் பகடி செய்கின்றன. ஆரிய வரலாற்றுக்கு மாற்றாக தமிழக வரலாறு முன்னிறுத்தப்படுவதை நீங்கள் ஆதரிக்கவில்லையா?

ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்று ஆயிரம் சான்றுகளை நிறுவிய பிறகும், சங் பரிவாரத்தினர் ‘இல்லையில்லை, ஆரியர்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். என்.எஸ்.ராஜாராம் போன்ற போலி ஆய்வாளர்களோட சப்பைக்கட்டும் இதற்கு உண்டு. அவர் மித் ஆஃப் ஆரியன் இன்வேஷன் என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். இன்னும் இவரைப்போலவே பல டகால்டிகளும் உண்டு. எனவே ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்று சொல்வதற்கு உங்களுக்கு ஒரு அரசியல் நிலைப்பாடு தேவைப்படுகிறது. அதாவது உண்மையான வரலாற்றை தேடி அயறிவது என்பதுதான் அது.

ஐதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிற ஒரு ஆய்வமைப்பு, இந்திய உயர்சாதி ஆண்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் டி.என்.ஏ மூலக்கூறுகளில் ஒற்றுமை இருக்கிறதாக அறிவிச்சிருக்கு. ஆனால் இப்படியான ஒற்றுமை பெரும்பாலான உயர்சாதிப் பெண்களுக்கில்லை. புதுதில்லி அறிவியல் இயக்கத் தலைவர் பிரபிர் புர்கயஸ்தா இதுபற்றி மார்க்சிஸ்ட் கட்சியோட பத்திரிகையான பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆரியர்கள் குறைந்த அளவிலான பெண்களுடன்தான் இங்கு வந்தார்கள், அவர்கள் இந்தியப் பரப்பிலிருந்த பூர்வக்குடிப் பெண்களை பலவந்தமாய் சிறைபிடித்துக் கொண்டார்கள் என்றும் அதனாலேயே பிற்காலத்தில் ஆரியர்கள் தங்கள் வீட்டுப் பெண்கள் உட்பட எல்லாப் பெண்களையும் தீட்டுக்குரியவர்களாகவே அறிவித்தார்கள் என்றும் ஏற்கனவே வெளியான ஆய்வுகளுக்கு வலு சேர்ப்பதாய் இருக்கிறது இந்த டிஎன்ஏ ஆய்வு.

திராவிடர்களும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்றுதான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வந்த காலம்தான் வேறுபடுகிறது. இவர்கள் ஆரியர்களுக்கு முன்பே வந்தவர்கள். திராவிடர்களை தமிழர்களின் மூதாதைகளாகக் கொள்ள முடியமா என்கிற ரீதியில் ஆய்வுகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. அம்பேத்கரும் இந்த மண்ணின் பூர்வகுடிகளாக நாகர்களைத் தான் குறிப்பிடுகிறார்.

உலகம் முழுவதுமே சமூகக் காரணங்களால் மக்கள் இடம்பெயர்வது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆரியர்களும் அப்படித்தான் ஒரு நெடும்பயணத்தின் வழியாக இங்கு வருகிறார்கள். இங்கிருக்கிற பூர்வகுடிகளை அவர்களது தோற்றத்தைக் கொண்டு கருப்பர்கள், சப்பை மூக்கர்கள், ஆண்குறி வழிபாட்டாளர்கள்னு இழித்தொதுக்குகிற வேலை அப்போதே தொடங்கிருச்சு. பூர்வ குடிகளிடமிருந்து தங்களை தனித்துக் காட்டிக்கொள்ளவும் தங்களது இனத்தூய்மையைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஆர்யவர்த்தம் மாதிரியான தனித்த குடியிருப்புகளை உருவாக்குறாங்க. பூர்வகுடிகளோடு புழங்குவது தீட்டுக்குரியதா அறிவிக்கப்படுது. முதன்முதலில் இந்தியாவை ஒரு மூடுண்ட சமூகமாக மாற்றியவர்கள் ஆரியர்கள்தான் என்ற முத்துமோகனின் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மை.

‘ஒதுக்குவதும் ஒதுங்குவதும்’ என்கிற பார்ப்பனியத்தின் ஆணிவேர் ஆரியத்திற்குள் பதுங்கி இருக்கிறது. ஆனாலும் இனக்கலப்பு தவிர்க்க முடியாததாகிறது. வருணம் வருகிறது. இப்போது வருணத்தூய்மை என்கிற ஒரு புதுவகை மூடாக்கு அறிமுகமாகிறது. வருணக்கலப்பையும் தடுக்க முடியாதபோது சாதி வருகிறது. சாதிக்கலப்பைத் தடுக்க தீண்டாமை வருகிறது. இப்படி தொடர்ந்து சமூகத்தை இணக்கம் காண முடியாத கூறுகளாக பிளக்கிற ஏற்பாடுகளுக்குப் பின்னே ஆரிய மனநிலைதான் இயங்குது.

இந்த வருணத்தையும் சாதியையும் தமிழ் மண்ணுக்கு கூட்டி வந்து கட்டிக் காப்பாற்றும் வேலையில் தமிழ் மன்னர்களும் ஈடுபட்டிருந்தார்கள் என்ற உண்மையை நாம் எப்படி நிராகரிக்க முடியும்? வர்ண அமைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொன்ன மன்னர்கள் யாரையாவது தமிழ் மரபிலிருந்து நீங்கள் காட்ட முடியுமா? வருண அமைப்பை ஒப்புக்கொண்டவர்களை என்னுடைய மன்னன் என்று நான் ஏன் கொண்டாட வேண்டும்? வடக்கேயிருந்து பார்ப்பனர்களை அழைத்துவந்து வளமான பகுதிகளில் குடியமர்த்தி வைத்தவர்கள் தமிழ்மன்னர்கள்தானே? அந்த பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டுத்தானே தலித்துகளை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தார்கள்? சாதியைத் தாங்கிப் பிடிக்கிற, பெண்களை இரண்டாம்பட்சமாக போகப்பொருளாக நடத்துகிற ஒரு மன்னனை அவன் தமிழன் என்பதாலேயே நான் ஏன் தாங்கிப் பிடிக்க வேண்டும்?

தமிழன் என்ற பொது அடையாளத்தோடு ஒன்றுபடுவது, பேசுவதற்கு உவப்பானதாக இருக்கலாம். தமிழன் என்ற பொது அடையாளத்தை வைத்துக்கொண்டு சாலையில் ஒரு தலித் சுதந்திரமாக நடந்துவிடவோ, மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடவோ, மற்ற சாதிகளில் திருமணம் செய்து கொள்ளவோ முடியுமா? ஹரியானாவில் கொல்கிறார்கள். ஆந்திராவில் சுண்டூரில் கொல்கிறார்கள். பீகாரில் தலித்துகளைக் கொல்ல தனிப்படையே இருக்குது. கயர்லாஞ்சியில் நடந்த கொடுமை நாடறியும். இதிலிருந்து தமிழ்நாடு எந்தவிதத்தில் மாறுபட்டிருக்கு? தமிழன் எந்தளவிற்கு சாதி வித்தியாசம் பாராமல் தீண்டாமையை கைக்கொள்ளாமல் சமத்துவம் பாராட்டுகிறவனாய் இருக்கிறான்? இந்த நாட்டில் எங்கேயிருந்தாலும் எங்கள் உயிரும் உடைமையும் மசுருக்கு சமானமாகக்கூட மதிக்கப்படலேன்னா தமிழன் அல்லது இந்தியன் என்கிற வெட்டிப் பெருமையை நானெதெற்கு சுமந்து திரியவேண்டும்?

தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்கள்ல தீண்டாமை கடைபிடிக்கப்படுது. ஒரு அரசியல் விருப்புறுதியோட அரசாங்கம் செயல்பட்டா இதையெல்லாம் முடிவுக்கு கொண்டுவர முடியும். ஒரு தலித்தைக் கூட்டிப் போய் உன் வீட்டில் விருந்து வை அல்லது ஒரு தலித் வீட்டுக்குப் போய் நீ சாப்பிடுன்னு ஒரு அரசாங்கம் உத்தரவு போட வேண்டியதில்லை. ஆனால் பொது இடத்தில் நடமாடவும், சைக்கிளேறிப் போகவும், செருப்பு போட்டுக் கொள்ளவும், தோள்ல துண்டு போட்டுக் கொள்ளவும்கூட ஒரு தலித்தை அனுமதிக்கமாட்டேன்னு அட்டூழியம் பண்ணுகிற சாதி வெறியன்களை சுளுக்கெடுக்கிறது அரசாங்கத்தோட வேலைதானே? ஆனால், அரசு நிர்வாகத்துல இருக்கிற அதிகாரிகள், காவல்துறையினர், நீதிபதிகள் என்று இவங்களெல்லாம் சாதியைக்கூட தாண்டாதவங்களா இருக்கிறப்ப ஒரு தலித்தின் உயிர் எந்த நேரத்திலும் பறிபோகக் கூடியதாயிருக்கிறது.

நடப்பிலிருக்கிற வன்கொடுமைத் தடுப்புச்சட்டங்களை அமல்படுத்துகிற பொறுப்பு சாதிவெறியர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அந்த சட்டங்களைக் குற்றுயிராக்கி குடலறுத்து கிடத்தியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஆந்திராவிலோ, பீகாரிலோ எங்கே பிறந்திருந்தாலும் தலித்தாக இருப்பதால்தான் கொடுமைக்கும் அவமானத்துக்கும் ஆளாகிறேன் எனும்போது, மொழியினால் எனக்கு என்ன நன்மை கிடைக்கிறது? குறிப்பிட்ட பூகோள எல்லைக்குள் பிறப்பதால் என்னை சுதந்திரமான மனிதனாக இந்த சமூகம் ஒப்புக்கொள்ளுமா? நான் குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்தவன், குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்தவன், குறிப்பிட்ட மொழியைப் பேசக்கூடியவன் என்பதால் எனக்கு எந்த சமூக அந்தஸ்தும் கிடைப்பதில்லையே.

