- எஸ்.ஜான்பால்.
பஸ்களில் மட்டுமே பயணிக்கிற வைப்பமைந்தவனுக்கு காரில் பயணிக்கிற அனுபவம் அலாதியானது.
அதுவும் முன்னிருக்கையில் ஓட்டுனருக்கு அருகமையில் அமர்ந்து கண்ணாடி கதவை இறக்கி விட்டு கதவில் இடது கையை வைத்து கொண்டு, உலகை பார்ப்பதில் ஒரு சுகம்.
வேலை பார்க்கும் நிறுவனத்தின் எம்.டி.யுடன் பிசினஸ் டூர் முடித்த இரவில் கோயம்பதூரிலிருந்து அப்படி ஒரு தொனியில் தான் திரும்பி கொண்டிருந்தேன்.
மதுரையை நெருங்க ஒரு பாலத்தின் அருகில் போக்குவரத்து இடையூறு காரணமாக வண்டி மெதுவாக நகர துவங்கியது.
வரிசையாக பேருந்துகள் அணிவகுத்து நிற்க, பயணிகள் அனைவரும் கண்ணயர்ந்து உறக்கத்தில் இருந்தனர்.
வாகன ஓட்டிகள் சிலர் போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்ட ஆத்திரத்தில் யார் மீதோ காட்டப்பட வேண்டிய கோபத்தை இயலாமையின் வெளிப்பாடாய் யார் மீதோ காட்டி கொண்டிருந்தனர்.
சாலையின் போலீசார் நள்ளிரவில் நடுரோட்டில் நிற்கின்ற ஆத்திரத்தில் இருந்தனர்.
ஒரு இடத்தில் ரோட்டின் ஓரமாக தமிழக அரசின் அதி வேக பேருந்து ஒன்று பழுதடைந்து நிற்கிறது.
அந்த பேருந்தில் வந்த பயணிகள் அடுத்து வருகிற அரசு பேருந்தில் செல்ல வேண்டிய கட்டாயத்தில். நடத்துனர் பயணிகளை வேறு பேருந்தில் ஏற்றி விட்டு வாகனத்தை சரிசெய்ய வேண்டிய தேவையோடு ரோட்டின் மீது விழி வைத்து காத்திருக்கிறார். ஒரு தாயின் அரவணைப்பில் பேருந்தில் உறங்கி வந்த குழந்தை கண்விழித்து கடந்து போகிற வாகனங்களை பார்த்து கொண்டிருந்தது. ஏனோ என்னை பார்த்ததும் சிரித்தது. யாரென்றே தெரிய விட்டாலும் குழந்தைகளின் சிரிப்பில் மாத்திரம் நாம் நம்மை இழந்து விடுகிறோம். பதிலாக நானும் சிரித்து கை அசைத்து விடை பெற்றேன்.
வாகனம் மதுரையை கடக்கவும் மழை வரத் துவங்கவும் சரியாக இருந்தது.
கண்ணாடிகளை ஏற்றிவிட்டு சீட்டில் சாய்ந்து கண் மூடிய கணத்தில் கண்ணுக்குள் அந்த குழந்தை மறுபடியும் சிரித்தது.
ஏனோ அதற்க்கு பிறகு தூக்கம் வரவில்லை...

No comments:
Post a Comment