Friday, January 27, 2012

தானே வந்து சூறையாடிய காற்று...


-எஸ்.ஜி.ரமேஷ்பாபு
கடலுர் மாவட்ட மக்கள் கடந்த எட்டு ஆண்டுகளில் சந்தித்த இரண்டாவது பெரிய பேரழிவு இது. ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவம் உயிர்களை பறித்து, கடல் சார்ந்த நெய்தல் நிலத்தை மொத்தமாய் உலுக்கிச் சென்றது. இப்போது அடித்த தானே புயல் இன்னும் பல பத்தாண்டுக்கு பிறகும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திச் சென் றுள்ளது. ஒப்பீட்டளவில் சொல்ல வேண்டு மெனில் இது பல ஆழிப்பேரலைகளின் தாக் கத்தை ஒரே சூறைக்காற்று ஏற்படுத்திய பேர ழிவு. பறவைகள் அற்ற உலகை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியாதுதானே. ஆனால் மூன்று தினங்கள் கடலூரை சுற்றி எங்கும் காக்கைகள் உள்ளிட்ட பறவைகள் இல்லாத நிசப்தம் நிலவியது. சாய்ந்த மின் கம்பங்கள், அலைபேசி கோபுரங்கள், ஆயிரமா யிரமாய் வேரோடு சாய்க்கப்பட்ட மரங்கள், ஒரு இலைகூட இல்லாமல் குச்சிகளாய் நிற்கும் மரங்கள், அலைக்கழிக்கப்பட்டு வீசி யெறியப்பட்ட ஐந்து லட்சம் குடிசை வீடுகள், அறுத்தெறியப்பட்ட வலைகள், தொலைந்து போன படகுகள்,50 ஆயிரம் ஏக்கர் வேரோடு பிடுங்கப்பட்ட முந்திரி மரங்கள், பல்லாயிரம் வீழ்ந்த கணக்கில் மா, பலா, தென்னை மரங் கள், பலவகையான காய்கறிகள், பல்லாயிரம் ஏக்கர் கரும்புத் தோட்டங்கள், துடைத்தெறி யப்பட்ட நெற் வயல்கள், நிவாரணம் கிடைக் காத மக்கள் என தனது உருவத்தை தொலைத்து நிற்கிறது கடலூர் மாவட்டம்.

தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத ஒரு சிறப்பு தென்னார்காடு மாவட் டத்திற்கு உண்டு. இங்குதான் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்ற நான்கு திணைக்குரிய நிலங்களும் உள்ளன. பாலை மட்டும் இல்லாமல் இருந்தது. அதையும் இந்த சூறைக்காற்று உண்டாக்கிவிட்டது. முல்லை யும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து, நல் லியல்பு இழந்து நடும்பு துயர் உறுத்து, பாலை என்பதோர் படிமம் கொள்ளும் என்ற சிலப் பதிகார வரிகளுக்கு ஏற்ப பல இடங்கள் இப் போது பாலை நிலங்களாக காட்சியளிக்கின் றன. சூறைக்காற்று கடந்து சென்று கிட்டத் தட்ட 25 நாட்களை கடந்து இன்னும் சீர்செய் யப்படாத மின்வசதியும், குடிநீர் இல்லாமல் பல கிராமங்களில் மக்கள் அலைவது தானே புயலின் தீவிரத்தை காட்டும். தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாய் மறியல் செய்து வருகின் றனர். அரசு தினமும் 80 சதவீத நிவாரண பணிகள் முடிந்துவிட்டதாக ஊடகங்கள் மூலமாக உடுக்கை அடித்து வருகிறது. உண்மை அதுவல்ல. வீடுகளுக்கு கொடுக் கும் நிவாரண தொகைகளில் ஆளும் கட்சி யினர் அடிக்கும் கொள்ளையை கண்டித்தும் போராட்டங்கள் நடக்கிறது. அறிவித்துள்ள சொற்பதொகைக் கூட மக்களுக்கு சரியாக கிடைக்கவில்லை. வீடுகளை மறுசீரமைப் புச் செய்ய ஆகும் கூலிக்கு கூட போதாத தொகைக்கே இந்த நிலை. 100 சதவீதம் மின் சாரம் சீர்செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்த தினத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் போராட்டம் நடத்தின.