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மொழி, உணவு, உடை, மதம், நம்பிக்கைகள் என எல்லாமே வேறுபடுகிறது. எனக்கு கீழே இன்னொரு சாதி என்ற உணர்வு மட்டும்தான் எல்லோரையும் ஒன்றுபடுத்துகிறது. இந்த வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியா என்றால், இந்தியன் என்கிற தேசியக் கோட்பாட்டையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழன் என்கிற பொது அடையாளத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழன் என்கிற பொது அடையாளத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? தமிழன் என்கிற பொது அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி மற்ற அடையாளங்களைத் துறப்பதில் எனக்கு எந்த மனத்தடையும் கிடையாது. ஏனெனில் எனக்கு ‘தீண்டத்தகாத சாதி’ என்ற அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதைத் துறப்பதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. ‘நீங்களும் அதே மாதிரி துறக்கத் தயாராக இருக்கிறீர்களா’ என்பதுதான் எனது கேள்வி. உங்களுக்கு ‘தமிழன்’ என்ற அடையாளத்தைத் தவிர தொடத்தக்க ஜாதி, ஆண் போன்ற மீதி அடையாளங்கள் தான் முக்கியமாக இருக்கின்றன. அதிகாரமிக்க உனது அடையாளங்களை நீ துறக்கத் தயாராக இருந்தால், தமிழன் என்கிற பொதுக்குடையின் கீழ் ஒன்றுபடுவதற்கு எனக்கு எந்த மனத்தடையும் இல்லை.

சாதி உணர்வோடு இருந்ததால் தமிழ் மன்னர்களின் வரலாற்றை நிராகரிப்பதாகக் கூறுகிறீர்கள். நால்வருணத்தை முன்னிறுத்துவது தான் கம்பராமாயணம். பெரியார் அதை எரித்தபோது, கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா ஊர்தோறும் அதை எடுத்துச் சென்று அதற்கு ஆதரவாகப் பேசினார். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

60 வகையான ராமாயணம் இருக்கிறது. வால்மீகி ராமாயணம்தான் ஆதி. வால்மீகியும்கூட அப்பகுதி மக்களிடம் வாய்மொழியாக புழக்கத்திலிருந்த ஒரு கதையை தன் மொழியில் எழுதியிருக்கக்கூடும். பத்தாயிரம் பாடல்களைக் கொண்ட வால்மீகி ராமாயணம் பின் வந்தவர்களின் இடைச்செருகல்களால் உப்பி வீங்கி இன்று 24 ஆயிரம் பாடல்களைக் கொண்டதாக இருக்கிறது. கம்பரும் தன் பங்குக்கு கொஞ்சம் அரைத்து ஊற்றியிருக்கிறார்.

இவர்களெல்லாம் சேர்ந்துதான் வடக்கே அயோத்தியைச் சுற்றி நடந்ததாகக் கூறப்படும் ஒரு கதையை நகர்த்தியும் புஷ்பக விமானத்தில் ஏற்றியும் தென்னாட்டுக்குக் கூட்டிவந்தார்கள். போதாக்குறைக்கு கடலிலும் நீந்தவிட்டு கரையேறத் தோதாக பாலமும் கட்ட வைத்தார்கள். வேலைவெட்டி இல்லாத பண்டிதர்களும் புலவர்களும் கம்பராமாயணத்தின் எல்லாக் கதாபாத்திரங்களையும் தெருத்தெருவாய் இழுத்துவந்து பட்டிமன்றங்கள் நடத்தி நாறடித்து ராமாயணம் ஏதோ நம்மூர் கதை என்பதைப் போலவே மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

இன்னொரு பக்கம் ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் சொல்வதைப்போல, ராமன் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று வாதாடப் புகுந்தவர்கள் ராவணனை திராவிடன் என்றும் ஆரியத்தை எதிர்த்த உண்மையான மாவீரன் என்றும் கொண்டாடத் தொடங்கிய அபத்தமும் இங்கு நிகழ்ந்தது. ராமன் கற்பனை என்றால் ராவணனும் கற்பனைதான் என்கிற குறைந்தபட்சப் புரிதலையும் கைவிட்டிருந்தனர்.

இன்னும், கம்பராமாயண வரிகளைப் பிழிந்து, சோறு - குழம்பு - சொர்க்கம் - நரகம் - சோசலிசம் - சூயஸ் கால்வாய் எல்லாவற்றையும் கொண்டு வருகிறதொரு ஏற்பாட்டில், பூதக்கண்ணாடி வைத்தலையும் கூட்டமொன்றும் இருக்கிறது. ராமாயணம் முன்வைக்கிற சமூகவியல் கருத்துக்களை உள்வாங்காமல் கம்பனின் மொழி ஆளுமைக்காகவும், கற்பனைக்காகவும் ராமாயணத்துக்குள் புகுந்த ஜீவா கடைசியில் கம்பனை விட்டுவிட்டு ராமனைப் பற்றிக் கொண்டாரென்ற குற்றச்சாட்டு உண்டு. 13வது ஆழ்வார் என்ற கேலிக்கும்கூட ஆளாகினார். ராமாயணத்தை எரித்ததற்காக பெரியாரோடு ஜீவாவுக்கு எந்தளவுக்கு முரண்பாடு இருந்ததோ அந்தளவுக்கு இவ்விசயத்தில் ஜீவா மீது எனக்கிருக்கிறது.

எழுத்தாளர்கள் சாதிய மனோபாவத்தோடு இயங்குவதாக குட்டி ரேவதி சமீபத்தில் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். நீங்கள் இந்த கருத்தோடு எந்தளவிற்கு உடன்படுகிறீர்கள்?

நமக்கு சாதியைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதுதான் உண்மை. ஆனால் நாம் அதை மறைக்கப் பார்க்கிறோம். பெரிய பெரிய விசயங்களாகப் பேசி நமக்குள் இருக்கும் சின்னத்தனங்களை மறைத்துக்கொண்டு தப்பியோடும் எத்தனிப்பிலேயே முனைப்பு காட்டுகிறோம். குட்டிரேவதி அதை வெளிப்படையாக எழுதியிருந்தார். ‘தமிழன்’ என்கிற பொது அடையாளத்தோடு எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று சொல்லப்படுவதைப் போல், பெண் விடுதலை குறித்துப் பேசும்போது, அனைத்துப் பெண்களும் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்து கூறப்படுகிறது.

எல்லாப் பெண்களும் ஒரே பிரச்சனைகளைத் தான் சந்திக்கிறார்களா, ஒரு பார்ப்பனப் பெண்ணுக்கு உள்ள பிரச்சனைகளும், தலித் பெண்ணுக்கு உள்ள பிரச்சனைகளும் ஒன்றா என்ற கேள்வி இந்த இடத்தில் வருகிறது. சில பொதுத்தன்மைகள் இருக்கலாம். மற்றபடி ஒப்பிட முடியாத வித்தியாசங்கள் நிறைய உண்டு.

Aadhavan Dheetchanya கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், நகரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகள் இருப்பதில்லை. கிராமத்தில் ஒரு பெண்ணை அவளது கணவன் அடிப்பானானால் அவளால் திருப்பி அடிக்க முடிகிற அளவுக்கு மனரீதியாக காத்திரமாகத்தான் இருக்கிறாள். அப்படி திருப்பியடிக்க முடியாவிட்டால் அவனை நிலைகுலைய வைக்கிற அளவுக்கு அவளால் கடுமையாக ஏச முடிகிறது. கிராமப்புற வாழ்க்கையில் ஆணின் உழைப்பையும் அவனது வருமானத்தையும் மட்டுமே சார்ந்திராமல் பெண் அடிப்படையிலேயே தன் சுயஉழைப்பில் வாழ்கிறவளாகவும் இருக்கிறாள். இன்னும் சொல்வதானால் அவளது உழைப்பை நம்பியே முழு குடும்பமும் வாழ்கிற நிலைமையும்கூட உண்டு. எனவே அவள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் உடையவளாயிருப்பதும் இயல்பானதுதான்.

படித்த நடுத்தர வர்க்கத்து ஆண் இன்று தன்னை வெகு நாகரீகமாக காட்டிக் கொள்வதற்கு அதிகம் மெனக்கெடுகிறான். ஒரு கண்ணியவான் போன்ற தோற்றத்தில் தனது கொடுக்குகளையும் கோரைப்பற்களையும் மறைத்துக்கொள்ள விரும்புகிறான். அதனால் அவனால் பெண்ணை அடிக்கவோ, நேரடியாக ஆதிக்கம் செலுத்தவோ முடியவில்லை. என்ன சார் படிச்சவங்களா இருக்கீங்க, இப்படி இன்டீசன்ட்டா நடந்துக்கிறீங்களேன்னு தன்னை யாரும் சொல்லிவிடக் கூடாதுங்கறதுல கவனமா இருக்கிறான்.

ஆனால் அதுக்காக ஆண் என்கிற அகங்காரத்தையோ பெண் தனக்குக் கீழ் என்கிற இளக்காரத்தையோ கைவிடவும் அவன் தயாராயில்லை. எனவே பெண்ணை அடிமைப்படுத்தவும், தான் அவளை விட மேல் என்று உணர்த்துவதற்கும் மொழியின் துணையோடு பல நுட்பமான வழிமுறைகளைக் கையாள்கிறான். அந்த நுட்பங்களை புரிந்துகொண்டு அதை மொழிரீதியாகவே பெண்கள் எதிர்கொள்கிறார்கள். ஊமைக்குத்து விட்டு உள்காயம் ஏற்படுத்துகிற ஒரு தாக்குதல் முறையை பெண்கள் மொழிக்குள்ளிருந்து கண்டெடுத்திருக்கிறார்கள். ஆண்களின் நுட்பமான பின்னல்களுக்குள் சென்று பெண்கள் பேசுகிறார்கள் என்றுதான் கருதுகிறேன். ஆனாலும் இவர்கள் எழுதும் பிரச்சனை உலகம் முழுக்க உள்ள பெண்களின் பிரச்சனை அல்ல என்று சொல்லத் தோன்றுகிறது.

யோனி என்கிற வார்த்தையை எழுதிவிட்டால் அது ஏதோ பெரிய புரட்சி என்று இங்கு மதிப்பிடப்படுகிறது. இது நகரம் சார்ந்த நடுத்தரவர்க்க மனோநிலை. அவளுடைய படிப்பும், நாசூக்கும் யோனி என்கிற வார்த்தையை தன் சகமனிதர்களுடனான உரையாடலில் பேசுவதற்கு அவளுக்கு பெரிய மனத்தடையை உருவாக்கியுள்ளது. அதனால் அந்த ஒரு வார்த்தை ஒரு பெரிய கலகக்குரலாக நமக்குத் தெரிகிறது. ஆனால் கிராமத்திலோ நகரத்திலோ ஒரு அடித்தட்டு பெண் ஒரு நாளைக்கு நூறுமுறை அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறாள். இதற்காக ‘நானும் கலகக்காரி’ என்று அவள் தோள் தட்டிக் கொள்வதில்லை. ‘இதையெல்லாம் சாராம்சப்படுத்தித்தான், பெண் விடுதலை, பாலின சமத்துவம் என்பவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று குட்டி ரேவதி சொல்வதாக நான் புரிந்து கொள்கிறேன். பெண் விடுதலை என்ற குடையின் கீழ் ஒரு பார்ப்பனப் பெண்ணை ஒரு தலித் பெண் உரசிக் கொண்டு நிற்க முடியமா என்ற அவரது கேள்வி இன்னும் யாராலும் எதிர்கொள்ளப்படாமல்தான் இருக்கிறது.

