Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Saturday, December 4, 2010

டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் - திரைப்படம் அல்ல... ஒரு வரலாற்றுப் பாடம்

 

இந்தியாவின் தனித்துவம் என்னவென்றால் இந்திய சமுதாய அமைப்புதான் என்று பெருமிதத்துடன் கூறுவோர் உண்டு. வேலைப்பிரிவினை அடிப்படையில் கட்டப்பட்ட இந்திய சமுதாய அமைப்பு போல் உலகில் வேறெங்கும் காண இயலாது எனப் புளகாங்கிதம் அடைவோர் உண்டு. ஆனால், சிந்திக்க விடாமல் தடுக்கிற இப்படிப்பட்ட பெருமைத் திரைகளின் பின்னால் இருப்பது, பிறப்பால் மனிதர்களுக்குத் தாழ்ச்சியும் உயர்ச்சியும் கற்பித்த சாதிப் பாகுபாடுதான்.

அறிவு சார்ந்த வன்முறை, உடல் சார்ந்த வன்முறை இரண்டு வகையாலும் சாதி அடுக்கின் மேல் தட்டுகளில் அமர்ந்துகொண்டவர்கள், அவர்களுக்குக் கீழேதான் மிதிபட வேண்டும் என்றாலும் தங்களிடமும் மிதிபடுவதற்கு என சில பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டதால் இந்த ஏற்பாட்டை ஒப்புக்கொண்டவர்கள், இந்த மேல்தட்டினர் அனைவரிடமும் மிதிபடுவதற்கென்றே அடித்தட்டிற்குத் தள்ளப்பட்டவர்கள்... இதையெல்லாம் தத்துவமாக்கியதே வர்ணாசிரம (அ)தர்மம். இது இந்த நாட்டின் மிகப்பெரிய அவமானமேயன்றி, பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை.
உலகமறிய இந்த உண்மையை உரக்கக்கூறியவர், சாதி-வர்க்க பேதம் ஒழிப்பதற்கான அரசியல் இயக்கத்தை வழிநடத்தி அதற்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்தவர் டாக்டர் அம்பேத்கர். அவரைப் பற்றிய ஒரு திரைப்படம் ஆங்கிலத்தில் 2000வது வெளியானது. சிறந்த ஆங்கிலப்படம், சிறந்த நடிகர், சிறந்த கலை இயக்குநர் ஆகிய தேசிய விருதுகளையும் பெற்ற இந்தப் படம் இந்தி, மலையாளம் உள்ளிட்ட மற்ற பல இந்திய மொழிகளில் மறுபதிப்புச் செய்யப்பட்டு அந்த மாநிலங்களின் மக்களையும் சென்றடைந்தது. தமிழிலும் வருகிறது என்ற தகவல் வந்தது, ஆனால் படம் திரையரங்கிற்கு வராமலே இருந்தது.

 இப்போது அதிலிருந்த சட்டச் சிக்கல்கள் களையப்பட்டு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நேரடி விநியோகத்தில் தமிழக மக்களிடமும் வருகிறது.
மழைக்காகக் கோவில் மண்டபத்தில் ஒதுங்குகிற தலித் இளைஞனை அடித்து நொறுக்குகிற ஒரு ஆதிக்க சாதிக்கூட்டம், உன் மனசில் என்ன அம்பேத்கர்னு நினைப்பா என்று கேட்பதுடன் படம் தொடங்குகிறது. ரத்தச்சேற்றில் அந்த இளைஞனின் உடல் கோயில் வாசலில் நந்தி சிலையருகே கிடப்பதாகக் காட்டப்படுவது ஆழ்ந்த அர்த்தமுள்ள காட்சி.
மன்னரின் நிதியுதவியோடு மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் செல்கிறார் அம்பேத்கர். படிப்பு முடிந்து வந்தபின் அரண்மனையில் அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்பது ஒப்பந்தம். தந்தையின் எதிர்ப்பை மீறி வெளிநாடு புறப்படுகிற அம்பேத்கரின் நோக்கம் அரண்மனை வேலைக்காகப் பட்டம் பெறுவதல்ல. சிறு வயது முதல் அவர் அனுபவித்த சாதிப் பாகுபாட்டு இழிவுகளுக்கான வரலாற்று மூலங்களைக் கண்டுபிடிக்கிற ஆராய்ச்சியே நோக்கம். அப்படி அவர் கண்டுபிடித்த உண்மைகள்தான், சமுதாய விடுதலையை இணைக்காமல் இந்தியாவின் அரசியல் விடுதலை என்பதில் அர்த்தமில்லை என்ற உறுதியான எண்ணத்தை அவருக்குள் விதைக்கிறது. அந்த எண்ணத்தின் தாக்கத்தில், தீண்டாமைக்கும் சாதி வேற்றுமைகளுக்கும் எதிரான போராளியாக அவர் பரிணாம வளர்ச்சி கொள்ளகிறார்.
இதே அடிப்படையில்தான் அவர் காந்தியிடம் மோதுகிறார். பிரிட்டிஷ் அரசுடனான பேச்சுவார்த்தையில் தலித் மக்களுக்கு என தேர்தல்களில் தனித்தொகுதிகள் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். அது மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தில் பிளவு ஏற்படுத்திவிடும் என்று கூறுகிற காந்தியுடன் வாதாடுகிறார். அம்பேத்கரின் இக்கோரிக்கையை எதிர்த்து ஆதிக்கசாதியினர் கலவரங்களில் ஈடுபடுகிறார்கள். பிரிட்டிஷ் அரசு இந்தக் கோரிக்கையை ஏற்கக்கூடாது என வலியுறுத்தி தனது உண்ணாவிரதப் போராட்ட ஆயுதத்தை கையில் எடுக்கிறார் காந்தி. அவரது நாடித்துடிப்பு குறைந்து வருகிறது என மருத்துவர்கள் எச்சரிக்க காந்தியின் மகன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அம்பேத்கருக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். "என்னுடைய நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வற்புறுத்துகிறவர்கள் காந்தியைப் பார்த்து அவருடைய நிலைபாட்டை மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்," என்று அம்பேத்கர் கேட்பதில் எத்தனை நியாயம்! எனினும் காந்தியை சந்திக்கிறார், ஒரு உடன்பாடு ஏற்படுகிறது. அப்போது "உண்ணாவிரத ஆயுதத்தை அடிக்கடி கையில் எடுக்காதீர்கள் காந்திஜி," என்று அம்பேத்கர் கூறுகிறபோது திரையரங்கில் எழுகிற கைதட்டல் ஒலி, ஒரு நுட்பமான அரசியல் புரிதலை வெளிப்படுத்துகிறது.
அம்பேத்கர் ஒரு பாரிஸ்டர் பட்டம் பெற்ற பிராமணர் என்று நினைத்த காந்தி அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து வியக்கிறார். பின்னர் சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராக இருக்கத் தகுதி வாய்ந்தவர் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாகவே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அம்பேத்கரின் பெயரை பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் காந்தி பரிந்துரைக்கிறார். அன்றைய அரசியலின் உயர்ந்த தரத்தை இப்பதிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.
தலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம், பொதுக் குளத்தில் நீர் பருகும் போராட்டம் என அடுத்துதடுத்த ஓட்டம் அன்றைய உண்மைச் சூழலை உணர்த்துகிறது. இந்தப் போராட்டங்களுக்கான தேவைகள் முற்றிலுமாக மாறிவிடவில்லை என்ற இன்றைய உண்மைச் சூழலோ உறுத்துகிறது.
சட்ட வல்லுநராக மட்டுமல்ல, குடியரசாக ஆகிவிட்ட இந்தியாவின் சட்டங்கள் எந்தத் திசையில் அமைய வேண்டும் என்பதைத் தீர்மானித்த அரசமைப்பு சாசன நிர்ணயக் குழுவின் தலைவராகவும் வரலாற்றுப் பங்களித்தவர் அம்பேத்கர். குழுவின் மற்ற உறுப்பினர்களில் பலர் ஒத்துழைக்காத பின்னணியில் மற்ற பல நாடுகளில் இருந்து மாறுபட்ட, பெருமைக்குரிய ஒரு அரசமைப்பு சாசனத்தை உருவாக்கிக் கொடுத்த தலைமகனாகத் திகழ்ந்தவர் அம்பேத்கர்தான் என்ற உண்மையை நாடாளுமன்றம் அங்கீகரிக்கிற இடம், படத்தைப் பார்ப்பவர்களுக்கும் அதனைத் தெளிவு படுத்துகிறது.
சட்ட அமைச்சராக, ஒரு முக்கியமான சட்டத்தைக் கொண்டுவர முனைகிறார் அம்பேத்கர். இந்து திருமணச் சட்டம், விதவைச் சட்டம் ஆகியவற்றில் முற்போக்கான மாற்றங்களைச் செய்கிற இந்தியப் பெண்ணுக்கு புதிய உரிமையை வழங்குகிற அந்தத் திருத்தத்தை ஆணாதிக்க இந்துக்கள் எதிர்க்கிறார்கள். பெண் அடங்கியிருப்பதே தர்மம் என்ற போதிக்கப்பட்ட ஆயிரமாண்டுகால போதனையில் மயங்கிய இந்துப் பெண்களும் கூட எதிர்க்கிறார்கள். முற்போக்காளரான நேரு இந்த எதிர்ப்பைக் கண்டு பணிகிறபோது, அம்பேத்கர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார்...
சாதி, பாலின பாகுபாட்டு இழிவுகளுக்கெல்லாம் அடிப்படை இந்து மதக் கோட்பாடுதான் என்ற முடிவுக்கு வருகிற அம்பேத்கர், “இந்துவாகப் பிறந்துவிட்டேன். ஆனால் இந்துவாக இறக்கமாட்டேன்,” என்று அறிவிக்கிறார். மற்ற மதங்களிலும் இந்துத்துவ சாதிய அழுக்கு ஒட்டியிருப்பதைக் கண்டு இறுதியில், அதற்கு இடமில்லாத புத்த மதத்தைத் தேர்வு செய்கிறார். பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களோடு புத்தமதத்தைத் தழுவுகிறார். இறை நம்பிக்கையோ மத நம்பிக்கையோ இல்லாதவர்களும், அம்பேத்கரின் இந்த முடிவில் இருந்த அறச்சீற்றத்தை அங்கீகரிப்பார்கள்.
தன் மக்களின் காயங்களையும் வலிகளையும் துடைப்பதற்காக அல்லும் பகலும் பாடுபட்ட அவரது உடலில் நோய்களும் வலிகளும் குடியேறுகின்றன. தன் உடலை மட்டுமல்ல குடும்பத்தையும் கூட கவனிக்க இயலாதவராகவே அவரது வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது. ஆயினும், அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறார் அன்பு மனைவி ரமாபாய். அவரது மரணப்படுக்கையில் அம்பேத்கரின் துயரம் பார்வையாளர்கள் அனைவரையும் தொற்றிக்கொள்கிறது. மனதை உறைய வைக்கிற இப்படிப்பட்ட காட்சிகள் பல இடங்களில் அமைந்திருக்கின்றன.
அம்பேத்கரின் சமுதாயத் தொண்டு தொடர வேண்டும் என்பதற்காகவே அவரது வாழ்க்கைத் துணையாகிறார் டாக்டர் சவிதா இதனையும் இப்படம் பண்பு நேர்த்தியுடன் சொல்கிறது.
மூன்று மணிநேரப் படத்தில் ஒரு நீண்ட வரலாற்றுப் பாதையில் நடந்து வந்த அனுபவத்தை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார் இயக்குநர் டாக்டர் ஜப்பார் பட்டேல். நேருக்கு நேர் அந்த நிகழ்வுகளோடு கலந்து நிற்கிற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஷோக் மேத்தா. உரையாடல் இல்லாத தருணங்களில் உணர்வுகளைத் தக்க வைக்கிறது ஆனந்த் மோடக் இசை.
பட்டப்படிப்புக்காக செல்கிறவர், தங்குவதற்கு இடம் மறுக்கப்பட்டு அலைகழிக்கப்படுகிறவர், அதிகாரியாக இருந்தாலும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த கீழ்நிலை ஊழியரால் அவமதிக்கப்படுகிறவர், துன்பம் நேர்கையில் வயலினெடுத்து மீட்டுகிறவர், குடும்பத்தின் மீது பாசம் மிக்கவர், லட்சியத்தில் உறுதிமிக்கவர் என ஒவ்வொரு கட்டமும், அம்பேத்கராய் நடிப்பதற்கு இவரைவிட்டால் வேறு யாரும் பொருத்தமல்ல என்று மெய்ப்பித்திருக்கிறார் மம்முட்டி. மோகன் கோகலே, சோனாலி குல்கர்னி உள்ளிட்டோரும் இந்தப் படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஆம், இந்தப் படம் அம்பேத்கரின்  வாழ்க்கைக் கதையைச் சொல்லவில்லை; அவரது வாழ்க்கையின் செய்தியைச் சொல்கிறது - வலுவாக.
ஒரு திரைப்படத்தின் விடுதலைக்கே இப்படிக் காத்துக்கிடக்க வேண்டியிருந்திருக்கிறது என்றால், இந்தப் படத்தின் செய்தியாகிய சாதி-வர்க்க பேதம் ஒழிப்பு என்ற லட்சியம் நிறைவேற இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியிருக்கும்? இனியும் காத்திருப்பதற்கில்லை என்ற உள்வேகத்தை ஒவ்வொருவர் மனதிலும் விளைவிக்கிற வரலாற்று வித்துதான் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்.
டிசம்பர் 6 அன்று அம்பேத்கர் நினைவு நாள் வருகிறது. அதையொட்டி டிசம்பர் 3 அன்று வெளியாகிற இந்தப் படத்திற்கு தமிழக மக்களும் முற்போக்கு இயக்கங்களும் பேராதரவு அளித்து அந்த வரலாற்று வித்து பெரும் காடாக வளர வழிவகுத்திட வேண்டும்.
- அ. குமரேசன்
(தீக்கதிர் 29.11.2010 இதழில் வெளியான‌ கட்டுரை)