அரசு முறையான கணக்கெடுப்பைக்கூட இன்னும் சரியாக செய்து முடிக்கவில்லை. மிக எளிதாக கணக்கிடக்கூடிய, கடற்கரை ஓரத்தில் வாழும் மீனவ மக்களின் பாதிப்பைக் கூட இன்னும் கணக்கிடவில்லை. கடலூர் மாவட்டத்தில் த.சோ.பேட்டை துவங்கி நல்ல வாடு வரை உள்ள 49 மீனவ கிராமங்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. இங்குள்ள சுமார் ஒரு லட்சம் மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்கின்றனர். இவர்களுக்கு சொந்த மான குடிசைகள், வீடுகள், மரங்கள், சமு தாயக் கூடங்கள், வலைகள், கட்டுமரங்கள், விசைப்படகுகள், கண்ணாடி இழை படகுகள் போன்றவை கடுமையான சேதமடைந்துள் ளன. நூற்றுக்கணக்கான கட்டுமரங்களும், கண்ணாடி இழை படகுகளும் தொலைந்து விட்டன. ஆனால் அரசாங்கம் 82 விசைபடகு கள், 270 கண்ணாடி இழை படகுகளும், 729 கட்டுமரங்கள் மட்டுமே சேதமடைந்ததாக அறிவித்துள்ளது. இந்த கணக்கு முழுமை யானது அல்ல. உண்மைக்கும் அரசின் கணக் கிற்கும் தூரம் அதிகம் உள்ளது.

இன்னும் நிலம் சார்ந்த அழிவு குறித்த கணக்கெடுப்பு முழுமையாக நடைபெற வில்லை. கிராம நிர்வாக அதிகாரிகள் பற்றாக் குறை பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி உள் ளது. திட்டமிட்ட மீட்பு பணிகள் நடைபெறு வதில், மக்களுக்கு எவையெவை உடனடி தேவைகள் என்பதைக்கூட அரசால் திட்ட மிடமுடியவில்லை என்பதுதான் பெரும் சோகம். அனேகமாக 70 சதமான குடிசை களில் மாணவர்களின் நோட்டு புத்தகங்கள், சான்றிதழ்கள், ரேசன் அட்டை, சமையல் எரிவாயு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை இல்லை. ஒரே மாதிரி யான பாதிப்புகளை சந்தித்த புதுச்சேரியை பேரிடர் பகுதியாக அறிவிக்கும் மத்திய அரசு, கடலூர் மாவட்டத்தை புறக்கணிக்கிறது. தமிழக அரசும் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க மறுக்கிறது.

பேரிடர் மாவட்டமாக அறிவித்தால் வரிச் சலுகைகள், கல்விச்சலுகைகள், விவசாயக் கடன் தள்ளுபடிகள், அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, மீண்டும் பேரிடர் வரும் முன் காக் கும் நடவடிக்கைகள், அதுசார்ந்த கட்டுமா னங்கள் என அரசிற்கு செலவாகும் என அஞ் சுவதால் இந்த அறிவிப்பை வெளியிடாமல் இருக்கிறார்கள் போலும். மத்திய அரசு இந்திய பெருமுதலாளிகளுக்கு ஒதுக்கும் வரிச் சலுகையில் ஒரு பருக்கைதான் இதற்கு தேவை. மத்திய அரசின் பேரிடர் நிதியில் ஒரு சிறு பகுதி போதும், மாநில அரசு, கடந்த அரசு கட்டிய ஒரே காரணத்திற்காக கைவிடும் கட்டிடங்களின் மொத்த தொகையின் அளவு போதும் மாவட்டத்தை புனரமைக்க. இவை யெல்லாம் நடக்க வேண்டுமெனில் இம்மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

மற்றொரு பக்கம் இப்புயல் சார்ந்த வேறு விவாதங்களும் உள்ளன. ஆழிப்பேரலையின் தாக்கம் நிகழ்ந்த போது அம்மக்களுக்கு என்ன தேவை என தெரியாமலே பல தன் னார்வத்தொண்டு நிறுவனங்கள் கிடைத் ததையெல்லாம் கொடுத்தன. அரசும் அதை முறைப்படுத்த முயலவில்லை. அப்போது வந்த விமர்சனங்களை எதையும் அரசு கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இப் போதும் அப்படியே நடந்தது. புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தும் ஆர்வத்தில், என்ன கிடைக்கிறதோ அதையெல்லாம் கொடுப்பது நடந்தது. பலகிராமங்களில் முதல் ஐந்து தினங்கள் மெழுகுவர்த்தி, குழந்தை களுக்கான பால்பவுடர், உணவு, குடிநீர், கழிப்பிட வசதி ஆகியவைதான் அவசியத் தேவையாக இருந்தது.