பெண்ணடிமைத்தனம், சாதி அடக்குமுறைகளைத் தக்க வைப்பதில் நமது சமூக, குடும்ப அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?

நம் சமூக அமைப்பில் நாம் என்னவாக வளர்க்கப்படுகிறோம்? ‘இந்தியன் என்ற உணர்வோடு’ என்றால் அது மிகவும் செயற்கையானது. வேறு ஏதாவது நாட்டுக்குச் சென்றால் ஒருவேளை இந்தியன் என்ற உணர்வு நமக்கு வரலாம். அதுவும் தங்கியுள்ள அந்த நாட்டை சேர்ந்தவர் அல்ல என்பதால் இந்தியன் என்று சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது தேவையை ஒட்டி உருவானது.

ஆனால் பிறப்பிலிருந்தே குறிப்பிட்ட சாதியின் நம்பிக்கைகளுக்கும், வளமைக்கும் ஏற்றவாறு தான் வளர்க்கப்படுகிறோம். இதிலும் பெண் கூடுதல் கவனத்தோடு வளர்க்கப்படுகிறாள். ஒவ்வொரு கணமும் சாதியாக வளர்க்கப்பட்டு சாதியாகத் தான் வாழ்கிறோம். முதலில் நான் இந்தியன் பிறகு தமிழன் என்பதெல்லாம் மிகமிக அயோக்கியத்தனமான வார்த்தைகள்.

நான் சைவம், நான் அசைவம் என்று உணவில் வேறுபடுவதில் தொடங்கி உடை, உணர்வுகள் அனைத்தையும் சாதிதான் தீர்மானிக்கிறது. நல்ல குடும்பம் என்கிற நம் வரையறையே அப்படித்தானே இருக்கிறது. ‘அப்பா, அம்மாவிற்கு பிடித்த பையனாக, அல்லது அவர்கள் சொல்கிறவனை திருமணம் செய்துகொண்டு குனிந்த தலை நிமிராத பெண்கள் இருந்தால் அது நல்ல குடும்பம். ஆச்சாரம் கெடாத குடும்பம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.’ அதாவது பல்கலைக்கழகம் எப்படி ஒரு மோசமான தயாரிப்பை வெளியே அனுப்புகிறதோ அப்படித்தான் குடும்பமும் அனுப்புகிறது.

சாதியை வலுவாக, மிக நுட்பமாக பாதுகாக்கக்கூடிய இடம்தான் குடும்பம். என் பையன் அமெரிக்கா போனாலும் இங்க வந்து நான் பார்க்கிற பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவான் என்று உறுதியாக சொல்ல முடிவது சாதியால் தானே? உண்பது, வாழ்வது, உணர்வது தொடங்கி நான் இன்று உண்டதை நாளை ஒருவன் அள்ளுவான் என்பது வரைக்கும் சாதிதானே தீர்மானிக்கிறது? ‘இறந்தபிறகு எரிப்பதா, புதைப்பதா? எந்த சாதிக்காரன் குழிவெட்டுவது?’ என்பதையும் அதே சாதிதான் தீர்மானிக்கிறது.

‘நான் ஒடுக்குகிற சாதியில் பிறந்திருக்கிறேன், நான் பெண்ணை ஒடுக்குகிற ஆணாக இருக்கிறேன். இதுகுறித்து நான் குற்றவுணர்ச்சி கொள்கிறேன்’ என்பது மாதிரியான எந்த எழுத்தும் இதுவரை வரவில்லை. சுஜாதா ‘சிவாஜி’ திரைப்படத்தில், ‘அங்கவை, சங்கவை இருவரும் கறுப்பு’ என்று எழுதுகிறார். அவர் பார்த்த பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள். எனவே கறுப்பாக இருப்பவர்களை அவரால் எளிதாக அவமானப்படுத்த முடிகிறது.

இதைச் சொல்கிற அதிகாரத்தை சுஜாதாவிற்கு அவரது ஜாதிதானே தந்தது? எங்கள் ஜாதிப்பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள் என்று அவர் சொன்னால் அதுவும் ஜாதித்திமிர் தானே? அவர் பார்வையில் பெண்கள் வெறும் தோல் சம்பந்தப்பட்டவர்கள் என்றுதானே அர்த்தம்? இந்த பார்ப்பனக் கிழடின் வக்கிரத்தை, துவேஷத்தை எதிர்த்துப் பேச எந்த வெள்ளைத்தோலிகளும்/தோழிகளும் முன்வராமல் இருப்பதற்கும் சாதிதானே காரணமாயிருக்கிறது? அவர்களுக்கும் சாதியைவிட்டால் வேறு எதுவும் தெரியாது.

திப்புசுல்தான் மலபார் கவர்னருக்கு எழுதிய கடிதம் ஒன்றை சமீபத்தில் வாசித்தேன். “உங்கள் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் மேலாடை அணியாமல் இருக்கிறார்கள் என்று படித்தேன். அதற்குக் காரணம் வறுமையா, வேறு ஏதாவதா? வறுமை எனில் அதைக் களைய வேண்டியது உங்கள் பொறுப்பு. மத நம்பிக்கை தான் காரணம் எனில் அந்த நம்பிக்கையின் வேர் பாதிக்காமல் பக்குவமாக எடுத்துச் சொல்லி ஆடை அணிய வைக்க வேண்டும்.”

மேலாடை அணியும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது நாடார், பறையர் போன்ற தாழ்த்தப்பட்ட பெண்களுக்குத் தான். ஒருவேளை தங்கள் மதப்பெண்களைப் போல இவர்களும் குப்பாயம் அணிய வேண்டும் என்றுகூட திப்புசுல்தான் விரும்பியிருக்கலாம். அது எல்லாமே இரண்டாம்பட்சம். ஆனால் இங்குள்ளவர்கள் வேறு ஒருவன் சுட்டிக்காட்டியும் திருந்தாதவர்களாய்த் தானே இருந்திருக்கிறார்கள் என்பதே முக்கியம்.

நூறு வருடங்களுக்கு முன்பு நாடார் பெண்ணுக்கு மேலாடை அணியும் உரிமை தேவைப்பட்டது. இன்றைக்கு அவளுக்கு வேறு உரிமைகள் தேவைப்படுகின்றன. கேரளாவில் ஈ.கே.நாயனார் முதல்வராயிருந்தபோது, நிதியை கிராமங்களுக்கு ஒதுக்கி அந்தந்த கிராம மக்களே தங்கள் தேவைகளை முடிவுசெய்து நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. மாநில அளவிலான இந்த திட்டத்துக்கு வழிகாட்டியவர் தோழர் இ.எம்.எஸ். ஒரு கிராமத்தில் ஆண்கள் அனைவரும் கூடிப்பேசி தெருவிளக்குகள் அமைத்தார்கள். அன்றிரவே அந்தக் கிராமத்து பெண்கள் அந்த விளக்குகளை உடைத்தெறிந்தார்கள்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இரவில் வெளிச்சம் அதிகம் இருந்தால் பெண்களால் தங்களின் இயற்கைத் தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியாதென்பதால்தான் தெருவிளக்குகளை உடைத்துவிட்டதாக தெரிவித்தார்கள். இதைத் தெரிந்து கொண்ட இ.எம்.எஸ். அந்தக் கிராம சபைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘உங்கள் கிராமத்தில் முதலில் கட்டப்பட வேண்டியது கழிப்பிடம்தான். சபையில் ஆண்கள் மட்டுமே எல்லா முடிவுகளையும் எடுப்பதால் நம்மால் பெண்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. நாம் ஆண்களின் சபையாக சமூகத்தை வைத்திருக்கிறோம். எனவே அடுத்தக் கூட்டத்தில் இருந்து பெண்களையும் கலந்து பேசுங்கள். அவளால் தான் அவளது தேவைகளைப் பேச முடியும்’ என்று எழுதினார்.

குடும்பத்தை எடுத்துக்கொண்டால் அங்கும் கணவன் தான் முடிவெடுக்கிறான். பெண்ணுக்குப் பங்கில்லாத அந்த முடிவை குடும்பத்தின் முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தப் பெண்களின் நிலையைப்போல் தான் தலித்துகளின் நிலையும். இந்தியச் சமூகத்தில் இதுவரை முடிவெடுக்கும் இடத்தில் தலித்துகள் இருந்ததில்லை. அதிகாரத்திலும் அவர்கள் இல்லை. அப்படியானால் ஆதிக்க சக்திகள் எடுக்கும் முடிவுகள் தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதாகத் தானே இருக்கும்? நம் சமூகம் சாதியால் மட்டுமே பின்னப்பட்டிருக்கிறது என்பதைத் தான் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

தோள்சீலைப் போராட்டம் பற்றிப் பேசுவதால் இந்தக் கேள்வி. அந்த மாதிரி ஒடுக்கப்பட்ட ஒரு பெண்ணை சிறுமைப்படுத்தி சுந்தரராமசாமி எழுதிய ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ சிறுகதை பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அந்த சிறுகதைக்கு எதிராக நீங்கள் கடுமையான எதிர்வினை ஆற்றினீர்கள். ஆனால் இப்போதும் அந்த சிறுகதையை நியாயப்படுத்தும் வேலைகளை அவர்கள் செய்து வருகிறார்களே?

அவர்கள் மாறுவார்கள் என்று எதிர்பார்ப்பது ஒரு மூடநம்பிக்கைதான். அவர்களைத் தொடர்ந்து எதிர்ப்பதற்கு நமக்கு நேரமில்லாததாலும், வேறு வேலைகள் இருப்பதாலும் நாம் போய்விட்டோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து அந்தக் கதையை நியாயப்படுத்தும் வேலையை செய்துகொண்டே இருக்கிறார்கள். கதையை ஆதரித்து வந்த கடிதங்கள், கட்டுரைகளைத் தொகுத்து சமீபத்தில் ஒரு புத்தகமாகப் போட்டிருக்கிறார்களாம். ஏ.பி.வள்ளிநாயகம் மறைவிற்கு அஞ்சலி தெரிவித்து கொடிக்கால் ஷேக் அப்துல்லா காலச்சுவடு பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், ‘பிள்ளை கெடுத்தாள் விளை மிகச்சரியான கதை’ என்று வள்ளிநாயகத்திற்கு ஒரு கருத்து இருந்ததாக ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார்.