Friday, November 5, 2010

சினிமாவுக்குத் தேவை ஒரு இளம்பெண் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி



ப்ரெத்லஸ் படத்தின் வெற்றி அதுவரையிலான பிரெஞ்சு சினிமா சரித்திரத்தை தலைகீழாக மாற்றியது. பெர்லின் திரைப்படவிழாவில் தங்கக்கரடி வாங்கிய கையோடு இயக்குனர் கோதார்த் மற்றும் படத்தில் நாயகனாக நடித்த ழீன் பால் மண்டோ ஆகியோர் ஒரே இரவில் உலக நட்சத்திரங்களாகப் பிரகாசிக்கத் துவங்கினர். புதிய அலை முழுமையாக உலக சினிமாவில் வீசத்துவங்கியது பத்திரிகைகள் விமர்சகர்களாக இருந்து இயக்குனர்களாக மாறி தாங்கள் சொல்லியதுபோல செய்துகாட்டிய புதிய இளைஞர்களைக் கொண்டாட துவங்கின .

ப்ரெத்லஸ் தந்த வெற்றியைத் தொடர்ந்து த்ரூபோ, கோதார்த் இருவரும் அமெரிக்க க்ரைம் நாவல்களுக்குள் தீவிரமாகத் தங்களது தேடல்களைத் துவங்கினர். கதை எங்களுக்கு அவசியமில்லை. அது பார்வையாளனைத் தனக்குள் மூழ்கடித்துவிடும். அதற்குப் புத்தகம் போதும். இது சினிமா பார்வையாளனை கடைசிவரை இருக்கையில் உட்கார வைத்திருக்க எங்களுக்கு ஒரு தந்திரம் தேவைப்படுகிறது. ஒரு துப்பாக்கி, ஒரு இளம்பெண் இருந்தால் போதும் சினிமாவுக்குத் தேவையான மூலப்பொருள் இவ்வளவே.. இதை வைத்துக்கொண்டு இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளைக் கட்டமைப்பதில்தான் எங்கள் சினிமா உறங்கிக்கிடக்கிறது என கோதார்த் வெளிப்படையாக அறிவித்தார். த்ரூபோவுக்கும் இதே பார்வைதான் என்றாலும் கோதார்த் அளவுக்கு தொழில்நுட்ப பரிசோதனை முயற்சிகளில் முழுமையாக அவர் இறங்க விரும்பவில்லை.
கோதார்த்தைப் போல முழுக்க காட்சி அனுபவத்தைக் கொண்டிருத்தல் மற்றும் மரபுகளை உடைத்துப் புதியவற்றை உருவாக்குதல் போன்றவற்றோடு சுவாரசியமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களையும் த்ரூபோ நம்பினார். காரணம் அவர் தயாரிப்பாளராகவும் இருந்தார். அவரே தயாரித்த அவரது இரண்டாவது படமான ஷ¨ட் தி பியானிஸ்ட் பிளேயர் (1960) படத்தின் தோல்விக்குப் பிறகுதான் த்ரூபோ இந்த முடிவுக்கு வர நேர்ந்தது. அதனால் க்ரைம் திரில்லர் ஆகியவற்றுடன் சிறந்த கதைகளையும் உள்வாங்கி அவற்றைத் தன் காமிராவின் மூலம் மீண்டும் எழுதினார். அதன்படி பிரெஞ்சு நாவல் ஒன்றை ஒட்டி எடுத்த ஜூல்ஸ் அட் ஜிம் (1962) வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை ஈட்டியது. தொடர்ந்து டூ இங்கிலீஷ் வுமன் (1971), தி மேன் ஹ¨ லவ்டு வுமன் (1977), க்ரீன் ரூம் (1978), வுமன் இன் நெக்ஸ்ட் டோர் (1981) போன்ற காலத்தின் மகத்தான படைப்புகளை அவர் உருவாக்கினார். த்ரூபொவின் துவக்ககாலத் திரைப்படங்கள் பெரிதும் அவரது சுய வரலாற்றை ஒட்டியதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அவரது திரைப்படங்களில் தன்னியல்புத்தன்மையே வராது. தனித்தன்மை அவரது கதாபாத்திரங்கள். அடுத்து என்ன செய்யும் என்பதை எவரும் ஊகிக்க முடியாது. திரைக்கதையின் இந்த அவரது தன்னியல்புத் தன்மை காட்சி அமைப்புகள், படத்தொகுப்பு என அனைத்து தொழில்நுட்பக் கூறுகளிலும் விரவி அசாத்திய உயிர்த்தன்மையை அவரது படங்களுக்கு வழங்கியது.
அவரது திரைப்படங்களில் வுமன் இன் நெக்ஸ்ட் டோர் அவரது பாணியிலிருந்து முழுமையாக விலகிய படைப்பாகும். அழுத்தமான உணர்வெழுச்சிகள் நிரம்பிய அப்படைப்பு புதிய அலைக்கு எதிரானதாக, மரபான சினிமாக்களை மீண்டும் கொண்டாடுவதாக அமைந்துள்ளதாக விமர்சகர்கள் கடுமையாகத் தாக்கினர். த்ரூபோவின் திரைப்படங்களின் கலாப்பூர்வ வெற்றிக்கு அவரது பெரும்பான்மை திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய நேஸ்டர் அல்மான்ரஸ§க்கும் பெரும்பங்கு உண்டு.
வெறுமனே இயக்குனராக அல்லாமல் ஒரு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்பவராகவும் அதன் சகலகூறுகளையும் முழுமையாக உணர்ந்து உலக சினிமாவின் வளர்ச்சிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்பவராகவும் செயல்பட்டதுதான் த்ரூபோவின் வெற்றிக்கு முக்கியக்காரணங்கள். மேலும் வெறுமனே வணிகத் திரைப்பட இயக்குனர் என்று மட்டுமே உலகசினிமா விமர்சகர்களால் முத்திரை குத்தப்பட்ட ஹாலிவுட் இயக்குனரைத் தன் நண்பர் சாப்ரோலுடன் நேரில் சந்தித்து நீண்ட பேட்டி எடுத்து அதனை நூலாக வெளியிட்டார் . அந்த நூல் வெளியான பிறகுதான் ஹிட்சாக்கின் திரைப்படங்களின் மீதான பார்வை விமர்சகர்களிடத்தில் முழுமையாக மாற்றம் கண்டது. ஆழ்ந்த மனதை நேயப்பற்றும் வாழ்க்கையின் மீதான தீராத கவர்ச்சியும் உறவுகளின் போலித்தன்மையும், சம்பிரதாயங்களின் மீதான கேள்விகளும்,பால்யத்தின் பதட்டமும், அளவற்ற காதலும், கட்டற்ற காமமுமாகக் காணப்படும் த்ரூபோவின் படங்கள் மனித மனத்தின் ஆவணகாப்பகங்களாக, படைப்பு நேர்த்தியுடன் உலகசினிமாவின் அணிகலன்களாக இன்றும் விளங்குகின்றன.
அதேசமயம் கோதார்த் த்ரூபோவிடமிருந்து முழுமையாகத் தன்னை விலக்கிக் கொண்டவர். கோதார்த்தின் திரைப்படங்கள் அரசியல்பேசுபவை. துவக்க காலங்களில் தீவிரமான மார்க்சியராக விளங்கிய கோதார்த் பின் மாவோவின் சீன கம்யூனிசக் கருத்துகளால் அதிகம் ஈர்க்கப்பட்டார். அவரது திரைப்படத்தின் மீதான ஆர்வம் கூட ஒரு அரசியல் நடவடிக்கையே எனவும் அரசியலையும் கலையையும் பிரிக்கமுடியாத கூறுகளாக பாவித்தார். பிற்பாடு த்ரூபோவின் திரைப்படங்கள் வணிகவெற்றியை நோக்கி உந்திச்சென்றபோது தனக்கு முதல் படவாய்ப்பு வாங்கிக் கொடுத்த நண்பர் என்றும் பாராமல் த்ரூபோவை பூர்ஷ்வாவாக மாறிப்போன கம்யூனிஸ்ட் என பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.
அமெரிக்க இயக்குனர் ஆர்சன் வெல்ஸ் இயக்கிய எக்ஸ்போ 58 எனும் ஆவணப்படத்தைப் பார்த்தபோது தனக்கான சினிமாவின் விழிப்புணர்வை அடையப்பெற்ற கோதார்த் தனது ப்ரெத்லஸ் முதல் படத்திலேயே வழக்கமான சினிமா மொழியை முழுமையாக உடைத்து ஜம்ப்கட் எனும் புதிய உத்திமூலம் உலகசினிமாவை தன் பக்கம் திசை திருப்பிக்கொண்டார். அதனால்தான் முதல் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அவர் த்ரூபோவைப் போல முழுநீளப் படம் எடுப்பதைத் தவிர்த்து அல்ஜீரிய போர் பற்றியத் திரைப்படத்தை எடுப்பதில் முனைப்புக் காட்டினார். தொடர்ந்து Woman is a Woman (1961), Vivre sa vie (1962), Les Carabiniers (1963) மேற்சொன்ன மூன்று திரைப்படங்களும் அவரது ப்ரெத்லஸ் போல பெரிய வெற்றியை ஈட்டவில்லை. ஆனால் அடுத்து வந்த அவரது Les Mepris (1963), வணிக ரீதியாகப் பெரும் வெற்றியை அவருக்கு ஈட்டித்தந்தது.
கோதார்த் எந்த சமரசத்துக்கும் தன்னை ஆட்படுத்திக்கொள்ளாதவர். நான் இவ்வுலகில் தொடர்ந்து எவரும் பார்த்திராத புதிய காட்சிகளை காமிராவின் மூலம் தேடுகிறேன். அவற்றை எனக்குள்ள அரசியல் மூலமாகத் தொகுத்து திரைப்படம் எனும் வடிவத்தில் செதுக்க முயல்கிறேன் இதுவே என் சினிமா என அறிவித்துக்கொண்ட கோதார்த் பார்வையாளனை எந்தத் தருணத்திலும் பொருட்டாகக் கருதியதில்லை. அவரது திரைப்படங்கள் கோர்வையாக இல்லை. புரியவில்லை. குழப்பமாக இருக்கின்றன எனத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வசையாக அவர் மீது விழுந்தவண்ணமிருந்தன. ஆனால் அவற்றை சட்டைமீது விழும் இலையை விரல்களால் ஒதுக்குவதுபோல உதாசீனப்படுத்திவிட்டு தன்னுடைய படங்களில் தீவிரமாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.பார்வையாளனை அந்நியப்படுத்தி அவனது நுகர்ச்சித்தன்மையிலிருந்து விலகி அவனுக்கு உணர்ச்சிகளைத் தூண்டும் திட்டமில்லாத அதேசமயம் அவனது சிந்தனையைத் தூண்டக்கூடிய காட்சிகளில் புதிய அனுபவத்தை உண்டாக்கக் கூடிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்பாக இருந்தார். புகழ்பெற்ற நாடக இயக்குனர் பெத்ரோல்ட் பிரெக்தின் நாடகங்களின் பால் ஈர்ப்புக்கொண்டிருந்த கோதார்த் அவரது நாடகத்தின் சில கூறுகளை தன் திரைப்படத்தில் பயன்படுத்தி பார்வையாளனின் இரண்டாவது வாசிப்புக்கு அல்லது இரண்டாவது பரிணாமத்துக்கு தன் திரைப்படங்களில் வழி சமைத்துக் கொடுத்தார். பிற்காலத்தில் டிசிகாவெர்தோவ் எனும் ரஷ்ய இயக்குனர் பெயரில் உருவான குழுவில் இணைந்து திரைப்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார். எண்ணற்ற முழுநீளத் திரைப்படங்களுடன் குறும்படங்கள் ஆவணப்படங்கள் என மாற்று சினிமா முயற்சிகளின் மூலம் வணிக சினிமாபோக்குக்கு எதிராகச் செயல்பட்டவர். ஆனாலும் கோதார்த் உலகின் தலைசிறந்த இயக்குனர்கள் பலரால் இப்போதும் குருவாக மதித்துப் போற்றப்படுபவர். Quentin Tarantino, Martin Scorsese, Bernardo Bertolucci, Arthur Penn, Richard Linklater, Gregg Araki, John Woo, Mike Figgis, Robert Altman, Steven Soderbergh, Richard Lester, Jim Jarmusch,Rainer Werner Fassbinder, Brian De Palma, Wim Wenders, Oliver Stone என அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட இயக்குனர்களின் பட்டியல் நீண்டுசெல்கிறது. அவரது திரைப்படவாழ்வின் முழுமையான வெற்றிக்கு இதுவே தக்கசான்று. தன் எண்பதாவது வயதிலும் மறைந்த தன் புதிய அலை சகா எரிக் ரோமர் பற்றிய ஆவணப்படத்தை இயக்கி அவர் வெளியிட்டிருப்பது சினிமாவின் மீதான அவரது பற்றை நமக்கு நிரூபிக்கிறது

தீபாவளியின் வரலாற்றுப் பின்னணி

எஸ்.ஏ.பெருமாள்
தமிழகத்தில் ஆரம்பக் காலத்தில் பண்டமாற்றில் ஈடுபட்டு வந்தவர்கள் நாள டைவில் வணிக வர்க்கமாய் உயர்ந்தனர். வளர்ச்சிப் போக்கில் தமிழகத்தில் வணிகர் கள் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுக ளோடும் வணிகம் செய்தனர்.

வணிகம் பெருகப் பெருக துறைமுகங்கள், நகரங்கள் உருவாகி வளர்ந்தன. வணிகர்கள் செல்வத்தில் திளைத்தனர்.