இவைகளை சரிசெய்ய அரசு எந்திரத்தால் மிக எளிதாக முடிந்திருக்கும். ஆனால் புயல் அடித்த ஐந்தாம் நாள் 80 தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அழைத்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இதன் மூலம் ஏதாவது கிடைக்குமா என ஆட்சியாளர்கள் விரும்பி யிருக்கலாம். அதே நேரம் மக்கள் பிரதிநிதிகள், அனைத்துக்கட்சியினரை அழைத்து நிவாரணப் பணிகளை நேர்மையாக நடத்திட என்ன செய்வது என ஆலோசனை செய் திருக்கலாம். ஆனால் மாவட்ட நிர்வாகம் இவைகளில் அக்கறை செலுத்தவில்லை. இப்போது தமிழக அரசு, மாவட்ட ஆட்சித் தலைவரை மாற்றியுள்ளது. ஆட்சியாளர் களின் கொள்கையில் மாற்றம் இல்லாமல் ஆட்சியர்களை மாற்றி என்ன பயன் எனத் தெரியவில்லை. இப்போது வந் திருக்கும் மாவட்ட ஆட்சியர் நூற்றுக்கணக் கான கிராமங்களிலும், 90 சதமானம் விவ சாயத் திற்கு மின்சாரமே கிடைக்காத போது “கடலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் மின்சாரம் வழங் கப்பட்டுவிட்டது” என்று அறிக்கைவிட்டவர்.

நடந்திருக்கும் சேதத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரே நாளில் சூ மந்திர காளி! ஜெய் ஜக்கம்மா! மந்திரம் போட்டு மாற்றிவிட முடி யாது என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக் கிறார்கள். ஆனால் சேதத்தை குறைத்துக் காட்டுவதும், நிவாரணப் பணிகள் முழுமை யாக நடந்ததைப்போல கதையளப்பதும், கொடுக்கும் நிவாரணங்களில் கொள்ளை யடிப்பதும், இருக்கும் அரசு எந்திரத்தை சரியாக திட்டமிட்டு பயன்படுத்தாததும்தான் மக்களை கோபப்படுத்துகிறது.

புயல் அடித்த அன்று மார்க்சிஸ்ட் கட்சி யின் கடலூர் மாநாடு துவங்கவிருந்தது. பேர ணியுடன் மாநாட்டை தள்ளிவைத்து வந்தி ருந்த பிரதிநிதிகள், தங்கள் பகுதியில் உட னடியாக நிவாரணப் பணிகளை மேற் கொள்ள அனுப்பப்பட்டனர். கட்சியின் மாநிலத் தலை வர்கள் உடனடியாக மாவட்டத்தின் அனைத் துப் பகுதிகளையும் பார்வையிட்டனர். வாலி பர் சங்கம், அறிவியல் இயக்கம், மாதர் சங்கம், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், குடியிருப்போர் கூட்டமைப்பு, அரசு ஊழியர் சங்கம் போன்ற அமைப்புகளின் தலைவர்கள் வந்து பார்வையிட்டு பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். இவ் வமைப்புகளின் சார்பில் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் மக்களுக்கு வினியோகம் செய்யப் பட்டுள்ளது. இன்னும் அப்பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுகாதார பிரச்சனை களில் கவனம் செலுத்துவதும் நடக்கிறது.

மாவட்டம் முழுவதும் கிராமம் கிராமாக ஆய்வுத்தாள் மூலம் கட்சியின் தோழர்கள் சர்வே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். வட்ட தலைநகர்களில் முதல் கட்ட போராட்டம் நடந்துள்ளது. மாவட்ட நிலைமையை முழு மையாக ஆய்வு செய்து, மாவட்டம் தழுவிய போராட்டத்திற்கு திட்டமிடப்படுகிறது. கார ணம், ஒரு லட்சம் பம்பு செட்டுகள் மற்றும் காவிரிப் பாசனம், வெல்லிங்டன் ஏரி, பெரு மாள் ஏரி உள்ளிட்ட வாய்ப்புகளை பயன் படுத் தியும் ஆழ்குழாய் கிணறுகள் மூலமும் வேளாண்மையில் செழித்த மாவட்டம் இன்று பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது நிவாரணம், நிலத்தில் சாகுபடி செய்தவருக்கா அல்லது நில உடமையாளருக்கா என்றும் பிரச்சனை எழுந்துள்ளது. மற்றொன்று கடற்கரையோரத் தில் பகாசுர அனல் மின்நிலைய, எண்ணெய் சுத்திகரிப்பு கம்பெனிகள் வாங்கியுள்ள விவசாய விளைநிலங்களில் மக்கள் செய்த பயிர்கள் அழிந்துள்ளது. இங்கும் நட்டஈடு கொடுக்க முடியாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆக மக்கள் களத்தில் இறங்கி போராடினால்தான் தீர்வு என்பதை தானே புயலும் நிரூபணம் செய்துள்ளது.