செத்துப்போன ஒருவரின் படைப்பை செத்துப்போன ஒருத்தர் ஆதரித்ததாக உயிருடன் இருக்கிற ஒருவரை வைத்து எழுத வைத்துள்ளார்கள். ‘சுந்தரராமசாமி மிக நல்லவர், எந்த ஒரு காலத்திலும் சொற்குற்றமோ, பொருட்குற்றமோ செய்யாதவர்’ என்று நிறுவ வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கிறது. ‘சுந்தரராமசாமியின் எழுத்துக்கள் தேவ வார்த்தைகள். அதை குறை காணும் தகுதி மனிதப்பிறவிகளுக்கு கிடையாது. நம் புலன்களுக்கு அது எட்டாது. இது உடன் இருந்தவர்களுக்குத் தெரியும், அவரை உற்றுப் பார்த்தவர்களுக்குப் புரியும். ஆதவன் போன்றவர்களுக்கு அது தெரியாது’ என்பதை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அந்த முயற்சிகளின் மூலம் தான் அவர் தவறு செய்தார் என்பதை நாம் மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

படித்தவர்களிடம் சாதிய உணர்வு இருக்கிறதா, அதை அவர்கள் எப்படி வெளிப்படுத்துகிறார்கள்?

இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் ‘இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா’ என்றும், பெண்விடுதலை குறித்து பேச்சு வரும்போது, இப்பல்லாம் எந்தப் பொம்பிளை கஷ்டப்படறா ஆம்பிளைங்க தான் கஷ்டப்படறாங்க என்றும் சொல்லும் ஒரு மேம்போக்கான போக்கு தென்படுகிறது. வெகுஜனப் பத்திரிகைகள் இந்தக் கேவலத்தை தொடர்ந்து செய்துவருகின்றன.

‘நானெல்லாம் ரொம்ப சோஷியல் சார், சாதியெல்லாம் பார்க்கிறதில்லை’ என்று சொல்பவர்களுக்கும் சாதியைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதுதான் உண்மை. பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் அவனால் எந்த இடத்திலும் சாதியை கைவிடமுடியவில்லை. பொது இடங்களில் அதை வெளிப்படையாக கொண்டாட முடியவில்லை அவ்வளவுதான். ‘நான் உயர்ந்தவன். நீ என் அருகில் உட்காரவோ, என் எதிரே நிற்கவோ கூடாது’ என்று பேச வைத்தது தான் தீண்டாமை. அந்தத் தீண்டாமையை வெளிப்படையாக கடைப்பிடிக்க முடியவில்லையே தவிர சாதியை எந்த இடத்திலும் யாரும் கைவிடவில்லை.

‘சாதி என்பது ஒருவன் திருமணம் செய்து கொள்வதற்கான எல்லை’ என்று முத்துமோகன் குறிப்பிடுவார். தன் அல்லது தன் குடும்பத்தாரின் திருமணத்தை இந்த சாதிய எல்லையைக் கடந்து செய்யாதவரைக்கும் அவன் சாதியைக் கடந்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. சொந்த சாதிக்குள்ளேயே மறுபடியும் மறுபடியும் திருமணம் செய்து கொள்வதால் சொந்த சாதியைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். அதில் ஒரு செங்கல் கூட விழுந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

சாதியைக் கைவிடாமலேயே நாள் முழுவதும் வெளியே சமதர்மவாதியாக உலவுவதற்கான எல்லா வாய்ப்புகளும் நமக்கு இப்போது இருக்கிறது. பள்ளியில் எல்லா சாதி மாணவர்களும் அருகருகே அமர்ந்திருப்பதாலேயே சாதியை இழந்துவிட்டதாக சொல்ல முடியாது. ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பதாலோ, ஒரே மேசையில் சாப்பிடுவதாலோ ஒருவர் சாதியைக் கைவிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. தீண்டாமையை வெளிப்படையாக கடைப்பிடிக்கப்பட முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடு தான் இதுவும் நடக்கிறது.

சொந்த சாதி ஆளாகவே வீட்டிலிருந்து கிளம்பி, சொந்த சாதி ஆளாகவே வேலைசெய்து, சொந்த சாதி ஆளாகவே கொண்டு சென்ற உணவை உண்டு, கையில் இருக்கும் பாட்டிலில் தண்ணீர் குடித்து சொந்த சாதி ஆளாகவே மாலையில் வீடு திரும்பி விடலாம். கண்டம் விட்டு கண்டம் சென்றவன் மட்டுமல்ல, கோள் விட்டு கோள் செல்பவனும் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து, அதே சாதியைச் சேர்ந்த, படித்த, அழகான, சிவந்த நிறமும், நீண்ட கூந்தலும் உடைய பெண்ணைத் தானே திருமணம் செய்து கொள்கிறான்?

தீண்டாமையைப் பழைய வடிவங்களில் பார்க்க முடியவில்லையே தவிர அதை முழுமையாக அவன் கைவிட்டுவிடவில்லை. ‘உயிரே போனாலும் நான் கடையில் சாப்பிடுவதில்லை’ என்பார்கள் சிலர். ‘கடையில் சாப்பிடுவேன் ஆனா நான்-வெஜ் சாப்பிடுறதில்லை’ என்பார்கள் சிலர். இதெல்லாம் என்ன? ஆட்டுகறி கேட்டால் மாட்டுக்கறியைக் கொடுத்து தன்னுடைய சாதிப் புனிதத்தை கெடுத்து விடுவார்கள் என்ற பயம்தானே? இப்படி மிக நுட்பமாக பல உத்திகளை வகுத்து தன்னுடைய சாதிப்புனிதத்தை காப்பாற்றும் பணி தொடரத்தான் செய்கிறது.

வெண்டைக்காயில் எத்தனை விதையிருக்கிறது என்றோ, எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைக் கால் என்றோ ஆய்வு செய்து ஆய்வாளர் பட்டம் பெறுகிற படிப்பாளிகளும் அறிவாளிகளும் இன்றும் அம்பேத்கர் குறித்து ஆய்வு செய்ய முன்வருவதில்லை. அவர் ஒரு பொருளாதார ஆய்வறிஞர். அவரது முதல் ஆய்வே பொருளாதாரம் பற்றியதுதான். பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்துவதற்காக சமஸ்கிருதத்தைப் பயின்று பல மூலநுல்களை வாசித்தவர். இந்தியாவிலிருக்கும் எல்லா மதங்களின் கோட்பாடுகளையும் நுணுகிக் கற்றவர். பௌத்தத்தில் கரை கண்டவர். பத்திரிகையாளர். மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி.

அவரது கட்டுரைகளில் ஒரு பத்தியில் குறிப்பிடும் மேற்கோள்களையும் அடிக்குறிப்புகளையும் புரிந்துகொள்ள நீங்கள் இன்னும் பத்து நூல்களைப் படிக்க வேண்யிருக்கும். ஆனாலும் அவரது பன்முகப்படட ஆளுமையையும் மேதமையையும் அறிவுலகத்திற்கு வழங்கிய கொடைகளையும் தொட்டுப்பார்க்கவும் அருவருப்பு கொண்டுள்ளனர். அவரது ஆய்வுமுறைமைகளைத் தொடர்ந்து சென்று ஒரு புதிய சிந்தனைப்பள்ளியை வளர்த்தெடுக்காமல் போனதற்குக் காரணம் இந்திய படிப்பாளிகளும் ஆய்வாளர்களும் கடைபிடிக்கிற தீண்டாமை தானே? இதேகதி தான் புலேவுக்கும் அயோத்திதாசருக்கும் நேர்ந்திருக்கிறது. அவர்களை முன்வைத்து நடந்த ஆய்வுகளெல்லாம் தலித்கள் மேற்கொண்டதுதானேயன்றி தலித்தல்லாதவர்களால் அல்ல.

நீங்கள் தொடர்ந்து பெரியாரை முன்னிறுத்தி எழுதுகிறீர்கள். சாதி ஒழிப்பில் அவரின் பங்களிப்பு மிக முக்கியம் என்பது தான் காரணமா அல்லது அவர் கொண்டாடப்பட வேண்டிய மிக முக்கியமான ஆளுமை என்று நீங்கள் கருதுகிறீர்களா?

இட ஒதுக்கீடு, நாத்திகம் போன்றவற்றுக்காக பெரியாரைக் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள், அவரை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். பெரியார் கடவுளை மறுத்ததால் மட்டும் தான் ஆதிக்க சாதிக்காரர்கள் அவரை விமர்சிக்கிறார்களா என்றால் இல்லை. அவர்களிலும் கடவுள் மறுப்பாளர்கள் இருக்கிறார்கள். ‘இந்திய சமூகம் சமத்துவமின்மையின் மீது கட்டப்பட்டிருக்கிறது’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். அதே அலைவரிசையில் தான் பெரியாரும் செயல்பட்டார். அதுதான் ஆதிக்க சாதியினரின் விமர்சனத்திற்குக் காரணம்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட தலைவர்கள், இயக்கங்கள் எல்லாமே ஒடுக்கப்பட்டவர்களிடம் மட்டும்தான் பேசின. ஆனால் ஒடுக்குகிறவர்களிடமே தாக்குதல் நடத்தியவர் பெரியார் ஒருவர்தான். கஷ்டப்படுபவனை பார்த்து நீ கஷ்டப்படுகிறாய் என்பதும், அதை அவன் ஏற்றுக்கொள்வதும் மிக இயல்பானது. ஆனால் ஒடுக்குகிறவனைப் பார்த்து, ‘நீ அவனை ஒடுக்குகிறாய்’ என்று சொல்லும் தைரியம் பெரியாருக்கு மட்டும்தான் இருந்தது.

ஒடுக்குமுறைகளின் அடிப்படைகளைக் கண்டறிந்து அதை நீக்குவது தான் மார்க்சிய தத்துவம். இந்தியாவில் ஒடுக்குமுறையின் அடிப்படையாக சாதியம் இருக்கிறது. அந்த அடிப்படைகளின் மீது கைவைக்கிற நிகழ்வாக பெரியாரின் பேச்சும் செயல்பாடும் இருந்தது. சாதி ஒழிப்பு என்பதிலும், வருணாசிரம எதிர்ப்பு என்பதிலும் பெரியார் அம்பேத்கரோடு ஒன்றுபட்டார். இந்த விஷயங்கள் தான் அவர்களுக்குள் தொடர்பு ஏற்படக் காரணமாக இருந்தது.