“கலம் தந்த பொற்பரிசம்” என்றும் “யவ னர் தந்த வினைமாண் நன்கலம் பொன் னொடு வந்து கறியொடு பெயரும்” என்று புறப்பாடல்கள் கூறுகின்றன. வணிகர்கள் செல்வத்தில் திளைத்ததால் “மன்னர் பின் னோர்” ஆகி அரசருக்கு நிகராயினர். போடி நாயக்கனூரிலும், சென்னை மாம்பலத்திலும் கிடைத்துள்ள பொன் நாணயங்கள் மீன் இலச் சினையோடு உள்ளன. இவற்றைப் பாண்டிய நாட்டு வணிகர்கள் வெளியிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வணிகர் தம் பெருமை களை சிலப்பதிகாரமும் மதுரைக்காஞ்சியும் செப்புகின்றன.

தங்கள் வளர்ச்சிக்குத் துணை நின்ற சமணத்துறவிகளுக்கு மடங்கள், பள்ளிகள், குகைகள், குடவரைகள் உருவாக்க வணிகர் கள் உதவினர். செல்வ வளம் பெற்று, சமூகச் செல்வாக்குப் பெற்ற வணிகர்களைப் பின்பற் றிப் பொதுமக்களும் சமணத்தைத் தழுவினர். இதனால் அரசர்களும் சமணத்தைத் தழுவி டும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வணிகர்கள் உற் பத்தியில் நேரடியாய் ஈடுபடாதவர்களாவர். வேளாளரே நிலவுடமையாளராய் உற்பத்தி யைக் கையில் வைத்திருந்தனர். இவ்வேளாண் பெருமக்களின் வீடுகளில் உணவு தானியங் கள் மலைபோல் சேமித்து வைக்கப்பட்டிருந் தன. நிலக்கிழார்களான வேளாளரில் அரசர் களுக்கு ஆதரவாகப் படைதிரட்டி ஆள் அனுப்பி உதவினர். “படை வேண்டுழி படை யுதவியும் - வினை வேண்டுழி வினையுதவி யும் செய்ததாய்” புறப்பாடல் கூறுகிறது.

கடவுளை மறுத்த சமயங்களான புத்த, சமண சமயங்களை வளர்த்ததில் வணிகர் கள் பங்கு மகத்தானது. நாட்டுப்புறத்தெய்வங் களுக்கு ஏராளமான சிலைகள் வைக்கப் பட்டு, ஒவ்வொரு சிலையின் பேராலும் பூசா ரிகள் ஆடு, மாடுகளைப் பொதுமக்களிடம் பலியாய் கேட்டனர். இந்தக் கொடும் சுரண் டலிலிருந்து மீள மக்கள் புத்த, சமண சமயங் களில் கூட்டம் கூட்டமாய் சேர்ந்தனர். வணி கர்களின் தயவில் புத்த மடாலயங்களும் நிறு வப்பட்டன. நாகையில் பெரும் புத்த விகார் நிறுவப்பட்டிருந்தது.

சமூகத்தில் வணிகர்கள் ஒரு வர்க்கமாய் உருவெடுத்தனர். வணிக வர்க்கத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் இடையே முரண் பாடுகள் வளர்ந்தன. இந்த இரு பெரும் பிரிவு களும் தமது நலன் கருதி ஒருமித்தும் சென் றன; மோதவும் செய்தன. உற்பத்தியில் ஈடு பட்ட வேளாளரும், அந்த உற்பத்திப் பொருட் களைப் பரிமாற்றம் செய்த வணிகர்களும் சமூகத்தில் அருகருகேதான் வாழ்கின்றனர். இரு பிரிவினருக்குமே அரசனிடத்தில் செல் வாக்கு உண்டு. இருவரும் தமது முரண்பாடு களை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத் தினர். இந்த முரண்களையும் மோதல்களை யும் சிலப்பதிகாரம் பிரதிபலிக்கிறது.

பொதுவாக ஆளும் வர்க்கங்களின் கருத் துக்களையே மதங்கள் கூறி வந்துள்ளன. மனிதகுல வரலாற்றில் முரண்பட்ட இரு வர்க் கங்கள் சேர்ந்தே வாழ்கின்றன. ஒன்றோ டொன்று போராடுகின்றன. முரண்பாடு முற் றும் போது அது பகை வடிவமாய் வெளிப்படு கிறது. ஒரு காலத்தில் பாங்கறிந்து பட்டிமண் டபம் ஏறித் தங்கள் கருத்து முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டனர். முரண்பாடு பகையான தும் “அனல் வாதங்களும் புனல் வாதங்களும் எழுந்தன. அதில் தீர்க்க முடியாது போய் “கழு வேற்றங்களில்” முடிந்தது.

இதுவரை உற்பத்திப் பொருட்கள் மீது மட் டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த வணிக வர்க் கம், உற்பத்திச் சாதனமான நிலங்களையே பறித்து மதபீடங்களுக்கு வழங்கியது. வேளா ளர்களின் நிலங்களை மதப் போர்வையில் பறிக்கும் போது பகை முரண்பாடு முற்றுகிறது.

தங்கள் நிலங்களை மீண்டும் மீட்டு, உற்பத்தியில் தாங்கள் இழந்த கட்டுப்பாட்டை நிலை நிறுத்தும் முயற்சியில் வேளாளர்கள் இறங்கினர். சமண மதப் பிடிக்குள் இருந்த அர சர்களையும் குறுநில மன்னர்களையும் தங்கள் செல்வாக்கின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற அரசியல் அவசியத்தையும் அவர்கள் உணர்ந்தனர். எனவே கருத்துலகிலும் தங்கள் போராட்டத்தை நடத்த களமிறங்கினர்.

பொருளாதார அடித்தளத்தில் மேலிருந்த மேற்கட்டுமான இலக்கியம், மொழி, இசை, தத்துவம், மதம் போன்ற பல அம்சங்களில் வணிகர்களுக்கு எதிரான போராட்டமே சம ணத்திற்கு எதிரான போராட்டங்களாய் மாறின. வணிக வர்க்கத்துக்கு எதிரான நிலப்பிரபுத்து வத்தின் பொருளாதாரக் குரோதம் சமண சம யத்திற்கு எதிரான போராட்டமாய் உருவெடுத் தது. அடித்தளம் மேற்கட்டுமானத்தைத் தகர்த்துப் புத்துருவாக்கம் செய்தது எனலாம்.

சமணம், கடவுளை மறுத்தது. பந்தங்களி லிருந்து விடுபட்டு மோட்சமடைந்த உயிரே கடவுளாகும். உயிர்களைக் கடவுள் படைக்க வில்லை. உயிர்கள் தமது சொந்த முயற்சி யாலே மோட்சம் எய்த முடியும். இதுவே உயி ரின் இயல்பாகும் என்பதே கடவுள்- உயிர் குறித்த சமணக் கோட்பாடாகும். இதை சைவம் கடுமையாய் எதிர்க்கிறது. இறைவன் உயிர்களுக்காகவே உலகைப் படைத்தான். உயிர்களின் கர்மத்தைப் பக்குவப்படுத்தி அறியாமை, ஆணவமயத்தைப் போக்குகி றான். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத் தொழில்களும் உயிர்களின் பொருட்டு இறை வனால் நிகழ்த்தப்படுகின்றன என்றது சைவம்.

சிலர் உயர் குடியாய் வணிகராய் வாழ்வதற் கும், பெரும்பாலோர் கூரைக்குடியாய் ஏழ்மை யில் வாழ்வதற்கும் அவர்தம் வினைப்பயனே காரணம் என்று சமணம் கூறியது. ஏழ்மை யில் வாழ்தல் வினைப்பயன் என்று கூறி அவர்களைச் செயலற்றவர்களாக்கியது. சிலப் பதிகாரம் கூட ஆள்வினையை விடச் சூழ்வி னையே வலிமையானது என்று கூறுகிறது. சமணர் என்று கருதப்படும் திருவள்ளுவர் கூட வினைக் கோட்பாட்டை வலியுறுத்து கிறார். இதற்கு எதிர்க் கோட்பாட்டை நிறுத்த வேண்டிய அவசியம் சைவத்துக்கு ஏற்பட் டது. மக்களைச் செயலிழக்கச் செய்யும் வினைக் கோட்பாட்டினை அடிப்படையில் தகர்ப்பது தங்களுடைய வர்க்க நலனுக்கும் எதிரானது என்று சைவர்கள் கருதினர். இத னால் வினையை எதிர்க்காது, அவர்கள் வினையின் முதன்மைத்தன்மையை மட்டும் எதிர்க்கின்றனர். வினைக்கும் மேலாய் இறை வனை நிறுத்தினர். வினையின் வெம்மைத் தன்மையை நீக்கி இறைவனின் கருணைத் தன்மையை வைத்தனர். இறைவனை வணங்கினால் வினைகள் அகலும் என்று பிரச்சாரம் செய்தனர்.

பக்தி இயக்கம் கண்ட நாயன்மார் தமிழ் மொழிக்கு ஏற்றம் கண்டனர். தத்துவவாதிகள் எல்லாக்காலங்களிலும் மொழியை ஒரு சிறந்த கருவியாய் பயன்படுத்தியுள்ளனர். அதேபோல் நாயன்மாரும் தமிழின் புகழைப் பாடியே தமது தத்துவங்களைக் கூறினர். மொழி செவிவழியோடி, கண் வழிகண்டு மனிதரின் மனத்தை நிறைக்கிறது. தமிழைப் புகழ்ந்து அவர்கள் அதற்குத் தெய்வத்தன்மை கொடுத்தனர். தமிழையே தாய்த் தெய்வமாக் கினர். “மறையிலங்கும் தமிழ்” என்றும், “தவம் மல்கு தமிழ்” என்றும் பாடிப் புகழ்ந்தனர். இதன் மூலம் சமணரின் வடமொழி, பிராகிருத மொழிகளை எதிர்த்து நின்றனர். தமிழை ஏற்றிப் போற்றி மக்களை உணர்ச்சி வெள்ளத் தில் ஆழ்த்தினர்.