பெரியாரை ஆதரிப்பதற்கும், அவரை முன்னோடியாக நிறுத்துவதற்கும் பல்வேறு காரணங்களை சொல்லலாம். அதில் சிலவற்றையாவது வாசிப்பின் வழியாகத் தெரிந்து கொண்டதால் அவரை முழுவதுமாக ஆதரித்துப் பேசுகிறேன். அதனால் அவரை நான் என் முன்னோடியாகவும் கருதுகிறேன். பெரியார் மீது சில இடங்களில் இடதுசாரிகளுக்கு விமர்சனம் உண்டு. அதற்காக அவர்கள் பெரியாரை எந்த இடத்திலும் நிராகரிக்கவேயில்லை.

வகுப்புவாதப் பிரச்சனைகள் தலைதூக்கும்போது நாம் போராட்டங்களை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கட்டம் வரைக்கும் பெரியார் நடத்தியிருக்கிறார். அதன் தொடர்ச்சியைத்தான் நாம் மேற்கொண்டாக வேண்டும். கேரளாவில் நாராயணகுருவை உள்வாங்கிக் கொண்டு இடதுசாரிகள் செயல்படுவதுபோல் தமிழ்நாட்டிலும் பெரியாரை உள்வாங்கிக் கொண்டு செயல்படலாம்.

பெரியார் பேசியது வறட்டுத்தனமான நாத்திகம் என்றும், பெரியார் ஒரு பிள்ளையார் சிலையை உடைக்கப்போய் தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள் வந்துவிட்டதாகவும் சிலர் கூறுகிறார்களே, உண்மையா?

பிள்ளையார் சிலையை பெரியார் உடைத்ததை அந்தக் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, சிலையை பெரியார் உடைத்ததற்கான சமூகக் காரணத்தைத்தான் விளக்கவேண்டுமே தவிர பெரியாரை அல்ல. மூடநம்பிக்கை கரைபுரண்டோடி, மொத்த சமூகத்தையும் அடித்துப் புரட்டுகிறபோது, அதைத் தடுத்த நிறுத்த, கைக்கு கிடைத்ததையெல்லாம் பயன்படுத்துகிற பதற்றம் பெரியாருக்கிருந்தது.

மக்களிடம் மூடநம்பிக்கை எந்த மட்டத்தில் இருக்கிறதோ அந்த மட்டத்தில் போய் பெரியார் அதை மறுத்துக் காட்டினார். ‘கடவுளுக்கு எல்லாவற்றையும் காப்பாற்றும் சக்தி இருக்கிறதென்றால், நான் கடவுளை உடைக்கிறேன், முடிந்தால் அவர் அவரையாவது காப்பாற்றிக்கொள்ளட்டும்’ என்று சொல்லும் விதமாகத் தான் பிள்ளையார் சிலையை உடைத்தார். ‘என்னை கடவுள் படைத்தார், அவர் தான் என் தலையெழுத்தை எழுதி என்னைக் காப்பாற்றுகிறார்’ என்ற மக்களின் நம்பிக்கையை உடைப்பதற்காகத் தான் அவர் அதைச் செய்தார்.

எந்த ஒரு தத்துவமும் மக்களைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் கடவுள் என்கிற தத்துவம் மட்டும் மக்களை பயமுறுத்தி மூடனாக மாற்றுகிறது. எனவே அதிலிருந்து மக்களை மீட்பதற்கு தன்னாலான வழிகளை அவர் செய்தார். அதை வறட்டு நாத்திகவாதம் என்று ஒதுக்கிவிட முடியாது. தெருவுக்குத்தெரு பிள்ளையார் வைத்தவர்கள் யார்? ஏற்கனவே பிள்ளையாரை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள்தானே? பெரியார் செயல்பாட்டில் கடுப்பாகிப் போய் எந்த நாத்திகனும் ஆத்திகனாகிவிடவில்லையே? பெரியாரே சொல்வதுபோல், வேறெவரும் இந்தக் காரியங்களை செய்வதற்கு முன்வராததால்தானே அவர் செய்ய வேண்டியதாயிருந்தது?

பெரியார் பேசியது வறட்டுத்தனமான நாத்திகம் என்றே வைத்துக்கொள்வோம். அதை நிராகரித்துவிட்டு விஞ்ஞானப்பூர்வமான நாத்திகத்தை மக்களிடம் பரப்புவதை யார் தடுத்தார்கள்? ஒவ்வொரு அரசாங்க அலுவலகமும் இந்துமதத்தினருக்கு மட்டுமேயானது மாதிரி பூசை, புனஸ்காரங்கள் அங்கே நடக்கிறது. இந்துக்கடவுள்களின் விக்கிரகங்களும் சிலைகளும் இல்லாத அலுவலகமே கிடையாது. ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நடக்கிறது. அங்கிருக்கிற தொழிற்சங்கங்கள் உணர்வுமட்டம் தாழ்ந்துபோய் இதிலெல்லாம் பங்கெடுப்பதாய் மாறிவரும் கொடுமை நடக்கிறது. மத உணர்வுகள் பாதிக்கப்படும்னு சொல்லி எந்த இடத்திலும் நாம் நாத்திகம் பேசுவதில்லை, பகுத்தறிவு பற்றியும் பேசுவதில்லை, விஞ்ஞானக் கண்ணோட்டத்தை வலியுறுத்துவதில்லை. இப்போது யோசித்துப் பாருங்கள், பெரியார் செய்தளவுக்கு நாம் ஏதாவது செய்திருக்கிறோமா என்று?

சமூக நீதிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளை நீங்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள். நீதித்துறையின் இந்தப் போக்கிற்கு என்ன காரணம்?

நம்முடைய நீதித்துறை என்பது மக்களுக்கு நீதி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. ஆங்கிலேயர்கள் இங்கு வியாபாரம் செய்யும்போது அதை எதிர்ப்பவர்களை அடக்குவதற்காகத்தான் இந்திய நீதித்துறை உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு நீதிமன்றங்கள் வேறுமாதிரியாக செயல்பட ஆரம்பித்தன. மக்கள் இந்த ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இழக்கும்போது நீதிமன்றம் திடீரென்று சுறுசுறுப்படைந்து மக்களுக்காக பேசுவதுபோல் செயல்படும். மக்கள் செயலற்றுப் போய் அரசு அவர்களை அடக்கும்போது நீதிமன்றம் அரசோடு தன்னை இணைத்துக் கொள்ளும்.

அரசு சார்பில் வேலைக்கு ஆட்களை எடுப்பதில்லை. கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை கொடுக்கப்படுவது இல்லை. அரசு வேலைக்கு சமூக பாதுகாப்பு இல்லை. ஆனால் அதற்கு ஆதரவாக நீதிமன்றம் செயல்படுகிறது. அரசு ஊழியர்கள் இறந்துபோனால் அவர்களது வாரிசுக்கு வேலை தரவேண்டியதில்லை என்று ஒரு வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. பலமுறை எச்சரித்தும் மனைவியின் நடத்தையில் மாற்றமில்லை என்பதற்காக அவளைக் கொன்றுவிட்ட கணவனை நிரபராதி என்று தீர்ப்பளிக்கிறது ஒரு நீதிமன்றம்.

நீதிமன்றங்கள் குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கவில்லை. தனிநபரைச் சார்ந்து தான் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. நீதி வழங்கும் இடத்தில் இருப்பவர் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராகவோ, ஆணாகவோ பெண்ணாகவோ, ஒரு மதத்தைச் சேர்ந்தவராகவோ இருக்கிறார். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் ஏதோ ஒரு பிரிவில் வருகிறார். உலக விஷயங்களில் அவருக்குத் தனித்த கருத்து இருக்கிறது. அந்த கருத்துக்களுக்கு ஆதரவாக சட்டப்புத்தகத்தில் இருப்பவற்றை சொல்வதற்குத்தான் அவர் முயற்சி செய்கிறார்.

நம்முடைய சமத்துவமற்ற சமூகத்தை கட்டிக்காப்பாற்றும் வேலையைத் தான் எல்லா அரசு அலுவலகங்களும் செய்து வருகின்றன. அதே வேலையைத்தான் சட்டப்புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு நீதிபதிகளும் செய்கிறார்கள். வளமான நிலங்களை ஆக்கிரமித்து பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுவது பற்றியோ, விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சனைகள் பற்றியோ அவர்கள் வாயே திறப்பதில்லை. எய்ட்ஸ் சாவுகள் பற்றியும் ஹெல்மட் பற்றியும் குதிக்கிறவர்கள் தினமும் பட்டினியால் சாகிறவர்களைப் பற்றியோ சாதி வெறியர்களால் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டு இறக்கிற தலித் பெண்களைப் பற்றியோ சுண்டுவிரலைக்கூட அசைப்பதில்லை.

நெய்வேலி லிக்னைட் நிறுவனம் ஆரம்பித்து முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. அதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னமும் நஷ்ட ஈடு கிடைக்கவில்லை. பத்திரிகைச் செய்தியைப் பார்த்து அதையே ஆதாரமாகக் கொண்டு பல வழக்குகளை தானே முன்வந்து நடத்துகிற நீதிமன்றங்கள் இம்மாதிரியான பிரச்னைகளில் வழக்கு தொடுத்தாலும் தீர்ப்புகளை வேறுமாதிரியாகத் தருகின்றன. உலகமயமாக்கல் நடவடிக்கை முழுவதையும் கொள்கைப் பிரச்னை என்று சொல்லி தலையிட மறுக்கிறது நீதித்துறை. ஆனால் இடஒதுக்கீடு, ஆதம் பாலம் மாதிரியான விவகாரங்கள் வந்துவிட்டால் தேவையில்லாமல் நீளநீளமாக பேசத் தொடங்குகிறது.

இதற்கெல்லாம் நீதிமன்றத்தின் ஒற்றைச்சாதி அமைப்பு முறை தான் காரணம். அந்த ஒற்றைச்சாதி அமைப்பும் அவர்களின் வளர்ப்பு முறையும் அதன் வழியாக அவர்கள் உலகைப் பார்ப்பதற்கு கிடைக்கும் கண்ணோட்டமும் தான் இதற்கெல்லாம் காரணம். இது நம் சமூகத்தின் சமத்துவமற்ற நிலையைப் பாதுகாக்கத் தான் பயன்படுகிறது. சட்டத்துக்கு எல்லோரும் கட்டுப்பட்டவர்கள் என்று சொல்கிறோம். அந்த சட்டம் நீதிபதிக்கு கட்டுப்பட்டது. நீதிபதி அவரது சாதிக்கும், வளர்ப்பு முறைக்கும் கட்டுப்பட்டவராயிருக்கிறார்.

சாதியொழிப்பு, உலகமயமாக்க எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைக்களுக்கான போராட்ட வடிவங்களில் காணப்படும் போதாமையை நீங்கள் உங்கள் படைப்புகளில் சுட்டிக்காட்டி வருகிறீர்கள். போராட்ட வடிவங்களில் என்ன மாறுதல்களை எதிர்பார்க்கிறீர்கள்?

மறியல், தர்ணா, உண்ணாவிரதம் போன்ற எல்லாப் போராட்டங்களுமே அடிமைப்பட்டிருந்த நாட்டில் சுதந்திரத்தை மீட்டெடுக்க கண்டறியப்பட்ட வழிகள். சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகளாகியும் அந்த போராட்ட வடிவங்களை நாம் இன்னமும் மாற்றிகொள்ளவில்லை. புதிய சூழலை உள்வாங்கிக் கொண்டு ஏட்டளவில் இருக்கக்கூடிய சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு புதிய போராட்டங்களை நடத்தவேண்டும். நம்மிடையே போர்க்குணம் இல்லாததால்தான் போராட்ட வடிவங்கள் மழுங்கியிருப்பதாகக் கூட கொள்ளலாம்.

சுதந்திரத்திற்கு முன்பு நான்குபேர் ஒரு இடத்தில் நோக்கமின்றி கூடுவதும்கூட தடை செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் தடையை எதிர்த்து பொதுமக்கள் ஒரு இடத்தில் கூடுவது புரட்சி என்று கருதப்பட்டது. இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் அனைத்திற்கும் காவல்துறை அனுமதி அளிக்கிறது. அவர்களின் அனுமதியோடு நடத்தப்படுவது எந்தவகை போராட்டம்?

அன்று பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சேவை செய்யும் அரசு அலுவலகத்தை மறியல் செய்தோம். இன்று நம் மக்களுக்கு சேவை செய்யும் ஒரு அலுவலகத்தை மறிக்கிறோம். மறியல் தொடங்கியவுடனேயே காவல்துறை மறியல் செய்பவர்களைக் கைது செய்து பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கிறது. மறியல் என்பது காவல்துறைக்கும் மறியல் நடத்துபவர்களுக்குமான பிரச்சனையாக மாறிவிடுகிறது.

அன்றைக்கு உண்ணாவிரதம் என்று தன்னைத்தானே வருத்திக்கொண்ட போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டபோது பிரிட்டிஷ்காரர்களே பயந்தார்கள். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. ஒரு லட்சம் விவசாயிகள் பட்டினியால் தற்கொலை செய்து கொண்டதாக ‘சாய்நாத் அறிக்கை’ சொல்கிறது. ஒரு லட்சம் விவசாயிகளின் மரணத்தைப் பார்த்தும் மனமிரங்காத அரசும், அதிகாரிகளுமா, ஒருவேளை பட்டினிப் போராட்டத்தைப் பார்த்து மனமிரங்கப் போகிறார்கள்? அந்தளவிற்கு நேர்மையானவர்களையும் இரக்கவான்களையுமா நாம் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறோம்? இன்றைக்கு இருக்கிற ஆட்சியாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிற போராட்ட வடிவங்களை நாம் கண்டெடுக்க வேண்டும்.

மேலும் நம் போராட்டங்கள் முழுவதும் ஆண்களை முன்னிறுத்தியே இருக்கின்றது. பெண்களைப் பற்றி யோசிக்காமலேயே எல்லா முடிவுகளையும் எடுத்து வருகிறோம். காந்தி ஏற்றுக்கொண்ட அரை நிர்வாண முடிவை ஏன் கஸ்தூரிபாயால் எடுக்க முடியவில்லை? காந்திக்குள் இருக்கிற ஆண்தான் அந்த முடிவை நோக்கி அவரை நகர்த்தியிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். இயக்கங்களில் இருக்கிற பெண்களை கலந்தாலோசிக்க வேண்டும்.

பொது வேலை நிறுத்தம் என்று சொல்கிறோம். ஆனால் இதில் விவசாயிகள் எப்படி இதில் கலந்து கொள்ள முடியும்? அந்தந்த வேலைகளுக்கு ஏற்ப போராட்ட வடிவங்களும் நம்மிடம் இல்லை. எல்லாவற்றையும் மாற்ற வேண்டிய நேரமிது. சில நூதன வடிவங்கள் உடனடி கவனத்தைப் பெறுகின்றன. ஆனால் அதன் செயல்பாட்டெல்லை குறுகியது. தேசிய பிரச்னைகளில் குறுக்கிடக்கூடிய வெகுமக்களை ஈர்த்துக்கொள்ளக்கூடிய வடிவங்களை கண்டடைய வேண்டும்.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக ரகளை பண்ணுகிறவனும் சமத்துவம்கிறான். நேற்று கட்சி ஆரம்பித்த சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று பெயர் வைத்திருக்கிறார். வரவேற்கனும். ஆனால் சமத்துவம் என்றால் யாருக்கும் யாருக்கும் சமத்துவம்? அந்த சமத்துவத்தைக் கொண்டு வர உங்களிடம் என்ன செயல்திட்டம் இருக்கிறது? இல்லையென்றால் எதுக்கு இந்த வார்த்தை ஜாலம் என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

போராட்ட முடிவுகளைக் கூட ஆண்களே எடுப்பதாகப் பேசினீர்கள். சமூகம் சார்ந்த விஷயங்களில் பெண்களின் பங்கு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

அவர்கள் படிப்பு, வேலை என்று வெளியில் வரத் தொடங்கிவிட்டார்கள். சமூக நிகழ்வுகளில் அவர்கள் அதிகம் பங்கு பெறுவது இன்னும் நடைபெறவில்லை. 123 ஒப்பந்தம் மாதிரியான பிரச்சினை தொடர்பான கருத்தரங்குகளில் ஆண்கள் அதிகம் கலந்து கொள்கிறார்கள். அந்த ஆண் வீட்டுக்குப் போகும்போது இந்த ஒப்பந்தம் குறித்து என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே தெரியும் என்ற அகங்காரத்தில் செல்கிறான். அதனால் அவன் தன் மனைவியை இரண்டாம் பட்சமாகக் கருதுகிறான்.

ஆண்களின் தகவல் அறிவை நாம் அதிகரிப்பது அவனுடைய அதிகாரத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்து விடுகிறது. ஆண்களின் சபையாக சமூகத்தை மாற்றிக் கொண்டிருப்பதை அனுமதிக்கக் கூடாது. தலித்துகளுக்கு என்று கட்சி உருவாக்கப்பட்டு எங்களது ஓட்டுகளை நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என்ற நிலை வந்தபோது, மற்ற கட்சியினர் தலித் பிரச்சினைகளைப் பேச முன்வந்தார்கள். அதுபோல பெண்களுக்கென்று தனிக்கட்சி வரும்போது பிற கட்சிகளும் பெண்களின் பிரச்சனைகள் குறித்து பேச முன்வருவார்கள்.

ஒரு நாவலுக்கான விஷயத்தை ஒரு கவிதையாக எழுதுகிறீர்கள். மற்றவர்கள் கட்டுரையாக எழுதிக் கொண்டிருக்கும் உலகமயமாக்கல், சதாம் கொலை போன்ற சமகாலப் பிரச்சினைகளை, செய்திகளை நீங்கள் சிறுகதையாக எழுதுகிறீர்கள். ஒன்றை எழுத ஆரம்பிக்கும்போது, இது கதைக்கானது, இது கவிதைக்கானது என்பதை எப்படி தீர்மானிக்கிறீர்கள்?

இப்படித்தான் எழுதவேண்டும் என்று எதையும் திட்டமிட்டு எழுதுவதில்லை. நாம் பார்க்கிற, நமக்குள் தோன்றுகிற விஷயங்கள் ஒரு கட்டத்தில் எழுத்தாக வெளிவருகிறது. அது எந்த வடிவத்தில் வரவேண்டும் என்பதை அதுதான் தீர்மானிப்பதாக நான் நினைக்கிறேன். நான் எந்த மாதிரியான எழுத்தாளன், என்னுடைய பாடுபொருள் என்ன, கதைமாந்தர்கள் யார் என்று ஏற்கனவே ஒரு தீர்மானம் இருக்கிறது. அந்த நோக்கத்திற்கு இசைவாகத்தான் நமது மனம் இயங்கிக் கொண்டிருக்கும். முடிவற்ற அந்த இயக்கத்தின் ஒரு கட்டமாகத்தான் எழுதத் தொடங்குகிறோம்.

சமகால பிரச்சனைகளை கதைக்குள் கொண்டு வருவதாகக் குறிப்பிட்டீர்கள். சங்க இலக்கியத்தை வைத்துக்கொண்டு அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை முறைகள், இயற்கை, அரசு அமைப்பு, ஆண் பெண் உறவு என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியும். அவற்றைப் படிக்கும்போது, ‘இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த 2007ம் வருடத்தை பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவார்களே, இதை நாம் பதிவு செய்திருக்கிறோமா’ என்ற கேள்வி எனக்குள் வருகிறது.

வாழும் காலத்தை என்னவாக எதிர்கொண்டோம் என்ற கேள்வி மிக முக்கியமானது. சதாம் உசேன் கொல்லப்பட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கான பதிலை நான் நம் சந்ததியினருக்கு சொல்லிச் செல்ல வேண்டியிருக்கிறது. சதாம் உசேன் கொலை குறித்து இங்கு என்ன பதிவு இருக்கிறது? அஞ்சலிக் கவிதை, ‘வருந்துகிறோம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை போன்றவற்றை எழுதுவதில் எனக்கிருந்த அலுப்புதான் என்னை சதாம் உசேன் குறித்து சிறுகதை எழுதத் தூண்டியது.

அதேபோல் தான் உலகமயமாக்கலும். உலகமயமாக்கல் ஏதோ நேற்று தோன்றிய ஒரு விஷயமல்ல. ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பதே உலகமயமாக்கல்தானே. தமிழ்நாட்டில் ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்படுவது முந்தைய உலகமயமாக்கலின் அடையாளம் தானே. உலகம் தனக்குள் பரிவர்த்தனைகளை நிகழ்த்திக் கொண்டு ஒரு சமூகமாய் இணங்கி வாழ கடந்த காலத்தில் செய்த இப்படியான முயற்சிகளுக்கு மாறானது இப்போது நாம் பேசுகிற உலகமயம்.