தமிழையும் புலமையையும் கடவுளாக்கி யது போல் கடவுளையே புலவராகவும் தமிழ் மேதையாகவும் ஆக்கினர். இதை சிவனுக் கும் நக்கீரனுக்கும் நடந்த சொற்போரினால் அறியலாம். சமண சமயத்தின் தர்க்கவியல் அணுகுமுறையான எரிந்த கட்சி, எரியாத கட்சிப் பட்டிமண்டபங்களைச் சைவரும் தொடரவேண்டிய அவசியம் இருந்தது. இது ஏற்கனவே இருந்த தமிழர் சிந்தனை மரபைப் பின்பற்றியதாகும்.

போராட்டங்கள் நடைபெறும் போது அவற் றின் ஏற்ற இறக்க திசைவழிக்கேற்ப கருத்துக் களும் மாறுதல் அடையும். கி.பி. ஏழாம் நூற் றாண்டில் உருவான சங்கம் அதற்குப் பின்பு வந்த சமண சமய எதிர்ப்பாளர்களால் ஊட்டி வளர்க்கப்பட்டது. நூற்றாண்டுகளில் கால மாறுதலுக்கேற்ற கருத்துக்களும் வளர்க்கப் பட்டன. கி.பி.8ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆண்டாள், திருமங்கையாழ்வார் போன்ற வைணவக்கவிஞர்களாலும் , கி.பி 9ம் நூற் றாண்டில் மாணிக்க வாசகராலும் வளர்க்கப் பட்டது.

பொன்னையும் பொருளையும் குவித்து பண்ட மாற்றில் மட்டுமே ஈடுபட்டு, உற்பத்தி யையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வணிக வர்க்கம் வீழ்ச்சியடைந்தது. வேளா ளர் வர்க்கம் வெற்றி பெற்று உற்பத்தியையும் பங்கீட்டையும் தானே செய்தது. பொருளியல் ஆதிக்கம் வேளாளர் கைக்கு வந்தது. சமயப் போர்வையில் வணிகர்கள் கைப்பற்றிய நிலங் களை வேளாளர்கள் பரந்த மக்கள் சக்தியைத் திரட்டி மோதி வெற்றி பெற்று மீட்டுக்கொண்ட னர். ஒரு காலத்தில் கோலோச்சிய சமண, பவுத்த சமயங்கள் அடியோடு வேரறுக்கப்பட்டு சைவமும், வைணவமும் தமிழகத்தில் தழைத்தன.

பவுத்த ஆலயங்கள் வைணவக் கோவில் களாய் மாற்றப்பட்டன. புத்தரின் அனந்த சயனச் சிலைகள், பள்ளிகொண்ட பெருமா ளாக்கப்பட்டது. அதே போல் சமணக் கோவில்களும் பள்ளிகளும் சிவ, முருகக் கோவில்களாய் மாற்றப்பட்டன. பவுத்த, சமணத் திருவிழாக்கள் வைதீக மதத்தால் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டது. அதில் ஒன்று தான் தீபாவளியாகு

Tuesday, November 2, 2010

வெண்மணி முதல் கயர்லாஞ்சி வரை: தலித்துகளுக்கு எதிரான வன்முறையின் வரலாறு

 

மகாராஷ்டிரா மாநிலம், பண்டாரா மாவட்டம், மொஹாடி தாலுகாவிலுள்ள குக்கிராமம் கயர்லாஞ்சி.  பையாலால் போட்மாங்கே என்ற தலித் குடும்பத்தினர் மீது அக்கிராமமே வன்மம் கொண்டு பலி தீர்த்த வரலாற்றுப் போக்குகளையும், சமூகப்படிநிலைகளின் வன்மங்களை யும், முக்கிய அரசியல் கட்சிகள் மட்டுமல் லாமல், அரசு (காவல்துறை), சட்டம் (நீதி மன்றம்),  ஊடகம் ஆகிய அரசமைப்புக ளும் அதற்கு எவ்வாறு துணை போயின, இதுகுறித்த தகவல்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் இருட்டடிப்பு செய்தன, நீதியைத் தாமதப்படுத்தி வருகின்றன என்பதையும் இப்புத்தகம் புள்ளிவிவரப் படுத்துகிறது. கயர்லாஞ்சி வன்கொடுமை மீது தலித் அமைப்புகள் தொடுத்த எதிர்வினைகள், தாக்குதல்கள் மூலம் அரசு எந்திரம் அதை எதிர்கொண்ட விதம் குறித்தும், தலித் மீதான வன்முறைகள் குறித்த செய்திகளை வெகுமக்கள் ஊடகங்கள் ஏன் பாகுபாட்டுடன் அணுகுகின்றன என்பதையும் ஆய்வு செய்கிறார்.

தலித்துகளின் துயரங்களைக் குறைப்பது தொடர்பான அரசமைப்புச் சட்ட நிவாரணங்கள் எவ்வாறு போதுமானவையாக இல்லை; சமூகப் பாகுபாடுகளில் இருந்து அம்மக்களைப் பாதுகாக்க ஏன் இயலவில்லை ஆகியவற்றுடன் கயர்லாஞ்சி படுகொலைகளின் அரசியல் பொருளாதாரப் பின்னணியையும் ஆராய்கிறார். முக்கியமாக விடு தலைக்குப் பிந்தைய இந்தியாவில் தலித்துகள்மீதான வன்கொடுமை களில் புதிய பரிமாணமாக உருவாகியுள்ள அபாயக்கூறுகள், சாதியப் படிநிலைகளில் தலித்துகளுக்கு எதிராக வளர்ந்துள்ள புதிய ஆதிக்க சக்திகள் குறித்தும் டெல்டும்டே புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறார்.

முன்னர் குறிப்பிட்ட நாளில் கயர்லாஞ்சி கிராமத்தில் பையாலால் போட்மாங்கே குடும்பத்தைச் சேர்ந்த அவரது மனைவி சுரேகா(40), அவர்களது மகன்கள் ரோஷன்(21), சுதிர் (19) மற்றும் மகள் பிரியங்கா (17) ஆகியோர் சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகள் பொதுவெளியில் அறியப்பட ஒரு மாதமாகியது. இப்படுகொலைகளில் ஈடுபட்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினரும்  காவல்துறை அதிகாரி களும், அரசு வழக்கறிஞரும் முழுமூச்சுடன் இந்த இருட்டடிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவை வெறும்(!) படுகொலைகள் மட்டு மல்ல.  ஒரு ஒட்டுமொத்த கிராமமே பல காலமாக வன்மத்தால் பகை வளர்த்துத் தீர்த்துக்கொண்ட பலி.

குடும்பத்தின் மூத்த உறுப்பினரான பையா லால் போட்மாங்கே இல்லாத நேரத்தில் பெண்கள் உட்பட கிராமத்தினர் திரண்டு ஊரின் ஒதுக்குப்புறமான போட்மாங்கே வீட்டைச் சுற்றி வளைத்துத் தாக்கியுள்ள னர். அவரது மனைவி, மகள் ஆகியோரை வெளியே இழுத்து வந்து நிர்வாணப் படுத்தி, மகன்கள், சகோதரர்கள் எதிரே கும்பல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ள னர்.17வயதுச் சிறுமி பிரியங்கா சித்ரவதை தாங்காமல் உயிரிழந்த பின்னரும் சடலத்தைக்கூட விட்டுவைக்காமல் வன் புணர்ச்சியில் ஈடுபட்டனர். வீட்டுக்கு தீ வைத்து நிர்மூலமாக்கினர். அவர்களை கிராமத்தின் களத்துமேடு போன்ற இடத் துக்கு இழுத்து வந்து அடித்து சித்ரவதை செய்து கொன்றுள்ளனர். பின்னர், சடலங் களை ஒரு டிராக்டரில் போட்டு, வெற்றி ஊர் வலம் நடத்தி ஊருக்குச் சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆற்றங்கரையில் வீசி விட்டு நிம்மதியாக வீடு திரும்பியுள்ளனர். இவ்வளவு கொடுமைகளையும் பையா லால் போட்மாங்கே புதர்மறைவில் பதுங்கி, கையறுநிலையில் மௌன சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

ஒட்டுமொத்தக் கிராமமும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்கு எதிராக இத்தகைய கொடூர பகைவெறி கொண்டது எதனால்? அவர்களின் ஆதிக்கசாதி அகங்காரத்துக்கு எதிராக போட் மாங்கே குடும்பம் நடத்திய தொடர்போராட்டம்தான். குறிப்பாக,  போட் மாங்கேயின் மனைவி சுரேகா நடத்திய போராட்டங்கள் ஆதிக்க சாதி யின் ஆண் மமதையை நிர்மூலமாக்கியுள்ளது. இதற்காக அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் 'ஒழுக்க நீதி'. போட்மாங்கே நடத்திய போராட்டங்களில் தார்மிக ஆதரவாக இருந்துவந்த பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சித்தார்த்த காஜ்பியேவுக்கும் சுரேகாவுக்கும் கள்ளக்காதல் இருப்பதாக நீண்டகாலமாகவே ஒரு கதையை இட்டுக்கட்டி வந்துள்ளனர். இதற்காக அந்தத் தாய் மட்டுமல்லாமல் அவளது மகன்களும், மகளும் உயிரிழக்கவேண்டியிருந்தது.