நான் வாழும் காலத்தில் இந்த உலகமயமாக்கலின் ஒரு புதிய வடிவத்தைப் பார்க்கிறேன். இரண்டாவது பத்தாண்டு சீர்த்திருத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அது சீர்திருத்தமா, சீரழிவா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அது சீர்திருத்தம் கிடையாது என்று எனக்குத் தெரிகிறது. மூன்றாம் உலகநாடுகளின் வளங்களை கொள்ளையடிக்க அந்தந்த நாட்டு அரசாங்கங்களையே உறிஞ்சுகுழல்களாகப் பயன்படுத்தும் இந்த ஏற்பாடு வெறும் அணா பைசா விசயம் அல்ல என்பது புரிகிறது. ஆனால் இந்தக் கொடுமையை தனிநபராக எதிர்க்கும் வல்லமை எனக்குக் கிடையாது. எனவே எனக்குத் தெரிந்த எழுத்தின் வழியாக என்னுடைய எதிர்ப்பை நான் பதிவு செய்யகிறேன்.

எழுத்தைத்தவிர இடதுசாரி இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள், மேடைப்பேச்சு என்று பல தளங்களில் இயங்கி வருகிறீர்கள். சாதியத்துக்கு எதிரான உங்களது செயல்பாட்டுக்கு எழுத்து மட்டுமே போதாது என்று கருதுகிறீர்களா?

தனது துயரங்களைப் புரிந்துகொள்கிற ஒரு சமூகச்சூழலை உருவாக்குவதும் ஒடுக்கப்பட்டவர் சார்பாக எழுதுகிறவர்களின் வேலையாகிறது. எனவே எழுதிக் கிழித்ததோடு என் வேலை முடிந்துவிட்டது என்று நான் தூங்கப் போய்விட முடியாது. என் எழுத்துக்களோடு மக்கள் சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளோடு ஊடாட்டம் கொள்ள வேண்டியிருக்கிறது. எழுத்து எப்படி தனிநபர் செயல்பாடோ அதைப்போன்றது தான் பேச்சும். பேச்சு என்பது அர்த்தமுள்ளதாய் இருக்க வேண்டியிருக்கிறது. எனவே சொற்பொழிவாக அல்லாமல் உரையாடலாகத் தான் அமைத்துக்கொள்கிறேன். சமூகத்தை மொன்னையாகப் பார்ப்பதிலிருந்து விலகுகிற, அதன்மீது கேள்விகளை எழுப்புகிற, பிரச்சனைகளை எப்படி அணுக வேண்டும் என்ற விமர்சனப்பார்வையை உருவாக்குவது தான் இந்த உரையாடலின் நோக்கம்.

ஆரம்பத்தில் கவியரங்க மேடைகளில் கவிதை வாசித்திருக்கிறீர்கள். கவியரங்கக் கவிதைகள் மிகவும் எளிமையானவை. தற்போதைய உங்களது கவிதைகள் சற்று சிக்கலான மொழிநடையில் அமைந்திருக்கின்றன. அடுத்தகட்டமாக இசைப்பாடல்களும் எழுதுகிறீர்கள். அவை மிக எளிய நடையில் இருக்கின்றன. மூன்றையும் எப்படி பார்க்கிறீர்கள்?

கவியரங்கத்தில் வாசிப்பது தான் கவிதை என்ற காலகட்டத்தில் நானும் கவியரங்கக் கவிதைகள் வாசித்திருக்கிறேன். பின்னர் அதில் நிறைய கேள்விகள் வந்தது. உலகின் மிகப்பெரிய தத்துவங்கள் கூட ஒருமுறை தான் சொல்லப்படுகின்றன. கவியரங்கக் கவிதைகள் அதையும் மீறியதா, எதற்காக இரண்டிரண்டு தடவை வாசிக்கவேண்டும் என்ற கேள்வி வந்தது. பார்வையாளர்களின் கைத்தட்டலுக்காக கவிதையை நிறுத்தி நிறுத்திப் படிப்பது, குரலில் ஏற்றஇறக்க மாற்றங்களைக் காண்பிப்பது போன்றவை சலிப்பைத் தந்தது.

ஒரு கவியரங்கக் கவிதையை பத்துநாட்களுக்குப் பின்னர் படித்தால் அதன் தேவையை அது இழந்திருக்கும். ஒரு பத்திரிகை செய்தி அளவுக்குத்தான் அதன் ஆயுளும் இருக்கும். எதிரில் அமர்ந்திருப்பவர்கள் வாசகர்களோ, இலக்கியவாதிகளோ அல்ல. கேட்பதற்காக வந்திருப்பார்கள். அவர்களுக்காகப் படிக்கும்போது அர்த்தமற்ற வார்த்தைகளின் தொகுப்பாகக்கூட கவிதைகள் அமைந்திருக்கும்.

பாடல் என்று வரும்போது அதைக் கேட்பவர்கள் இலக்கியவாதிகள் அல்ல, வெகுஜன மக்கள். அவர்களுக்கு என்னுடைய கருத்தை சொல்வதற்காக என்னுடைய மொழி நடையை தளர்த்திக் கொள்கிறேனே தவிர கருத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. பாடல் என்பது ஒரு கருத்தை சொல்வதற்கான திட்டமிட்ட வேலை. கவிதை என்பது அப்படியல்ல. வேறுவேறு அனுபவங்களை எழுத வரும்போது முன்னில் இருந்து இறுக்கமான செறிவான மொழி கிடைத்தது. தொடர்ந்த வாசிப்பும் எழுத்துப்பயிற்சியும் உள்ளவர்களுக்கு இது வாய்க்கக்கூடியதுதான்.

எழுத்தாளர்களில் சிலர் எழுதுவதையே பெரிய புரட்சி என்றும், ‘நான் உங்களுக்காக எழுதுகிறேன், உங்களுக்காக நான் என்னையே தியாகம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் என்னைப்பற்றி இந்த சமூகத்திற்கு எந்த அக்கறையும் இல்லை. குடிப்பதற்குக் கூட காசில்லை. வேறுநாட்டில் எழுத்தாளர்களை எப்படியெல்லாம் மதிக்கிறார்கள். தமிழ்நாட்டில் தான் இந்த நிலைமை’ என்றும் தொடர்ந்து புலம்பி வருகிறார்களே?

புலம்புபவர்கள் தங்கள் எழுத்தையே இலக்கியச் சேவையாக கருதினால் நான் ஒன்றும் செய்ய முடியாது. இந்த சமூகத்தில் எந்த ஒரு விஷயம் என்னை சுலபமாக கடந்து செல்ல அனுமதிக்கவில்லையோ அதைத்தான் அந்த இடத்தில் நின்று எதிர்கொண்டு ஒரு எழுத்தாளனாக நான் எழுதுகிறேன்.

தெருவில் ஒரு சண்டை நடக்கிறது. அந்தப் பக்கமாக செல்லும் ஒருவர் அதை விலக்கி விட்டு விட்டு செல்கிறார். அதை அவர் பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பதில்லை. அதே வேலையை ஒரு எழுத்தாளன் செய்தால் அதை அவன் எழுத வேறு செய்கிறான். அதற்காக எழுத்தாளனை கொண்டாட வேண்டும் என்றும் அவன் நினைத்தால் அது அவனுடைய தவறு தான். தங்களுக்கு ஏற்படும் மனக்கிளர்ச்சியை, அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்காகத் தான் எல்லோரும் எழுதுகிறார்கள். அப்படி எழுதுவதை எழுத்தாளன் தியாகம் என்று நினைத்தால், அதைப் படிக்கிற நானும் தியாகி தான் என்று வாசகர்களும் சொல்லலாமே. எழுதுவது என்பது தியாகம் சம்பந்தப்பட்ட விஷயமே கிடையாது.

சமூகத்தோடு தொடர்ந்து இணைவதும், முரண்படுவதுமாகத் தான் நாம் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதை நாம் எழுத்து வழியாகத் தெரிவிக்கிறோம். மற்றவர்கள் ஏதோ ஒரு மீடியம் வழியாகத் தெரிவிக்கிறார்கள். தன்னைப் பற்றிய பெருமையிலோ, கழிவிரக்கத்திலோ தம்பட்டம் அடிக்கும் செயல்தான் இது.

ஒரு புத்தகத்தையோ, நாடகத்தையோ படிக்கும் அல்லது பார்க்கும் வாசகனோ, நேயரோ அதனால் பாதிப்பு அடைந்தால் அவனது மனதில் சிறு கீறலோ, அசைவோ ஏற்பட்டால் அவன் வேண்டுமானால் எழுதியவனைப் பாராட்டலாம். அதை விடுத்து தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதற்காக, ஷீல்டு வாங்கி ஜோல்னாப் பையில் வைத்துக்கொண்டு அலைவது தேவையற்ற விஷயம். சமூக அக்கறையுள்ள படைப்பாளி இந்த சமூகத்தோடு உரையாடுவதற்காக எழுதுகிறான். அதைப் படித்துவிட்டுத்தான் உலகம் விடிகிறது என்று சொல்வதோ, தன்னைக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ அபத்தமான காரியம்.

வேதம் படிப்பதற்கு குறிப்பிட்ட சாதியில் பிறக்கவேண்டும் என்பதைப் போலவே இலக்கியம் படைப்பதற்கு தனி ஆளுமை வேண்டும், அறிவு வேண்டும், தேஜஸ் வேண்டும், இன்னும் என்னென்னமோ வேண்டும் என்று கூறுகிறார்கள். இதன்மூலம் எழுத்தாளர்களைப் புனிதப்படுத்தும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. இதனால் எழுத்தாளனை இந்த சமூகம் கொண்டாடுவதற்குப் பதிலாக தன் எழுத்தின்மீது அதீத நம்பிக்கை கொண்டு எழுத்தாளன் தன்னைத் தானே கொண்டாடிக் கொண்டிருக்கிறான்.

கலைஞனைக் கொண்டாடாத சமூகம் உருப்படாது என்று சொன்னால் உழவனையோ, தொழிலாளியையோ கொண்டாடாத சமூகம் மட்டும் உருப்பட்டு விடுமா? நீ எழுதும் கவிதைகளைத் தூக்கி வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கும் எந்த அவசியமும் இந்த சமூகத்துக்குக் கிடையாது. இந்த சமூகத்தைப் பதிவு செய்கிறவனாக, உன் கருத்தைத் தெரிவிப்பவனாக இருக்கும் பட்சத்தில் உனக்கான அளவில் இந்த சமூகம் உன்னை கொண்டாடத் தான் செய்கிறது. உனக்கு குடிப்பதற்குக் காசில்லை என்பதெல்லாம் இந்த சமூகத்தின் பிரச்சனையும் கிடையாது.

Aadhavan Dheetchanya இவர்களைப் பற்றி நாம் பேச வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.

எழுத்தாளர்கள் அரசியலுக்கு வரும்போது, இலக்கியவாதியாக யாரையெல்லாம் விமர்சித்தார்களோ, அவர்களையெல்லாம் அரசியல்வாதியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களே?

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதுபற்றி எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் பார்வையற்றவர்களின் விழியாக, குரலற்றவனின் குரலாக என்னுடைய எழுத்து ஒலிக்கும் என்று இலக்கியவாதியாக இருக்கும்போது இவர்கள் தங்கள் படைப்புக்கு பல பீடிகைகளை வைத்திருந்தார்கள். அதற்கு இசைவான அரசியலை தேர்ந்தெடுக்கிறார்களா என்பதுதான் எனது கேள்வி. பதவி, அதிகாரம் என்ற இரண்டு வழிகளில் பொருளாதார ஆதாயத்தை தேடிக் கொள்கிறார்கள். இதைத்தான் எல்லா அரசியல்வாதிகளும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை அடைவதற்கு கூடுதல் தகுதியாக எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளையும் கட்டுரைகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இலக்கியவாதியாக இருப்பது என்பது ஒரு எதிர்க்குரல் தான். ஆனால் அதன் மூலம் வாசகனுக்கு அறிவுரைகள் கூறிவிட்டு எழுத்தாளன் மட்டும் மறுபடியும் ஆதாயத்தையும், பணத்தையும், சொகுசு வாழ்க்கையையும் தேடிப் போகிறார்கள். இதே எழுத்தாளர்கள் இடதுசாரி அமைப்பிலுள்ள எழுத்தாளர்களை கேவலமாகப் பேசிய காலங்கள் உண்டு. அவர்களால் இடதுசாரி இயக்கங்களில் செயல்படுவது தான் சிரமமான வேலையாக இருக்குமே தவிர கழிசடை அரசியல் செய்வதில் வெட்கம் எதுவுமில்லை. இதை யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதால் தான் நவீன இலக்கியம் குறித்தும் அடிக்கடி கருத்து தெரிவிக்கிறார்கள்.

சிற்றிதழ்கள் விசிட்டிங் கார்டு போல் பயன்படுத்தப்படுவதாக சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் கூறியிருந்தார். இந்த விமர்சனத்தை சிற்றிதழ் ஆசிரியரான நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

இலக்கிய பீடம் என்று ஒருவரை முடிவு செய்வது, அவர்கள் சொல்வதுதான் சிற்றிதழ், அவர்கள் சொல்பவர்கள் தான் படைப்பாளி என்று முடிவு செய்வது இதெல்லாமே அபத்தமான விஷயங்கள். இந்தியாடுடேயின் சிற்றிதழ் குறித்த பேட்டியில் மனுஷ்யபுத்திரன், சிற்றிதழ்களை விசிட்டிங் கார்டு போல் பயன்படுத்துவதாக குறிப்பிட்டிருந்ததை நானும் படித்தேன். சிற்றிதழை விசிட்டிங் கார்டு போல் பயன்படுத்தும் வேலையை அவர்தான் சரியாகச் செய்தார்.

நக்சல்பாரி பத்திரிகைகளின் மூலமாக மனுஷ்யபுத்திரன் அறிமுகமானார். காலச்சுவடு தீவிரமான சிற்றிதழாக இயங்கிக் கொண்டிருந்தபோது அங்கு சென்றார். அந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு செந்திலோடு உயிர்மைக்குப் போனார். அந்த சிற்றிதழைத் தவிர அவருக்கு வேறு என்ன அடையாளம் இருக்கிறது? உயிர்மை என்கிற விசிட்டிங் கார்டை சரியான நபர்களிடம் காட்டி அதன்மூலம் ஆதாயம் பெற்று அதை தக்கவைத்துக் கொண்டது ஒரு தனிவகை சாமர்த்தியம்தான்.

வரக்கூடிய பத்திரிகைகள் தரமாக இல்லை என்று வருத்தப்பட்டால் அது வேறு விஷயம். அதை எப்படி சரியாக வெளியிட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லித்தரலாம். முன்னோடி என்பவர் செய்யவேண்டிய வேலை அதுதானே. அதைவிட்டு விட்டு எல்லோரும் பத்திரிகை ஆரம்பித்து விட்டார்கள் என்று சொல்லி வருத்தப்படுவது, ‘எல்லோரும் படிக்க வந்துட்டாங்க, வேலைக்கு வந்துட்டாங்க’ என்று பதறக்கூடிய ஆதிக்கசாதி மனநிலைதானே. அந்த மனோபாவம் மனுஷ்யபுத்திரனுக்கு எதற்கு?

தங்களின் படைப்புகளை தாங்களே பாராட்டிக் கொள்வது, அதை ஆதரித்துப் பேசுவதற்காகவே ஒரு குழுவை ஏற்படுத்திக் கொள்வது, தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்வது – இவையெல்லாம் தமிழ்ச்சூழலில் அதிகரித்து வருகிறதே?

படைப்பு மனோபாவம், சொல்லாட்சி என்று விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கவிதை எழுதிவிட்டு அதை யாரும் பாராட்டாத பட்சத்தில் தன்னைத்தானே பாராட்டிக் கொள்வதற்காக கூடுகின்ற கூட்டம்தான் இது. ஒரு இலக்கிய முகாம் நடந்து முடிந்தவுடன் அங்கு நடந்த அடிதடியைப் பற்றி கிசுகிசு வருவது தவறாமல் நடக்கிறது. இந்த விவாதங்களுக்கு மையப்புள்ளியே தங்களைத் தாண்டி வெளியே ஒரு உலகம் இருக்கிறது என்பதை அறியாமல் இருப்பதுதான்.

ஆனால் இடதுசாரி படைப்பாளிகளுக்கோ, பெண்ணிய படைப்பாளிகளுக்கோ, தலித் படைப்பாளிகளுக்கோ எழுதியதைப் பற்றியே பேசுவது, அதையே சிலாகிப்பது மட்டுமே வேலை அல்ல. எந்த சமத்துவத்தை கனவு காண்கிறார்களோ அதற்கான மக்கள் இயக்கங்களில் பங்கெடுப்பது, அந்தப் பாதையில் செல்வது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார்கள். களத்திற்கு போக வேண்டியிருப்பவர்களால் தன் கவிதையை உட்கார்ந்து சிலாகித்துக் கொண்டிருக்க முடியாது.

எழுதுவதைத் தவிர எனக்கு வேறு வேலையில்லை என்பதும் எழுத்தின் மூலமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதும் முட்டாள்தனம். அதையாவது பொறுத்துக் கொள்ளலாம். தான் எழுதுவதைத் தவிர வேறு வேலை செய்யாமல் இருப்பதற்காக போலியான தத்துவங்களை அவர்கள் உருவாக்க முயல்வதைத் தான் சகிக்க முடியவில்லை.

படைப்புகளைப் பற்றி தொடர்ந்து நடைபெறும் விவாதங்களில் வாசகனுக்கு இடம் உண்டா? ஒரு புத்தகம் 1200 பிரதிகள் அச்சிடப்பட்டால் அதைப் பற்றி 1200 பேர் பேசலாம். ஆனால் தமிழ்ச் சமூகம் ஏழு கோடி மக்களை கொண்டது. இந்த இலக்கியம் குறித்து தெரியாமலே பெரும்பகுதி சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களோடு எப்படிப் பொருந்துவது என்று தான் யோசிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு நான் மேதாவி, அறிவுஜீவி என்று தனியாக உட்கார்ந்து விட்டால் எந்த மாற்றமும் நடக்காது.

தலித் இலக்கியத்தை தலித்கள் தான் எழுத வேண்டும் என்ற கருத்தும், அதற்கு எதிராக ‘அவர்கள் மேல் அக்கறை கொண்ட யார் வேண்டுமானாலும் எழுதலாம்’ என்ற கருத்தும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதில் உங்களது நிலைப்பாடு என்ன?

தீண்டாமையின் கொடுமையை அனுபவிக்காதவர்களால் தீண்டாமை குறித்து எழுத முடியாது. ஒரு பெண்ணின் துயரங்களை எப்படி ஆணால் உணர முடியாதோ, அதேபோல் ஒரு தீண்டத்தகாதவனின் பிரச்சனைகளை தீண்டத்தக்க சாதியை சேர்ந்தவனால் ஒருபோதும் உணர முடியாது. சமீபத்தில் ஒரு பத்திரிகையில் கோபிச்செட்டிபாளையத்தின் முன்னாள் நகராட்சித் தலைவர் லட்சுமண ஐயரின் பேட்டி வெளியானது. இந்தியாவில் கையால் மலம் அள்ளும் முறையை முதன்முதலில் கோபி நகராட்சியில் ஒழித்தவர் இவர்தான்.

அந்த முறையை ஒழித்ததற்கான காரணம் குறித்து கேட்டபோது, சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றபோது அங்கே நாங்கள் கையால் மலம் அள்ள வேண்டியிருந்தது. அந்த ஒன்று போதாதா இதை ஒழிப்பதற்கு என்று குறிப்பிட்டிருந்தார். அப்படியானால் உன்னை அள்ள வைத்தால் தான், இந்த வேலை எவ்வளவு துயரமானது, அவமானகரமானது என்று புரிகிறது. அந்த அவமானங்களை சந்திக்காத ஒருவனால் அது குறித்து எப்படி எழுத முடியும். மற்றவர்கள் எழுதுவதை சாதி ஒழிப்பு எழுத்து, தலித் ஆதரவு எழுத்து என்றுதான் பார்க்க முடியும்.

வேடிக்கை பார்த்து எழுதுவது என்பது வேறு. அனுபவித்து எழுதுவது என்பது வேறு. அதாவது பாவனைக்கும் உண்மைக்குமான இடைவெளி அதில் இருக்கும்.

(ஒவ்வொரு கேள்விக்கான பதிலும் அடுத்தடுத்த விவாதத்திற்கு இட்டுச் செல்வதாய் இருந்ததால், நேர்காணலை எங்கே முடிப்பது என்ற கேள்விக்கான பதில் சற்று எட்டியே இருந்தது. மேலும் சில கேள்விகளுடன் வேறொரு பொழுதில் நேர்காணலைத் தொடரலாம் என்ற எண்ணத்துடன் இத்துடன் நிறுத்திக் கொண்டோம்)