ஒழுக்கக்கேட்டுக்கு எதிராக சமூகமே தன்னெழுச்சியாக வெகுண்டெ ழுந்ததால் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நடந்த எழுச்சியாக புனிதப் படுத்தும் வாதம் மூலம் நீதியைத் தாங்களே கையிலெடுத்துக் கொள் வது நியாயப்படுத்தப்படுகிறது. நீண்டகாலப் பகையைப்  பலி தீர்க்க இதுபோன்ற ஒழுக்க நியதிகளை இட்டுக்கட்டும் போக்கு புராணங்கள் புனையப்பட்டதில் இருந்தே தொடர்கிறது. இதற்கு உச்சாடனமாக, மநு முன்னிறுத்திய நான்கு வர்ணம் எனும் இந்து அறம் முன்னிற்கிறது. இந்த அறத்தைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், கொண்டு செலுத்த வும் கீழ்சாதியினருக்கு என்னவிதமான தண்டனை அளிக்கவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே மநு வழி வகுத்துத் தந்துள்ளார். ஆனால், சில தலித் செயல் பாட்டாளர்களின் முன் முயற்சிகள் இல்லையென் றால் அங்கு நடந்த இக்கொடுஞ் செயல்கள் அனைத்தும் இத்தகைய 'புதிய' மநுவாதிகளால் எவ்வாறு மூடிமறைக்கப்பட்டிருக்கும் என்பதை யும், இதில் பெரு ஊடகங்களின் வெட்கக்கேடான செயல்களையும் டெல்டும்டே அம்பலப்படுத்துகிறார். ஒரு பொதுப்பிரச்சனை குறித்து சிந்திக்கவும், தீர்வுகூறவும் கீழ்சாதி யினருக்கு அருகதையில்லை என்னும் மநுநீதி காலம்காலமாக நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. மீறுபவர்களுக்கு என்னவிதமான தண்டனை அளிக்கவும் ஆதிக்க சக்திகளுக்கு மநு உரிமை அளித் துள்ளார். இதுவே சமூக ஒழுங்காகவும் அறமாகவும் பயிற்றுவிக்கப் பட்டு வந்துள்ளது. அனைவருக்கும் சமத் துவ உரிமை, சுதந்தரம், நீதியுடன் கூடிய இறையாண்மை கொண்ட, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக இந்தியா திகழும் என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதங்கள் அமலாக்கப்பட்டு வரும் காலத்திலும் மநுகால அறம் தொடர்வதும், அதை நிலைநிறுத்தவும், தண்டனை அளிக்கவுமான அதிகாரங் களை ஆதிக்கசக்திகள் கையில் எடுத்துக் கொள்வதும் எவ்வாறு என்ற கேள்வியை டெல்டும்டே எழுப்புகிறார்.

குறிப்பாக  சில சூத்திரர்கள் தாமும் பார்ப் பனியத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் என் பதை மறந்து புதிய ஆதிக்க சக்திகளாக வும், அதிகார மையங்களாகவும் உருக் கொண்டுள்ளனர். விடுதலை இந்தியா வில் அவர்களே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடு பட்டு வருகின்றனர் என்பதை பட்டியலிடுகிறார். கீழ்வெண்மணி (தமிழ் நாடு) முதல் பெல்ச்சி(பீகார்), கரம்சேடு (ஆந்திரா),  மேலவளவு (தமிழ் நாடு), ஜஜ்ஜார் (ஹரியானா) வரை கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளைப் பட்டியலிட்டு, இவற்றில் ஈடுபட்டவர்கள் பார்ப்பனரல்லாத சாதி இந்துகள், குறிப்பாக சூத்திரர்  என்று ஒதுக்கப்பட்டுள்ள பிரிவினர் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். (இதில் கீழ்வெண்மணியில் நிகழ்ந்த தாக்குதல் என்பது சாதிய ஒடுக்கு முறை மட்டுமல்ல. கீழ்தஞ்சை மாவட்டத்தில் நூற்றாண்டுகளாக நீடித்துவந்த நிலப்பிரபுத்துவ கொடுமைகளுக்கு எதிராக வர்க்கரீதி யாக அணிதிரண்ட விவசாயத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங் களுக்கு எதிரான தாக்குதல்களின் உச்சக்கட்டமே  என்ற  இன்னொரு பரிமாணம் இருப்பதை  டெல்டும்டே கவனிக்கத் தவறியுள்ளார்.) சகிப்புத்தன்மை, அகிம்சை, சமாதான விரும்பிகளாக இந்திய மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர் என்ற கருத்து நிலவுகிறது.  இக்கருத்து, கிராமங்களில் மநு கூறும் சமூக ஒழுங்கு, காலம் காலமாக கட்டிக்காக்கப்படுவதை நிரூபணமாக்குவதாக விளங்குகிறது. இந்தச் சமூக ஒழுங்கு குலையும்போது, அங்கு சமூக ஒழுங்குகளையும், அமைதியையும் நிலைநாட்ட கயர்லாஞ்சி வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. எனவே, இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் எப்போது வேண்டுமானாலும் கயர்லாஞ்சியாகும் வாய்ப்புள்ளது என்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் எந்தளவுக்குச் சமரசம் செய்து கொள்கிறார் களோ அந்த அளவுக்கே அமைதியாக வாழமுடியும்; நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைகளில் மட்டுமல்லாது, முதலாளித்துவ உற்பத்திநிலை களிலும், தற்போதைய உலகமயமாக்கல் நிலைகளிலும்கூட இச் சமூகப்படிநிலை தொடர்கிறது; நிலப்பிரபுத்துவத்துடன் முதலாளிய சக்திகள் செய்துகொண்ட சமரசத்தால்தான் 60 ஆண்டுகால விடு தலை வரலாற்றிலும்கூட சாதியப்படிநிலைகளை நீக்கமுடியவில்லை. சிறுநகரங்கள், பெருநகரங்களிலும் அண்மைக்காலமாக தொடரும் சாதீய (தலித்துகள் மீதான) வன்முறைகளை இதற்கு நிரூபணமாகச் சுட்டிக்காட்டுகி றார்.
கிராமங்களில் மட்டுமல்லாது, இச்சாதியசக்திகள் நகர்ப்புறங்களிலும் இதே சமூக அமைதியை விரும்புகின்றன, அது குலைக்கப்படும் போது அங்கும் வன்மம் உருவாகிறது. இது சித்ரவதைகளாக, படுகொலைகளாக, வன்புணர்ச்சிகளாக, கயர்லாஞ்சிகளாக வெடிக்காமல் இருக் கலாம். ஆனால் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் தலித்துகளுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும்போது  மவுன ஒதுக்கல் மூலம் தலித்துகளின் ஆசா பாசங்கள் நசுக்கப்படுகின்றன. தனியார் குழும நிறுவனங்கள் தலித்துகளை அனுமதிப்பதே இல்லை. அவர்கள் பாரம்பரியமாகவே தகுதிக் குறைவான வர்கள் என்று கூறி தனியார் நிறுவனங் கள் ஒதுக்கி வருகின்றன. இது, கயர் லாஞ்சிகளில் நடப்பதைவிட மோசமான அநீதி என்று சுட்டுகிறார் டெல்டும்டே. மேலும், கயர்லாஞ்சியில் நிகழ்ந்த வற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் சாதியப்படிநிலைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானித்து, சாதியப்படிநிலைகள் அதன் கட்டமைப்பு மற்றும் பருண்மை நிலைகளில் மாற்றமின்றி தொடர்ந்தாலும், அதன் உள்ளமைப்பு மற்றும் குணங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கவனப்படுத்துகிறார்.

ஏழாம் நூற்றாண்டிலிருந்து நிகழ்ந்து வந்த ஊடுருவல்கள், 11ஆம் நூற்றாண்டிலிருந்து செல்வாக்கு செலுத்திய ஆளும்வர்க்கக் கொள்கைகளால் ஏற்பட்ட மாற்றங்களைவிட, பிரிட்டிஷ் காலனியாக் கத்தின் போது ஏற்பட்ட மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை என்கிறார். காலனியாக்கத்தின் தொடக்கத்தில் தொடங்கிய மாற்றங்கள் கடந்த நூற்றாண்டுவரை நீடித்தன. புனிதமாகக் கருதப்பட்ட நால்வருண முறை முழுமையாக இல்லாவிட்டாலும், குறிப்பிடத் தக்க அளவுக்குப் பலவீனமடைந்தது. சாதிகளின் சடங்கு அடிப்படைகள் ஒரு விதிவிலக் காகவே எதிர்கொள்ளப்பட்டன.

ஆனால், இன்றைய சாதி முறைகளை மதம் அல்லது மரபு ஆகிய வற்றின் அடிப்படையில் மட்டுமே புரிந்துகொள்ள முடியாது. நம் காலத்தின் குணங்களைத் தீர்மானிக்கும் சக்தியாகிய அரசியல் பொருளாதாரத்தின் செல்வாக்கால் தற்கால சாதிமுறைகள் மேலும் குழப்பங்களுக்கு ஆட்பட்டுள்ளன. கடந்த 60 ஆண்டுகால 'மதச்சார் பற்ற ஜனநாயக' அரசியல், 'சோசலிச' பொருளாதாரக் கொள்கை களால் சாதிய அமைப்புமுறை புதிய வாழ்க்கையைப் பெற்றுள்ளது. கடந்தகாலத்தின் சமூக- பண்பாட்டு - உளவியல் மிச்சசொச்சங் களுக்கு இடையேயான உள்ளீடுகளின் இடைக்கால வெளிப்பாடாக வும், சில குறிப்பிட்ட வகுப்புகளுக்கு சலுகைகள் அளிக்கும் வகையில் அரசு பின்பற்றிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளாலும் ஏற்பட்ட வெளிப்பாடாகவும் தற்காலச் சாதிஅமைப்புகள் பிரதிபலிக்கப் படுகின்றன என்று விளக்கமளிக்கிறார் டெல்டும்டே. "பாரம்பரியமாக உரிமை பெற்ற சாதிகள்தாம் (பார்ப்பனர் மற்றும் இரு பிறப்பாளர்) சாதியப்படிநிலைகளுக்குப் பொறுப்பாவார்கள் என்று இன்றும் அறிவிஜீவிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். (நீதிமன்றம், நாடாளுமன்ற- சட்டமன்றப் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் என) அரசு மற்றும் குடிமைச் சமுதாயங்களில் அவர்களின் மேலாதிக்கம் இன்றும் நீடிக்கிறது என்றபோதிலும், கிராம சமூகப் படிநிலைகளில் அவர்களின் பிடிமானம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

உண்மையில், தங்கள் பங்கை அதிகரிப்பதில் இதர சமூகக் குழுக்கள் முன்னேறியே வருகின்றன. மேலாக, தமது  தொடக்ககாலப் பண்பாட்டு மேலாண்மையுடன்,  பொருளாதாரத்தின் புதிய கூறுகளான முதலாளித்துவம் மற்றும் உலக மயமாக்கல் ஆகிய வளர்ச்சிகளின் பலன்களையும் அனுபவிக்கும் வகையில் அப்பிரிவுகளுடன் இந்தப் பாரம்பரிய மேல்சாதிகள் (பார்ப்பனியர் மற்றும் இருபிறப்பினர்) தம்மைத் தகவமைத்துக் கொண்டனர். இதனால், முன்னர் சாதியப் பாகுபாடு மற்றும் உயர் சாதித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்டவர்களும், இதர பிறபடுத்தப்பட்டவர்களும் இப்போது முன்னேறி வருகிறார்கள். கயர்லாஞ்சி போன்ற தாக்குதல்களில் இரு பிறப்பாளர் போன்ற உயர் சாதியினர் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. கடந்த 40 ஆண்டுகளில் கீழ்வெண்மணி முதல் கயர்லாஞ்சி வரை நடந்த தாக்குதல்களிலும் பார்ப்பனர்கள் நேரிடையாக ஈடுபட்டதாகத் தெரியவில்லை. 1960 களுக்குப் பின்னர் நிகழ்ந்துள்ள இத்தாக்குதல்களில் சமூகத்தில் உயர் நிலை பெற்ற பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர்களே ஈடுபட்டுள்ளனர்' என்று அம்பலப்படுத்துகிறார் டெல்டும்டே. இந்தியாவை இங்கிலாந்து தனது நேரடியான காலனியாக்கத்தின் கீழ் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ராணுவ பலத்தாலும், தந்திரங்களாலும் தனது ஆதிக்கத்தின் கீழ் நாட்டைக் கொண்டுவந்தபின் நிர்வாகத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஜமீன்தாரி முறை, ராயத்வாரி முறை போன்றவை அவை. இத்தகைய ஜமீந்தாரர்களாகவும், மிராசுகளாகவும் இருபிறப்பாளர் அல்லாத சூத்திர சாதியினரை நியமித்தது. அதேநேரத்தில் உயர் நிர்வாக மட்டத்தில் பார்ப்பனர்களையும், இரு பிறப்பாளர்களையும் நியமித்தது. இதனால் பார்ப்பனர் காலனியாக்கத்தின் நேரடியான பலன்களை உடனுக்குடன் அனுபவித்து வந்தனர். என்னதான் பண்ணைகளாக இருந்தாலும் பார்ப்பனர்களின் அந்தஸ்தை புதிய ஜமீந்தார்களால் அடையமுடியவில்லை. எனேவே அதிகாரத்தில் பங்கு கோரும் கோரிக்கைகள் எழுந்தன.

இதற்கிடையே மராட்டியம் போன்ற பகுதிகளில் தலித் விழிப்புணர்வு ஏற்பட்டது. ஜோதிராவ் புலேவைத் தொடர்ந்து தலித் கண்ணோட்டம் நாடு முழுவதும் உருவானது. தொடர்ந்து 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்,  20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மராட்டியம், தமிழகம் போன்ற பகுதிகளில் பிராமணல்லாதோர் இயக்கம் உருவா னது. இதன்மூலம் காலனிவாதிகளிடம் பெரும்சலுகைகளைப் பெற முடிந்தது. புதிய பதவிகள் பெற்றதுடன் புதிய தொழில்துறைகளிலும் ஈடுபட்டனர். இந்திய தொழில்மயமாக்கத்தில் இவர்கள் பங்கு உறுதிப் படுத்தப்பட்டது. அத்துடன் தொடர்ந்த சீர்திருத்த இயக்கங்கள் மூலம் பெற்ற செல்வாக்கைக் கொண்டு அவர்கள் விடுதலை இந்தியாவிலும் அரசியல் பொருளாதாரச் செல்வாக்கு பெற்ற புதிய சக்திகளாக உயர்ந்தனர் என்கிறார். அதேசமயம், ஏற்கனவே கொழுத்த நிலை யில் இருந்த நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொள்வதையே இந்திய முதலாளித்துவம் விரும்பியதையும், நவீனமயமாக்கலால் தங்களுக்கும் மேலும் லாபம்தான் என்பதால் நிலப்பிரபுத்துவ பிற் போக்காளர்கள் அந்த சமரசத்தை (இன்றுவரை) ஏற்றுக் கொண்டுள் ளதையும் அவர் சரியாகச்  சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலை பெற்ற இந்தியாவில் நவீனப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. நெசவு, தோல், கயிறு, கள் இறக்குதல் போன்ற பாரம்பரியத் தொழில்கள் நசிவடைந்தன. ஒதுக்கப்பட்ட பல சாதிகளைச் சார்ந்த கோடிக்கணக்கானோர்  இதனால் நலிவடைந்தனர். அதேநேரத்தில் பசுமைப்புரட்சி போன்ற திட்டங்கள் நிலவுடமைச் சாதிகளின் அதிகாரத்தை உயர்த்துவதில் முடிவடைந்தது. இதனால் ஏராளமானவர்கள் நிலமிழந்தவர்களாக வும், பாரம்பரிய வாழ்வுரிமைகளை இழந்தவர்களாகவும் ஆயினர். அதேநேரத்தில் நிலவுடமையாளர்களிடம் உபரி குவிந்ததுடன், பாரம்பரிய கிராமத் தன்னிறைவுப் பொருளாதாரத் தன்மைகளை அழித்து, கிராமப் பொருளாதாரத்தை வணிகக் கலாச்சாரமாக்கியது.

இக்காலகட்டத்திற்குள் பார்ப்பனர்களும், இரு பிறப்பினரும் நகரங் களுக்குக் குடிபெயர்ந்தனர். கிராமங்கள் முற்றிலும்  புதிய ஆதிக்க சாதிகளின் (பிற்படுத்தப்பட்டவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள்) கீழ் வந்தன. அரசின் வளர்ச்சித் திட்டங்களில் எந்தவிதமான (சமூகப்) பாதுகாப்புக்கூறுகளும் பின்பற்றப்படாததால் அவற்றால் தலித்தல் லாத சாதிகள் மட்டுமே பாரம்பரிய தன்னிறைவுக் கிராம முறைகளின் அனைத்துப் பலன்களையும் அடைந்து வளர்ந்தன என்கிறார். பொருளாதார பலம் பெற்ற நிலஉடமைச் சூத்திரசாதிகள் அரசியல் ரீதி யாகவும் தம் சாதி மக்களை அணிதிரட்டும் வல்லமை பெற்றன. சிறிய சாதிகள்கூட தமது விகிதாச்சாரத்துக்கு அதிகமான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறும் நிலை உருவாகியதையும் சுட்டிக்காட்டுகிறார். பலநிலைகளில் அவர்கள் தலித்துகளின் பொரு ளாதார நிலையுடன் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் உள்ள னர்.எனினும் அவர்கள் நில உடமைச் சாதிகளுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளதால், அவர்களை சமூகரீதியாக நலிவடைந்த தலித் மக்களின் பொருளாதார நிலைக்குள் இணைக்க முடியாது என்கிறார். தலித்துகள், பிற்பட்ட, இதர பிற்பட்ட மக்கள்திரள் ஒன்றிணைய வேண் டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அது சாதி அடிப்படையில் இல்லாமல் வர்க்க அடிப்படையில் அமைய வேண்டும் என்கிறார். (இதற்கு உதாரணமாக தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் வர்க்கரீதியாக அணி திரண்டதைச் சுட்டிக் காட்டமுடியும். ஆனால், அவர் அவ்வாறு சுட்டிக்காட்டவில்லை.)  சமூகங்கள் சாதியுணர்வுடன் நீடிக்கும்வரை இதுபோன்ற இணைப்புப் போராட்டங்களால் சமூக சமத்துவம் ஏற்பட வாய்ப்பில்லை.

தலித் அல்லாத, பார்ப்பனரல்லாத சாதிகளுக்குள் சாதிக் கலப்புத் திருமணங்கள் இக்காலத்தில் பரவலாகக் காணப்பட்ட போதும், இன்னமும் தலித் சமூகங்கள், தலித்தல்லாத, பார்ப்பனரல்லாத சாதிகள் இடையேயான திருமணங்கள் அரிதாக இருக்கிறது. அவர்கள் இன்னமும் சமூகரீதியாக விலக்கப்பட்டுள்ளனர். நிலப்பிரபுத்துவ பிற்போக்காளர்களுடன் இந்திய அரசு செய்து கொண்ட சமரசத்தின் விளைவாகவே இச்சமூகப்படிநிலை நீக்கப்படவில்லை. இதனால் புதிய பொருளாதார வலிமையும், அரசியல் செல்வாக்கும் பெற்று வளர்ந்து வரும் தலித்தல்லாத, பார்ப்பனரல்லாத நில உடமைச் சாதி கள் சமூக ஒதுக்கலைத் தொடர எந்த எல்லைகளையும் மீறத் தயாரா கும் துணிச்சலோடு உள்ளனர். இதுவே கீழ்வெண்மணி முதல் கயர் லாஞ்சி வரை தலித் படுகொலைகள் தொடரத் தைரியமளித்துள்ளது. இருந்தபோதிலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் எப்படி காட்டுமிராண்டிகளாக நடந்துகொள்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. கயர்லாஞ்சி படுகொலையில் ஈடுபட்ட ஆதிக்கசாதிகள் பெரிய அளவிலான மிராசுதார்கள் கூட இல்லை. சிறிய அளவிலான விவசாயிகள் தாம். அதுவும் இந்த பண்டாரா மாவட்டம் விவசாயிகள் தற்கொலைக்குப் புகழ்பெற்ற விதர்பா பகுதியில் உள்ளது. கடன்சுமை தாளாது தற்கொலை செய்தோரில் அனைத்து சாதிகளும் உள்ளனர். ஆனால், போட்மாங்கேயின் 17 வயது மகள் பிரியங்காவின் பெண்குறியில் வண்டியில் மாட்டைப் பூட்டப் பயன்படுத் தும் கம்பினை நுழைத்து சித்ரவதை செய்ததாக உண்மை அறியும்குழு கூறியுள்ளது. உள்ளூர் பாரதிய சனதா கட்சித் தலைவர் ஒருவர் பிரியங்கா உயிரிழந்த பின்னரும் பொதுமக்கள் முன்னிலையில் வன்புணர்ச்சியில் ஈடு பட்டுள்ளார். இதேபோன்று தமிழ்நாட் டில் திண்ணியம் கிராமத்தில் தலித்துகள் வாயில் மலம் திணிக்கப்பட்டது.

இக்கொடுமைகளைச் செய்யும் துணிச் சல் ஆதிக்க சக்திகளுக்கு எவ்வாறு ஏற் பட்டது என்ற கேள்வியை எழுப்பும் டெல்டும்டே, தான் செய்வது அனைத் தும் சரி என்ற எண்ணமும், அதற்குப் பக்கபலமாக மதரீதியாகவும் (மநுவின் வர்ணாசிரம தர்மம்), பண்பாடு, மரபுரீதியாகவும் தாம் மேலானவர்கள் என்ற மமதையும் இவர்களிடம் உள்ளது. அத்துடன் தற்கால அரசியல் மேலாதிக்கம் ஆகியவையும் இவற்றுக்கு ஊற்றுக்கண்ணாகக் உள்ளன என்கிறார். தலித்துகள் கீழானவர்கள், அவர்களுக்கு என்ன தண்டனையும் கொடுக்க தமக்கு உரிமை உள்ளது. தாம் தண்டிக்கா விட்டால் அவர்கள் தம்மைத் தண்டித்துவிடுவர் என்ற கண்ணோட் டத்தை இவர்கள் வெகுஇயல்பாகவே கொண்டுள்ளனர் என்கிறார். இதனை தலித்துகளும் தம்மை அறியாமல் ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். இதனாலேயே தம் மீது திணிக்கப்படும் வன்முறைகள் குறித்து புகார் அளிக்க தலித் மக்கள் அஞ்சுகின்றனர் என்கிறார். இவை அனைத்தையும்விட நீதி அளிக்கும் முறை தலித்துகளுக்கு எதிராகவே செயல்படுவதையும் தெளிவுபடுத்துகிறார். தலித்துகள் தம் மீதான தாக்குதல்கள் குறித்து காவல்நிலையங்களில் புகார் அளிக் கும் நிலைமைகூட சுதந்திரமாக்கப்படவில்லை. புகார் ஏற்கப்பட்டாலும் அதன் பிந்தைய விசாரணைகள் தலித்துகளை மிரட்டுவதாக உள்ளது. வழக்குகளில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்கள்கூட தலித் மக்கள் ஆதரவாளராகவோ, தலித் கண்ணோட்டம் கொண்டவரா கவோ இருப்பதில்லை. இறுதியாக வழக்கு  இழுத்தடிக்கப்பட்டு நீதி தாமதமாக்கப்படுகிறது. இது ஆதிக்க சக்திகளுக்கு சாதகமாகவே முடிகிறது என்று கூறும் டெல்டும்டே தேசிய குற்றப்புள்ளிவிவரங்க ளில் இருந்து ஏராளமான தகவல்களை வழங்குகிறார். எனவே இந்திய சமூகம் முழுவதும் புரையோடியுள்ள சமூகப் படிநிலை ஆதிக்க மனோபாவம் அகலாமல் இது அகலாது. ஏனெனில், இதை எதிர்த்து பலாத்காரரீதியில் போராடும் வலிமை தலித்துகளிடம் இல்லை.

சமூக, பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் எண்ணிக்கை அளவிலும் குறைவானவர்களாக உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். நிலத்தினைத் தேசியமயமாக்குவதில் இப்பிரச்சனைக்குத் தீர்வு இணைந்துள்ளது. அதை உணர்ந்ததால்தான் ஒப்புக்கு நிலச்சீர்திருத் தம் என்பதைவிட, நில தேசியமயமாக்கம் மிக முக்கியத்துவம் வாய்ந் தது என அம்பேத்கர் வலியுறுத்தினார். இதனை மேற்கொள்ள ஆட்சியில் நிபந்தனையற்ற புரட்சி  ஏற்படவேண்டும். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமைகள் சென்றுசேர வேண்டு மானால், உண்மையான ஜனநாயக நிறுவனங்கள் அமைத்து  அவற்றை ஆளும் வர்க்கம் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் இப்படியான நிலை உருவாகியிருக்காது. ஆனால், உண்மையில் எந்தவிதமான நிர்வாகப் புரட்சியையும் மேற்கொள்ளும் நிலையில் அரசு இல்லை. இந்திய அரசு நிர்வாகிகள் அதாவது மத்திய தர வர்க்க அதிகாரிகள் முதலாளித்துவ அமைப்பைவிட பிற்போக்கு விசுவாசிகளாக உள்ளனர். இன்று  தலித் உரிமைகளைப் பாதுகாக்கப் பல சட்டங்களும், அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ள போதும் அவர்கள் அதைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதில்லை. விடுதலையால் தலித்துகள் எதையும் அடையவில்லை என்றும் சொல்ல முடியாது. வழங்கப்பட்ட பாதுகாப்பு ஒருசில தலித்துகளுக்கு சென்றுசேர்ந்துள்ளது. ஆனால், சாதியப் படிநிலை மாறவில்லை. மாறாக சாதிகள் பெருகிவருகின்றன.

விடுதலை இந்தியாவின் தொடக்க ஆண்டுகள் சாதிய சமத்துவத்தில் குறிப்பிட்ட முன்னேற்றம் அடைந்தபோதும், குறிப்பிட்ட தனிநபர்கள் மட்டுமே வளர்ச்சியின் பலன்களை அனுபவிக்கும் நிலைமைகள் மேலும், மேலும் உருவா னதைத் தொடர்ந்து அதில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலைமை கள் பழையபடி உள்சாதிகளை உருவாக்குவதிலும், உள் சாதிப் புனிதங்களிலும் சிக்கத் தொடங்கியுள்ளது. ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களுக்குள்ளேயே உள்சாதி பெருமை பேசும் அவல நிலைக்கு சமூகம் தாழ்ந்துள்ளது. புதிய சமுதாய நிலைகளில் பார்ப்பனியத்துக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் என்ற அம்பேத் கரிய கண்ணோட்டம் அகன்ற நிலையில், முக்கியமான மகர் சாதியில் கூட உள்சாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு தங்களுக்குள் உயர்வு- தாழ்வு பார்க்கும் நிலை தோன்றியுள்ளது. இச்சூழ்நிலையில் கயர்லாஞ்சிகள் முக்கியத்துவம் வாய்ந்த அபாய எச்சரிக்கைகள் என்று டெல்டும்டே வருத்தத்துடன் முன்னறிவித்திருக்கிறார்.

- அப்பணசாமி